முஸ்லிம் சமூகமும் - ஜம்மியத்துல் உலமாவின் வகிபாகமும் - sonakar.com

Post Top Ad

Saturday, 27 July 2019

முஸ்லிம் சமூகமும் - ஜம்மியத்துல் உலமாவின் வகிபாகமும்



நேற்று ஒருவன், இன்று ஒருவன், நாளை இன்னொருவன் என யார் வேண்டுமானாலும் மிக இலகுவாக உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய நிலைக்கு இன்றைய முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டைப் பெறும் நுட்பம் அறிந்த பேரினவாதிகள் அவ்வப்போது இச்சமூகத்தைக் கிளறிவிடும் நடவக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.



அதனைத் தலைமை தாங்கி நடாத்திய ஞானசார தற்போது வேறு நிலைக்குச் சென்று முஸ்லிம் சமூகம் தொடர்பில் கற்றுப் பாண்டித்தியம் பெற்ற அளவில் இச்சமூகம் பற்றிய உள் விவகாரங்களை மிகத் தெளிவாக முன் வைத்து தொடராக ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உணர்வு மேலோங்கிய கொதி நிலைக்கு இச்சமூகம் தள்ளப்பட்டு ஏழு வருடங்களே கடந்துள்ளன. அதே ஏழு வருடங்களாக சமூகத்தின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் பிரதான அமைப்பு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்றால் மிகையாகாது.

அமைப்பின் தலைவரான அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீதான தனி நபர் விமர்சனங்களும் இதில் உள்ளடக்கப்படும் அதேவேளை இச்சமூகத்தின் மீதான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கடமைகளும்  வகிபாகங்களும் குறித்த வெளிப்பார்வை எவ்வாறு இருக்கிறது என்பதையே இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கொதி நிலையிலேயே வாழப் பழகிக் கொண்டுள்ளதால், சில வேளைகளில் எந்த ஒரு விடயத்தையும் ஆழமாக அவதானித்து அறிந்து கொள்வதை விட எழுந்தமானமாக ஏசவும் - புகழவும் - பாதுகாக்கவும் - பழி சொல்லவும் இச்சமூகம் முந்திக் கொள்கிறது. காலத்தின் தேவை கருதி அவ்வாறான முடிவுகளுக்கு அப்பால், சில யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளும் தேவை சமூகத்துக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கூட இருக்கிறது.

முஸ்லிமாகவும் - முற்போக்காகவும் இருத்தல் மிகவும் கடினமான ஒரு காரியமாக உணரப்படுகின்ற இக்காலத்திலிருந்து சற்றே பின் நோக்கி நகர்ந்தால், குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் சமூகவியலின் பாரம்பரியம், வாழ்வியலை மார்க்க அறிஞர்களிடமிருந்தே கற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. இஸ்லாமிய மார்க்க நெறியானது முழுமையாக அல்-குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்களே தம் வழிகாட்டிகள் என்பதில் எமது முன்னோர் தெளிவாக இருந்தார்கள். ஆதலால் தான், உலமாக்கள் என அறியப்படும் மார்க்க அறிஞர்களின் முன் கால் மடித்து அமர்ந்து பாடங் கற்றுக்கொள்ளும் சமூகப் பாரம்பரியம் கொண்டவர்களாக நாம் இன்றும் இருக்கிறோம்.

நவீன தொழிநுட்ப உலகின் ஆளுமை ஒவ்வொரு தனி நபரையும் சென்றடைந்துள்ள இன்றைய 21ம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் முஸ்லிம் சமூக வாழ்வியல் சமாச்சாரங்கள் (தற்காலத்தோடு ஒப்பிடுகையில்) குறுகிய வட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டதாகவே இருந்தது. அந்த வட்டத்திலிருந்தும் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையிலேயே இலங்கை முஸ்லிம் சமூகம் தம்மைப் பல கூறுகளாகப் பிரித்துக் கொண்டுள்ளது. சுன்னத் வல் ஜமாத்தினர் அல்லது தரீக்கத்தைச் சார்ந்தவர்கள், தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி அல்லது இஹ்வான்கள், தௌஹீதின் தூய வடிவத்தைப் பின்பற்றுவோர் எனப் பிரித்துக்கொள்வோர் என பல கூறுகள் இதில் அடங்குகிறது.

