எமது மூத்த உலமாக்கள் 1924 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எனும் இச்சபையினை ஆரம்பித்து வைத்தார்கள். அக்காலம் முதல் இச்சபை ஆற்றல் மிகுந்த தலை சிறந்த உலமாக்களால் வழி நடாத்திச் செல்லப்படுவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அல்லாஹ் அவர்களது வாழ்வை பொருந்திக் கொள்வானா! ஆமீன்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எனும் இச்சபை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேசப்படக் கூடிய அளவிற்கு பிரபல்யம் பெற்றதும், இச்சபையின் வழிகாட்டலையே பொது மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு பெறுமதி கிடைத்ததும், பிரிந்து பிரிந்து செயற்பட்ட குழுக்களை ஒன்று சோர்த்து இணைந்து செயல்படும் ஒரு நிலைமை உருவாக்கப்பட்டதும் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னரே என்பதை இந் நாடே அறியும். ஜம்இய்யாவின் இந்த வளர்ச்சியானது தற்பொழுது தலைமை பொறுப்பை சுமந்து நிற்கும் மதிப்பிற்குரிய தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிழ்வி முப்தி அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னரே உருவானது என்பது பகல்வானில் சூரியனின் வெளிச்சத்தைப் போல் யாராலும் மறைக்க முடியாத ஒரு உண்மையாகும்.
நான் 2004 முதல் 2007 இறுதி வரை கலந்தர் சாஹிப் மஸ்ஜிதில் கடமை புரிந்து கொண்டிருந்தேன். இக்காலப்பகுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைத்து நிர்வாக விடயங்களும் எனது பள்ளிவாயலுக்கு அருகாமையிலுள்ள ஓராபி பாஷா வீதியில் அமைந்திருக்கும் ஜம்இய்யாவின் பழைய கட்டிடத்தில் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இக்கால கட்டத்தில் நானும் அடிக்கடி ஜம்இய்யாவிற்கு செல்லும் வழக்கம் இருந்தது. எனவே நான் கண்டு அனுபவித்த சில அமானிதங்களை மக்கள் முன் வைப்பது எனது கடமையென நினைத்தவனாக இதனை எழுதுகிறேன்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து உலமாக்களும் நலன் விரும்பிகளாகவே சேவை புரிகின்றார்கள். அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளோ, வாகன வசதிகளோ ஒன்றும் வழங்கப்படுவதில்லை.
சில முன்னாள் செயலாளர்கள் சம்பளமாக பணம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்த உலமாக்கள் பதவி அந்தஸ்துகளுக்கு அல்லாமல் சமூகத்திற்காகவும் அல்லாஹ்வின் திருப்தி நாடியுமே இரவு பகலாக உழைக்கின்றார்கள். குறிப்பாக தற்போதைய எமது தலைவர் அவர்கள் எனக்கு தெரிந்த மட்டில் அவர்கள் தான் மாதாந்தம் ஜம்இய்யாவிற்கான ஒரு கொடுப்பனவையும் வழங்கிவருகிறார். தனது குடும்பத்தை விடவும் இச்சபையின் சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியவர்கள்.
அவர்கள் தலைமைப் பொறுப்பெடுத்த ஆரம்ப காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக ஜம்இய்யாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலுக்கு கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்துகொண்டிருந்தாhகள்;. அப்பொழுது அவர்களின் ஒரு குழந்தை மிகவும் கடுமையாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தலைவர் அவர்கள் கூட்டத்தை நடாத்திற் கொண்டிருக்கும் போதே குழந்தை இறையடி சேர்ந்த செய்தி அவருக்குக் கிடைந்தது. அப்பொழுதும் அவசரப்படாமல் நிதானமான முறையில் தன் காரியத்தை செவ்வனவே செய்து முடித்த பின்னரே வீடு திரும்பினார். இது போன்ற பல சம்பவங்களை என்னால் தொட்டுக் காட்ட முடியும்.