இன்னும் கூட, அரசியலுக்கு ஈடாக சமூக விவகாரங்களில் ஆளுமை செலுத்தும் சக்திகளாக மார்க்கத் தலைமகள் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஐம்பது வருடத்துக்கு முன்னிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் தற்காலத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கி;ன்றனவே தவிர ஒவ்வொரு பிரிவைப் பின்பற்றும் நபர்களும் தம் சமய வழி காட்டிகளாக அந்தந்த பிரிவின் மார்க்க அறிஞர்களை அல்லது அவ்வாறு நம்பப்படுபவர்களை நாடுகிறார்கள்.

இஸ்லாம் என்றால் என்ன? எனும் கேள்விக்கு மிக இலகுவாகவும் அழகாகவும் விளக்கம் கொடுத்திருந்த, இதுவரை நான் கண்ட இடங்களில் சிறந்த இடம், ஸ்கொட்லாந்து, க்ளஸ்கோ (Glasgow)  நகரில் உள்ள சமய நூதனசாலை (Religious Museum) ஆகும். அங்கு மிக இலகுவாக Ismal = Submission to God என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தாலும் அதற்கான வழிமுறை அல்லது அணுகுமுறையில் வேறுபட்டு, பிளவுண்டு நாளாந்தம் சிதைந்து கொண்டிருப்பதை கண்டு கொண்டிருக்கிறோம்.

1919ம் வருடம் இந்தியாவிலும் 1923ம் வருடம் தென்னாபிரிக்காவிலும் உருவான மார்க்கத் தலைமைத்துவ அமைப்புகளைத் தழுவி 1924ம் ஆண்டு இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கான ஆன்மீக வழிகாட்டலை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்துச் செயற்படும் நோக்கில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உருவானதாக அவ்வமைப்பின் சுய விபரம் தெரிவிக்கிறது.

தற்காலத்தில் பிறைக் குழு, பத்வாக் குழு, கல்விக் குழு உட்பட ஆகக்குறைந்தது 15 உப குழுக்களுடன் அவ்வமைப்பு இயங்கி வருவதாக உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவிக்கின்ற அதேவேளை, பல உப குழுக்களின் செயற்பாடுகளை ஊடக ரீதியாக தொடர்ந்து அறிந்தும் வந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டிய நிலையிலேயே ஜம்மியா மீதான விமர்சனங்களும் சாடல்களும் தினசரி வெளிவந்து கொண்டிருக்கின்றன எனும் அடிப்படையில் இவ்வமைப்பின் ஆரம்ப கால நோக்கமும் தற்கால தேவைக்கேற்ப செயற்பாடும் பொருந்திச் செல்கின்றனவா? எனும் இயல்புவாதம் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகிறது.

முஸ்லிம் சமூக புத்திஜீவிகளும் - மார்க்க அறிஞர்களும் கருத்தியல் ரீதியாக மோதிக் கொள்வது வரலாறு நெடுகிலும் நடந்தேறியிருக்கிறது. பேரறிஞர் எம்.சி சித்திலெப்பை காலத்தில், பெண்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அவர் பணியாற்றியதன் பின்னணியில் இது பகிரங்க போராட்டமாக மாறியிருந்ததோடு 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஹஜ்ஜுக்கு சென்று திரும்பும் போது புகைப்படங்கள் எடுத்து வந்தமைக்காக ஹாஜி இஸ்மாயில் எபென்டி 'குப்ரில்' ஈடுபட்டதாக பத்வா வழங்கப்பட்ட வரலாறும் உண்டு.

தொலைக்காட்சி பெட்டியை - ஷைத்தான் பெட்டி, பேஸ்புக்கை பித்னா புக் என பத்வா கொடுத்த காலங்கள் கூட கடந்து, மறந்து, இவற்றில் காட்சியளிக்காத மார்க்க அறிஞர்களும் இல்லையெனும் அளவுக்கு தற்போது காலம் மாறியிருக்கிறது. எனவே, இயல்பாகவே சமூக சிந்தனாவாதத்திலும் பரிணாம வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவது சாதாரணம். பண்டைய காலத்தில் நிலவிய பல்வேறு நம்பிக்கைகள் அல்லது மார்க்கம் எனும் பெயரில் புகட்டப்பட்ட பல்வேறு விடயங்கள் தற்காலத்தில் மாற்றம் பெற்றிருக்கின்றன. அவை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இரத்ததானம் பற்றிய அன்றைய - இன்றைய நிலைப்பாடுகள் இதற்கு நல்ல உதாரணமாகும்.

இருப்பினும், தம் சமூகவியலின் பிரதிபலிப்பினை, சுய சிந்தனைக்கு அப்பால் மார்க்கத் தலைமைகளிடம் பொறுப்பு சாட்டிவிட்டு ஒதுங்கியிருக்கும் வழக்கம் நான் சார்ந்த தலைமுறையிடம் கூட இன்னும் இருக்கிறது என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. தற்சமயம் சூடாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் விவாக-விவாகரத்து விடயத்தின் அடி-நுனி அல்லது எதுவித விபரமும் அறிய விரும்பாத என் பள்ளிக்கால தோழர் ஒருவர் எது எப்படிப்போனாலும் ஜம்மியாவின் நிலைப்பாட்டுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நேற்றைய தினம் என்னோடான கருத்துப் பரிமாறலின் போது தெரிவித்திருந்தது இதற்குப் பொருத்தமான மேற்கோளாகும்.

இப்பேற்பட்ட ஒரு சமூகத்தின் வழி காட்டலின் வரையறை அல்லது விரிவு மற்றும் அது சார்ந்த வகி பாகம் சரிவர பூர்த்தி செய்யப்படுகிறதா? என்ற கேள்வியுடனேயே சமூக மட்டத்தில் நிலவும் குற்றச்சாட்டுகள் அல்லது விமர்சனங்கள் அணுகப்படவும் வேண்டும். எனவே, இங்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்ற அமைப்பின் செயற்பாடுகள் சமூகத்தை எவ்வாறு சென்றடைகிறது? அதன் மீதான மக்கள் பார்வை எவ்வாறு இருக்கும்? என்ற அலசலும் மீளாய்வும் கூடத் தேவைப்படுகிறது.

கட்டமைப்பு ரீதியாக இலங்கையின் மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் (Islamic Scholars) சபையாகக் காட்சியளிக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தற்கால நடைமுறைக்கு ஏற்ப ஜனநாயக மயப்படுத்தப்பட வேண்டும் என்ற அறைகூவல்களும் சமூக வலைத்தளங்களில் எழுகின்றன. இங்கு கூறப்படும் ஜனநாயகம் அவ்வமைபின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் தேர்வு மீதான பார்வைகளுள் ஒரு வகையாக இருக்கிறது.

இதன் பின்னணியில், பல ஆயிரம் உலமாக்களை உறுப்பினர்களாகக் கொண்ட இவ்வமைப்பின் நிர்வாகத் தெரிவில் 100க்கும் 200க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையுள்ளோரே கலந்து கொள்வதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டும் ஒன்று.

இன்னொரு புறமிருந்து, இவ்வமைப்பு குறித்த ஒரு கொள்கை இயக்கத்தின் பிடியில் இருப்பதான குற்றச்சாட்டும், பிறிதொரு கொள்கை இயக்கத்தைச் சார்ந்தவர்களின் பொறுமை எல்லை மீறியுள்ளதால் ரிஸ்வி முப்தியின் மீள் நியமனம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளமையும் கண் கூடு.