பணம், பொருள், சொகுசுகளை முன்வைத்து பதவிகைள பறித்துக் கொண்டு பொறுப்புக்களை சுமக்கும் புகழ் விரும்பிகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் சமூகப்பற்றுடனும், கவலையுடனும் பணம், சொகுசுகளை எதிர்பாராமலும் சேவைகளை புரிந்துவரும் தலைவர்கள் எம்மை விட்டும் பிரிவதென்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் ஈடுகொடுக்க முடியாத பாரிய இழப்பாகும் என்பதை என்னால் கூற முடியும்.
எனவே ஜம்இய்யாவின் பொறுப்புகளை ஏற்று நடத்துவதற்காக புதிதாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப் போகின்ற தகுதிவாய்ந்த கண்ணியத்துக்குரிய உலமாக்களிடம் பணிவாக வேண்டிக் கொள்வது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் மற்றும் குறைகள் அனைத்தும் போலியானவை. சுயநல நோக்கத்திலும் பொறாமையினாலும் அவ்வாறு செய்யப்படுகின்றது. இது ஒரு மாயை உலகம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
அடிக்கடி தலைவர்கள் மாறுவதற்கு இச்சபை ஒரு இலாபமீட்டும் கம்பனியல்ல. அரசியல் நடாத்தும் கழகமுமல்ல. திறமைகளை வெளிக் காட்டும் மைதானமுமல்ல. இது மக்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டல்களை எடுத்துக் காட்டி சுவர்க்கத்துக்கு வழிகாட்டும் பணியைச் செய்யும் மேன்மை மிக்க இடமாகும். நபி; ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் கலீபாக்களும் மரணிக்கும் வரை முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டிக் கொண்டும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் இருந்தார்கள்.
தற்போதைய தலைவர் எம்.ஜ.எம் முப்தி ரிழ்வி அவர்கள் தன்நம்பிக்கையும், தைரியமும், சிறந்த ஆளுமையும் கொண்டவர். என்றாலும் சில அறிவீனர்களின் விமர்சனங்கள் அவரது மனதைப் பாதித்திருக்கலாம். எனவே அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் நல்லாலோசனைகளையும் கூறி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் சேவை இந்நாட்டிற்கு இன்னும் தேவையாக இருக்கின்றது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்வோ நிறுவனத்தின் ஸ்தாபகரான தொழிலதிபர் ஹாஜி ரபீக் அவர்கள் முப்தி ரழ்வி இலங்கைக்குரியவர் மட்டுமல்ல அவர் முழு உலகத்திற்குமுரியவர். எனவே அவரை இலங்கையில் மாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியதையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர்களின் பங்களிப்பு சர்வதேச மட்டத்தில் பரவியிருக்கின்றது. இந்தியாவில் தழிழ் நாட்டில் கூட அங்கிருக்கும் உலமாக்களை ஒன்று சேர்ப்பதில் பாரிய பங்களிப்பைச் செய்தவர். இவ்வாறு சர்வதேசமே அவரை நாடி இருக்கும் போது நாம் அவரது பெறுமதியைப் புரிந்து கொள்ளாமல் விட்டு விடுவது தனக்குத் தனே அநீதி இழைத்துக் கொள்வது போன்றாகும். முற்றத்து மல்லிகை வாசனை இல்லை என்பார்கள்.
எனவே இச்சபையில் இன்னும் சில புதிய முகங்களை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் வழிகாட்டலிலே கொண்டு செல்ல அனைவரும் முன்வாருங்கள். சந்தர்ப்பங்களை கை நழுவ விட்டு விட்டு கைசேதப்படுவதில் அர்த்தமில்லை.
வல்ல நாயன் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். முப்தி ரிழ்வி அவர்களின் வாழ்வை நற்பணி செய்வதில் நீடித்து வைப்பானாக!
அஷ்-ஷைக் என்.எம். அஸ்மீர் உஸ்வி – புத்தளம்
No comments:
Post a Comment