இதற்கு மேலதிகமாக, ரிஸ்வி முப்தியே விரும்பினாலும் கூட அடுத்த தலைமுறைக்குத் தேவையானதொரு தலைமையை உருவாக்க அவரைச் சுற்றியுள்ளோரும் - சூழலும் இடங்கொடுக்குமா? என்றொரு கேள்வியும் உண்டு. இவற்றிற்கு பதில் காண்பதோ அல்லது விடை தேடுவதோ அவசியமில்லையென கருதுபவர்களும் கணிசமான அளவு இருப்பதனால் கேள்விகளும் - விடைகளும், விமர்சனங்களும் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அவற்றைத் தாண்டிய நிலையில் ஜம்மியாவின் சமூகம் தொடர்பான வகிபாகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட கோணத்திலும் பார்க்கப்படுகிறது. இதன் நிமித்தம் அவ்வப்போது அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றும் ஒரு அமைப்பாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பார்க்கப்படுகிறது. இப்பார்வையில் நியாயம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு எழுந்தமானமாக இல்லையென்ற பதிலைத் தர முடியுமாயினும் அந்தக் கேள்வியை நியாயப்படுத்தும் வகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயற்பாடுகள் ஆகக்குறைந்த கடந்த காலத்தில் அமைந்திருந்தது என்பதும் உண்மை.

அடிப்படையில், நவீன சமூகத்தை வழி நடாத்தும் பணியில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வகிபாகம் எவ்வாறு அமைந்திருக்கிறது? எதிர்காலத்தின் தேவை கருதிய செயற்பாடுகள் எந்த அளவில் பலனைத் தருகிறது அல்லது சவாலுக்குட்படுத்தக் கூடியது? போன்ற பல கேள்விகள் உண்டு. இப்பின்னணியில், அவ்வப்போது பிறை விவகாரத்திலும் - அரசியல் விவகாரங்களிலும் காட்சியளிக்கும் ஜம்மியத்துல் உலமாவே அளவிடப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகும். அந்தக் குறைபாட்டைத் தீர்க்காத சூழ்நிலைக்கு அவ்வமைப்பே பொறுப்பு.

நமக்காகவே விரிக்கப்பட்டிருக்கும் இப்பிரபஞ்சத்தில், 21ம் நூற்றாண்டில் வாழ்ந்தால் கூட, நமக்குத் தேவையான 'ஞானத்தின்' அளவு எது? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒவ்வொரு தனி நபரின் உரிமை சார்ந்த விடயமாகும். தலைக்கு மேல் பிறை தெரிந்தாலும் கூட இன்று பெருநாள் இல்லையென எம் மார்க்கத் தலைமை முடிவெடுத்தால், அதைப் பின்பற்றுவது நமது கடமையென எண்ணக்கூடியவர்களும், அதேவேளை, அவர்களைச் சார்ந்தவர்கள் கண்டால் தான் பிறையா? என வாதிடுபவர்களும் கலந்தே இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகம் நகர்ந்துகொண்டிருக்கிறது எனும் அடிப்படையில் இச்சமூகத்தில் நிலவும் சூழ்நிலையை சமப்படுத்த ஜம்மியா என்ன செய்கிறது? என்ற கேள்வி சமூக மட்டத்தில் நிலவுகிறது.

2009ம் வருடம் மஹிந்த ராஜபக்ச அரசு முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தி ஜெனிவா சென்று குரல் கொடுக்க ஜம்மியா எடுத்த அரசியல் முடிவினால் அப்போது முகம் சுளிக்க ஆரம்பித்த பல புத்திஜீவிகள் இன்று வரை அக்கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தகுந்த பதிலையும் தெளிவையும் இவ்வமைப்பு இன்று வரை முன் வைக்கவில்லை.

2012ல் ஹலால் சர்ச்சை உருவான போது, ராஜபக்ச குடும்பத்தில் வைத்திருக்கும் 'நம்பிக்கை' வேறு ஒரு நாட்டின் பொருளாதார வளத்தில் நேரடிக் கட்டுப்பாட்டை செலுத்த முனைவது, அதுவும் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சபை மேற்கொள்வது வேறு என பல தரப்புகள் சுட்டிக்காட்டியம், சுயாதீன அமைப்பொன்றிடம் ஒப்படைத்து, தம்மைத் தூரப்படுத்திக் கொள்ள ஜம்மியாவுக்கு நீண்ட காலமும் பல கசப்பான அனுபவங்களும் தேவைப்பட்டது.

வருடா வருடம் தொடரும் பிறை சர்ச்சைகளுக்கும் அப்பால், இன்று, குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அம்பலமாகியுள்ள முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் உட்பிரிவினைகளை சமப்படுத்தும் தேவைகளின் பால் ஜம்மியாவின் வகிபாகம் எவ்வாறு இருக்கிறது? என்ற கேள்வி இன்னும் பொதுத்தளத்தில் திறந்தே காணப்படுகிறது. தம்மைப் பின்பற்றி ஏற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே தாம் தலைமைத்துவத்தை வழங்குகிறோம் என்பது ஜம்மியாவின் நிலைப்பாடாக இருந்தால், பகிரங்கமாகவே பள்ளிவாசல்களுக்குள் இது தமது எழுச்சிக்கான காலம் என சூளுரைத்து ஏனைய கொள்கை இயக்கங்களை எதிரியாகப் பார்த்து, ஒவ்வொருவராகக் காட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் இச்சமூகத்தின் இன்றைய சூழ்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறும் நிலையில் 95 வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தவறிப்போகிறது என்ற வாதம் மெய்யாகிவிடும்.

பெரும்பான்மையானவர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்கிறார்கள் என்று சில மார்க்க அறிஞர்கள் பகிரங்கமாகவே சொல்லக் கேட்கிறோம். அந்தப் பெரும்பான்மையின் பெரும்பான்மையானவர்கள் நமக்கேன் வம்பு? என சமூக விவகாரத்தில் பட்டும் படாமலும் வாழ்பவர்கள் என்பதும் உண்மை. எனவே, அவ்வப்போது பிரச்சினைகள் எழும் போது அவர்களது விரலும் இங்கு தான் நீளும். தவிரவும் ஏதோ ஒரு சிறுபான்மை போதும் இச்சமூகத்தை தலை குனிய வைக்க என்பதும் தற்போது ஈஸ்டர் தாக்குதலி;ன் பின் நிரூபணமாகியுள்ளது. இப்பின்னணியில் சமூக மட்டத்தில் நிலவும் இந்த பெரும்பான்மை – சிறுபான்மை மற்றும் கொள்கைப் பிரிவினைகளுக்கப்பால் ஆக்கிரமிப்பு, ஆதிக்க சிந்தனையற்ற பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்கி சமூகத்தை மார்க்க ரீதியாக கட்டுக்கோப்புக்குள் வைத்து வழி நடாத்தும் பொறுப்பும் ஜம்மியாவையே சாரும்.

ஒற்றை வரியில் வலியுறுத்துவது என்றால் சமூகத்தில் இன்று தவறிப்போயிருக்கும் ஒற்றுமையென்பது கடந்த காலத்தில் தவறவிடப்பட்ட விடயம் என்ற உண்மையை தார்மீகப் பொறுப்புடன் எல்லோருமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இச்சமூகத்தின் மீதான ஏக போக சமய ஆதிக்க உரிமையைத் தமதாக்கிக் கொண்டுள்ள அமைப்பெனும் ரீதியில் கடந்த காலத்தில் தவற விட்டதை மீளக் கட்டியெழுப்புவதும் ஜம்மியாவின் கடமையாகிறது.

இதற்காக யார் எந்த நிலை வரை இறங்கிப் போவார்? அல்லது எவ்வகையான விட்டுக் கொடுப்புகள் தேவைப்படுகிறது? எந்த மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் அவசியப்படுகிறது? எத்தனை சந்திப்புகள்? செயற்திட்டங்கள் தேவைப்படுகிறது என்பதையெல்லாம் முடிவெடுக்கக் கூடிய வல்லமை அ.இ.ஜ.உ நிர்வாகிகளுக்கு நிச்சயம் உண்டு.  

அதற்கான மனமும் - இடமும் உண்டா என்பதைக் காலம் அவதானித்துக் கொண்டிருக்கிறது.

wjR0LbU

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment