ACJU நிர்வாக தெரிவும் எதிர்பார்ப்புகளும் - sonakar.com

Post Top Ad

Thursday, 11 July 2019

ACJU நிர்வாக தெரிவும் எதிர்பார்ப்புகளும்


இலங்கை முஸ்லிம்களின் சமகால வரலாற்றில், எதிர்வரும் 13ஆந் திகதி நடைபெறவுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவு முக்கியமானதொரு விடயமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.


சுமார் 25 வருடங்களுக்கு முன்பு இல்லாத மிக முக்கியத்துவம், இவ்விடயத்துக்கு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில், குறிப்பாக சமூக நலனில் அக்கறை கொண்ட புத்திஜீவிகள் மத்தியில் கொடுக்கப்பட்டிருப்பதை தொடர்ச்சியாக வரும் கட்டுரைகள், கருத்துக்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எவர் என்ன சொன்னாலும், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல், பொருளாதார, சர்வதேச அனைத்து விடயங்களிலும் மிக முக்கியதொரு வகிபாகத்தை கொண்டிருப்பதை நாம் மறுப்பதிற்கில்லை. இவ்வாறு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அண்மைக் காலங்களில் அனைத்து துறைகளிலும் ஆழக்கால் பதித்திருப்பதற்கு பின்வருவனவற்றை சில முக்கிய காரணங்களாக கொள்ள முடியும்.

முஸ்லிம்களுக்கெதிராக பிற சமயத்தவர்களாலும், அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் துவேஷ கருத்துக்கள், நெடுக்குவாரங்கள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியதும் ஆறுதல் அளிக்கக்கூடியதுமான தேசிய ரீதியான செல்வாக்கும் பலமும் மிக்க முஸ்லிம் ஸ்தாபனங்கள் எதுவும் காணப்படாமை.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் காட்டிக்கொடுப்புகளும், சமூக அக்கறையற்ற செயற்பாடுகளும், அவர்களுக்கெதிரான பொதுமக்களின் நிலைப்பாடுகளும்.இலங்கை முஸ்லிம்களை சமய போதனைகள் ஊடாக மட்டுமே ஒற்றுமைப்படுத்தலாம் என்ற அதீத நம்பிக்கை.சுயநலமற்று, வேறு எதுவித நோக்கங்களுமின்றி, மிக தூய்மையாக சமூகத்திற்கு உறுதுணையாக செயற்படக்கூடிய பக்குவம் உலமாக்களிடம் மட்டுமே காணப்படலாம் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பு.

பிரதேச கட்சி ரீதியாக இலங்கை முஸ்லிம்கள் கூறுபோடப்படுவதற்கு முன், தேசிய கட்சிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து சமூகத்தின் அனைத்து பிரச்சினைகள், தேவைகளுக்கும் குரல்கொடுத்த முன்னைய முஸ்லிம் தலைவர்களான டொக்டர் கலீல், சேர் ராசிக் பரீத், மாக்கான் மாக்கார், பதியுதீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ்.ஹமீத், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற தீர்க்க தரிசனமிக்க தலைவர்கள் தற்போது சமூகத்தில் காணப்படாமை.

என்பன போன்ற காரணங்களே இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பக்கமும், அதன் நடவடிக்கைகள், நிர்வாகத்தெரிவுகளின் பக்கமும் திசைதிருப்ப வைத்துள்ளன என்று கூறலாம்.

ஜம்இய்யாவும் நிர்வாகத்தெரிவும்

இவ்விடத்தில் முக்கிய ஒரு விடயத்தை கலந்துரையாடுவதற்காகவே இக்கட்டுரையை நான் எழுதுகின்றேன். எதிர்வரும் 13ந்திகதி நடைபெறவுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைத்துவப் பொறுப்பு யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பதே நிர்வாகத்தெரிவு பற்றிய சமூக அக்கறை கொண்ட புத்திஜீவிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி அவர்கள் 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சுமார் 16 வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார். அவர் தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன் மௌலவி அப்துஸ்ஸமத் ஹஸ்ரத் அவர்களும், அதன்பின் அஷ்ஷெய்க் எம்.ஏ. முபாறக் மதனி (முன்னாள் அதிபர், கபூரிய்யா அறபுக்கல்லூரி) அவர்களும் தலைவர்களாக கடமையாற்றினார்கள். அக்காலத்தில் இலங்கையில் பல்வேறு துறைகளில் பிரபல்யம் பெற்றிருந்த பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம், மௌலவி றுகூல் ஹக் (முன்னாள் கல்விப் பணிப்பாளர், அதிபர், கல்-எலிய அறபுக்கல்லூரி) போன்றோர் உலமா சபையில் முக்கிய பங்குவகித்து அதன் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.

அதேவேளை 25வருட காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளராக, இலங்கையின் மிகப்பிரபலமான ஆலிமான மௌலவி ஏ.எல்.எம்.றியால் (கபூரி) அவர்கள் தொடர்ந்து கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். ஜம்இய்யாவின் அப்போதைய தலைவர்களை விட, ஜம்இய்யாவை வெற்றிகரமாக செயற்படுத்துவதில், ஜம்இய்யாவில் ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள், நிதிப்பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மௌலவி றியால் அவர்களின் 25வருட பங்களிப்பு இன்றும் மூத்த உலமாக்களால் இலங்கை பூராகவும் நினைவுகூரப்படுகின்றது. 'தான் சுமந்து செல்லும் தனது கைப்பையிலேயே ஜம்இய்யாவின் அனைத்து வேலைத்திட்டங்களும் தயாராக இருக்கும்' என மௌலவி றியால் பற்றி தெரிந்தவர்கள் கூறுவார்கள்.

றிஸ்வி முப்தி அவர்கள் தலைமைப் பதவியை கையேற்பதற்கு முன், இலங்கை முஸ்லிம்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய எந்த நிகழ்வுகளும் ஏனைய மதத்தவர்களால் பெரியளவில் இடம்பெறவில்லை. இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய எந்த சந்தேக உணர்வுகளும், கசப்பும் ஏனைய இனத்தவர்கள், மதத்தவர்கள் மத்தியில் இடம்பெற்றிருக்கவில்லை. றிஸ்வி முப்தி அவர்கள் அந்நிய மதத்தவர்களிடமிருந்து முதலாவதாக எதிர்ப்பை எதிர்கொண்ட 'ஹலால் சான்றிதழ்' வழங்கும் நடைமுறை அவர் பதவியேற்பதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னதாகவே ஜம்இய்யாவினால் மூத்த உலமாக்களின் வழிகாட்டலின் கீழ், மௌலவி றியால் அவர்களால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது எவ்வித பிரச்சினைகளையும் அப்போது தோற்றுவித்திருக்கவில்லை. நானறிந்த வகையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பௌத்த பன்சலை ஒன்றில் மலர்த்தட்டை தூக்கிச்சென்றமைக்காக ஜம்இய்யாவினால் வழங்கப்பட்ட 'பத்வா' ஒன்று மட்டுமே அப்போது பிரச்சினைக்குரிய விடயமாக இருந்ததே தவிர, வேறு எவ்வித பிரச்சினைகளும் ஜம்இய்யாவுக்கு எதிராக எழவில்லை என்பது திண்ணம்.

ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடக்கின்ற நிர்வாகத்தெரிவுக்கு இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் பிரதேச கிளைகளினூடாக - அழைப்பிதழ் மூலம் - உலமாக்கள் அழைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கில் கலந்துகொள்ளும் நடைமுறையும், அவர்களின் முழுமையான ஆதரவுடனேயே ஜம்இய்யாவின் தலைவர் உட்பட, அனைத்து நிர்வாகத்தினரும் தெரிவுசெய்யும் நடைமுறையும் றிஸ்வி முப்தி தலைமைப் பதவி ஏற்பதற்கு முன் இருந்து வந்தது. ஆனால் தலைவராக வருபவர் ஒரு மத்ரஸாவின் அதிபராக இருக்க வேண்டும் என்று கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே மத்ரஸாவின் அதிபர்களாக இருந்த அப்துஸ்ஸமது ஹஸ்ரத், மௌலவி முபாறக் மதனி என்போர் தலைவர்களாக தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்டார்கள். றிஸ்வி முப்தி முதலாவதாக தெரிவுசெய்யப்பட்ட போதும், அவர் ஒரு மத்ரஸாவின் அதிபர் என்றவகையிலேயே தெரிவுசெய்யப்பட்டார். றிஸ்வி முப்தி தலைவராக தெரிவுசெய்யப்பட்டதன் பின் தலைவரையும் நிர்வாகத்தினரையும் தெரிவுசெய்யும் இந்த நடைமுறையை முழுமையாக மாற்றினார்.

1924ம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஒரு முழுமையான சபையாக இயங்கிவரும் ஜம்இய்யாவில், 2000ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 51ஃ2000 இலக்க கட்டளைச் சட்டத்தினூடாக ஓர் அங்கீகாரம் பெற்ற சபையாக இயங்கி வந்தது. இதில் இலங்கையின் அனைத்து மாகாணங்கள், மாவட்டங்களிலிருந்தும் 134 கிளைகளினூடாக 5000 உலமாக்கள் அங்கத்துவத்தைக் கொண்ட ஒரு மாபெரும் சபையாக இயங்கிவருகின்றது. றிஸ்வி முப்தி அவர்கள் மிகத் திட்டமிட்ட முறையில், 25 மாவட்டங்களுக்குமான மாவட்டக்கிளைகளை முதலாவதாக ஏற்படுத்தி அதிலும் ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பதவிகளையும் ஏற்படுத்தினார். இவ்வாறு 25 மாவட்டங்களிலும் இருந்து மாவட்டத்தலைவர், செயலாளர், பொருளாளர் என 25ழூ3ஸ்ரீ75 பேர் மட்டுமே ஜம்இய்யாவின் அகில இலங்கை ரீதியான நிர்வாகத் தெரிவுக்கு அழைக்கப்படுவதன் மூலம், மிக இலகுவாக றிஸ்வி முப்தியால் தொடர்ந்து 16 வருடங்கள் ஜம்இய்யாவின் தலைவராக கடமையாற்ற முடிந்தது. அதேபோல் பிரதித் தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற ஏனைய பதவிகளுக்கும் தனக்கு கீழ் எவ்வித பிரச்சினைகள், குறுக்கீடுகள் இன்றி கடமையாற்றக்கூடியவர்களையும் மிக இலகுவாக அவர்களால் தெரிவுசெய்து கொள்ள முடிந்தது. இலங்கையில் 5000 உலமாக்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு தேசிய சபைக்கு இவ்வாறான குறைந்த உறுப்பினர்களின் ஆதரவோடு நிர்வாகத்தெரிவை நடாத்துவது, ஜனநாயக அடிப்படைகளுக்கு முற்றிலும் விரோதமானது என்பது வெளிப்படையானது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாவட்டக் கிளைகளின் தெரிவுகள் நடக்கும்போது றிஸ்வி முப்தி நேரடியாக செல்வாக்குச்செலுத்தி நிர்வாகத் தெரிவை நடாத்திய விடயத்தை என்னால் நிரூபிக்க முடியும்.

ஜம்இய்யா தனது இலட்சியத்தில் வெற்றி கண்டுள்ளதா?

றிஸ்வி முப்தி அவர்கள் தலைமைப் பதவியை ஏற்றதன் பின் ஒருசில முன்னேற்றகரமான செயற்பாடுகள் ஜம்இய்யாவினால் இடம்பெற்றுள்ளதை நிதர்சனமாக ஏற்றுக்கொள்கின்றோம். ஜம்இய்யாவுக்கென மருதானை கலீல் வார்ட்டுக்கு அண்மையில் முன்னர் கட்டப்பட்டிருந்த கட்டடம் அதன் ஒப்பந்தக்காரர்களால் கபளீகரம் செய்யப்பட்ட போது அரசாங்க, தனிநபர்களின் உதவியோடு கொழும்பு 10இல் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் மூன்று மாடிக்கட்டடம் ஒன்றை நிறுவியமை, ஜம்இய்யாவின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 15 செயற்பாட்டு பிரிவுகளை (உழஅஅவைவநநள) ஏற்படுத்தியமை என்பவற்றை இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடலாம். நானறிந்த வகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஜம்இய்யாவினால் வேதனம் வழங்கப்பட்டு ஜம்இய்யாவில் பல பிரிவுகளிலும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான பல்வேறு முன்னேற்றங்கள் ஜம்இய்யாவினால் ஏற்பட்ட போதும், அது தனது இலட்சியத்தை அடைவதில் தோல்வி கண்டுள்ளது மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்களை பல்வேறு இன்னல்களுக்கும், நெருக்குவாரங்களுக்கும் ஆளாக்கியுள்ளமையை ஜம்இய்யாவின் நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக பௌத்த பேரினவாதிகள் (ஞானசார தேரர் போன்றோர்) இலங்கை முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டி மிகவும் கேவலமான முறையில் சாட்டிய குற்றங்கள் அனைத்தும், எனது பார்வையில் றிஸ்வி முப்தி தலைமையிலான ஜம்இய்யாவினாலேயே உருவாக்கப்பட்டன என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அவற்றில் சிலவற்றை நாம் பின்வருமாறு நோக்கலாம்.

ஹலால் பிரச்சினை: றிஸ்வி முப்தி தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் றிஸ்வி முப்தி தலைமைப் பதவியை ஏற்ற பின் இச்செயற்பாடு, அதிக இலாபம், வருவாய் பெறும் நோக்கத்தோடு, அதிக விளம்பரத்தோடு நடாத்தப்பட்டதால் இதற்கு எதிராக பௌத்த பேரினவாதிகளின் குற்றச்சாட்டுக்கள் பல்வேறு மட்டங்களில் எழுப்பப்பட்டதுடன், அவ்வருமானம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. ஹலால் பிரச்சினையால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை தனியொரு கட்டுரையாக தர முடியும். அதேநேரத்தில் ஹலால் பிரச்சினை சம்பந்தமான எந்த தெளிவுகளும் பௌத்த மக்களுக்கு ஜம்இய்யாவினால் இன்றுவரை வழங்கப்படவில்லை. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னரும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகளில் முதன்மையானது ஹலால் பிரச்சினையாகும்.

முஸ்லிம்களின் குறிப்பாக பெண்களின் உடை பற்றிய பிரச்சினை: உலமாவின் தலைமைத்துவத்தை ஏற்றவர்களாலேயே முகக்கவசம் (நிகாப்) அணிவது வற்புறுத்தப்பட்டதுடன், அது இலங்கையிலுள்ள ஜம்இய்யாவின் கிளைகளினூடாக கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்விடயத்தில் காணப்படும் இஸ்லாமிய வழிகாட்டல்களை ஜம்இய்யா மக்களுக்கு விளங்கப்படுத்த முனையவில்லை. மட்டுமன்றி பெண்களின் உடைகள் முழுமையாக கறுப்பு நிற அபாயாவாக மாற்றம் பெற்றதும் ஜம்இய்யாவின் மறைமுக செயற்பாடுகளின் விளைவாகும். இன்று குர்ஆன் மத்ரஸாவுக்கு செல்லும் ஐந்து வயது குழந்தை முதல் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட அனைவரும் இந்த கறுப்பு நிற அபாயாவுக்குள் சிக்குண்டுள்ளனர். 'அவ்ரத்'ஐ மறைப்பது சம்பந்தமான இஸ்லாத்தின் தெளிவான பாதைகள் மறைக்கப்பட்டு, ஒரு குறுகிய வட்டத்திற்குள் முஸ்லிம் பெண்களை இச்செயற்பாடு கொண்டுவந்து, அந்நிய பெண்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அவர்களின் அருவருப்புக்கும் ஆளாக்க வைத்தது. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக அந்நிய சக்திகளின் குற்றச்சாட்டுக்களில் இவ்விடயம் முதன்மை பெற்றுள்ளது. அதேபோல் முஸ்லிம் ஆண்களில் சிலர், முழுமையான 'ஜுப்பா', 'தோப்' போன்ற உடைகளை அணிவதற்கும் ஜம்இய்யாவின் செயற்பாடுகளே காரணமாகும். சமூகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கூட இவ்வாறான உடைகளை அணிவதன் மூலம் இவ்வுடைகளுக்குரிய சமூகப் பெறுமானங்கள் மிக கீழ் மட்டத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எமது முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பொது இடங்களிலும், பொது வாகனங்களிலும் செல்லும் போது கூட இவ்வாறான உடைகள் அந்நியர்களின் வெறுப்பையும், கண்காணிப்பையும் சம்பாதித்து வந்துள்ளதுடன், இப்போது அவ்வெறுப்பை பகிரங்கமாக வெளிக்காட்டவும் தொடங்கியுள்ளனர். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவ்ரத் மறைப்பது சம்பந்தமான தெளிவுகள் இதனால் சமூகத்திற்கு மறைக்கப்பட்டுள்ளன.

மக்தப் கல்விநிலையம்: பிறநாட்டில் காணப்படும் இவ்வாறான சிறுவர்களுக்கான கல்விநிலையங்கள் ஜம்இய்யாவினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமை காலத்தின் தேவையாக இருந்த போதிலும், அதற்காக அறவிடப்படும் பணம், ஏனைய செலவுகள் சாதாரண குடும்பங்களை வெகுவாகப் பாதித்துள்ளன. அதேநேரத்தில் மக்தப்களை நடாத்தும் முஅல்லிம்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. முன்னர் தனிப்பட்ட வீடுகளிலும், பள்ளிவாயல்களில் ஒரு பகுதியிலும் நடாத்தப்பட்டு வந்த மத்ரஸா, மக்தப் முறை இதனால் செயலிழந்துள்ளது. மட்டுமன்றி, அண்மைக்காலங்களில் அந்நிய மதத்தவர்கள், அரசியல்வாதிகளால் குற்றஞ்சாட்டப்படும் முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் தொடர்பான சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுக்களும் இவைகளும் மறைமுக காரணியாகும்.

அல்குர்ஆனின் கருத்துக்கள் உட்பட இஸ்லாமிய சட்டங்கள், வரலாறு சம்பந்தமாக பௌத்த பேரினவாதிகளாலும், இலங்கையின் அரசியல்வாதிகளாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் பிரபல சிங்கள அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி தொலைக்காட்சிகளிலும் இக்குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. 'அந்நிய மதத்தினரை கொலைசெய்யுமாறு குர்ஆன் கூறுகின்றது' என்பன போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவற்றுள் அடங்கும். இலங்கையில் மிக ஆழமாக, ஸ்தாபன ரீதியாக உறுதியான நிலையில் உள்ள (இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்க தீர்ப்பளிக்க வேண்டிய தார்மீக பத்வா ரீதியிலான பொறுப்புடைய) ஜம்இய்யா இன்று வரை எந்தவொரு பிரச்சினைக்கும் தெளிவான விளக்கங்களை முன்வைக்கவுமில்லை. அதற்காக முன்வரவுமில்லை. மௌலவி அம்ஹர் போன்ற தனிநபர்கள் துணிந்து நின்று, பிரபல சிங்கள தொலைக்காட்சியில் அளித்த விளக்கம் போன்ற பயனுறு விளக்கங்களை இன்றுவரை ஜம்இய்யாவோ, அதன் தலைவரோ வழங்க முன்வராதது முஸ்லிம் சமூகத்தின் துரதிஷ்டமே. ஜம்இய்யாவில் உள்ள வளங்களை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம். அல்லது அம்ஹர் போன்ற உலமாக்களையாவது தயார்செய்திருக்கலாம். ஜம்இய்யா இவ்வாறான விடயங்களில் எந்த கரிசனையும் கொள்ளாது, அக்கறையற்று இருந்ததாலேயே இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை போன்ற தோற்றத்தை பிறசமூகங்களுக்கு கொடுத்துள்ளன. ஏப்தல் 21 தாக்குதலுக்கு பிறகு இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து பல வடிவங்களில் மட்டுமன்றி, பல கற்பனைகளாகவும் அந்நிய சமூகத்தினரால் முன்வைக்குமளவுக்கு இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளன. இன்று இக்குற்றச்சாட்டுக்களை அந்நிய மதத்தவர்கள் உண்மையானவை என்று நம்புமளவுக்கு ஜம்இய்யா இவற்றை வளரவிட்டுள்ளது.

ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயத்தில் எவ்வாறான உண்மைத்தன்மை, பேணுதல் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது முஸ்லிம்கள் மத்தியில் இன்றுவரை சந்தேகத்துக்குரியதாகவே காணப்படுகின்றது. எந்தவித விஞ்ஞான ரீதியிலான ஆய்வும், பரிசீலனையுமின்றி, வெறும் பணம்பெறும் இலாப நோக்கை மாத்திரம் கொண்டு ஜம்இய்யா, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தியாகும் பல பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி, ஹலால் பற்றிய இஸ்லாத்தின் புனிதமான கோட்பாட்டுக்கே சாவுமணியடித்துள்ளது. இது சம்பந்தமாக பல புத்திஜீவிகளாலும் உலமாக்களாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும், ஜம்இய்யாவும் அதன் நிர்வாகமும் அவற்றைப் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டதாக தெரியவில்லை. ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் ஜம்இய்யாவுக்கு கிடைக்கும் பணம் பற்றிய எவ்வித கணக்குப் பரிசோதனைகளும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.

இலங்கையில் தஃவா ரீதியாக பல்வேறு இயக்கங்களும் காணப்படுகின்றன. இவ்வியக்கங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் இஸ்லாம் பற்றிய தெளிவுக்கும் ஏதோவொரு வகையில் பங்காற்றி வருகின்றன. தப்லீக் இயக்கம், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் இயக்கங்கள் போன்ற முக்கிய இயக்கங்கள் ஜம்இய்யாவின் விடயங்களிலும், நிர்வாகத்திலும் முக்கிய பங்குகொண்டு தமக்குள் எவ்வித பிளவுகளுமின்றி, ஜம்இய்யாவின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் றிஸ்வி முப்தி தலைமைப் பதவியை ஏற்கும் வரை பங்காற்றிக்கொண்டிருந்தன. ஆனால் றிஸ்வி முப்தியின் தலைமைப் பதவியோடு அந்நிலை மாறி, தனியொரு இயக்கத்தை வளர்க்கும் பாசறையாக ஜம்இய்யா மாற்றம் கண்டுள்ளது.

ஜம்இய்யாவின் தலைவரின் அரசியல்வாதிகளுடனான தேவையற்ற -தவறான- தொடர்புகள்: ஜம்இய்யா சபைத் தலைவர் பல சந்தர்ப்பங்களில் பிழையான அரசியல்வாதிகளை ஆதரித்தும் அவர்களுக்கு கூஜாதூக்கியும் பலமுறை செயற்பட்டுள்ளார். சில முற்றிலும் பிழையான அரசியல்வாதிகளை காப்பாற்றியும் உள்ளார். உதாரணமாக, 2012ல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் அணிதிரண்ட போது, உலக முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் இடத்தில் அவரைப் போற்றிப் புகழ்ந்து செயற்பட்டது, அப்போது முழு முஸ்லிம் சமூகத்தினாலேயே வெறுக்கப்பட்ட விடயமாகும்.
இவ்வாறு பல்வேறு பாதக விளைவுகள் ஜம்இய்யாவின் றிஸ்வி முப்தி தலைமையிலான நிர்வாகத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டு, அந்நிய சக்திகளின் அடிமைகளாக முஸ்லிம் சமூகம் மாறுமளவுக்கு மாற்றம் பெற்று வருகின்றது.

றிஸ்வி முப்தியும் தலைமைத்துவமும்

அதேநேரத்தில் எதிர்வரும் நிர்வாகத் தெரிவின்போது றிஸ்வி முப்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்றும், அதற்கு மாற்றமாகவும் பல்வேறு கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. 'றிஸ்வி முப்தி செய்த சேவைகள்' என சமூகத்தை பிரமிப்புக்கு உள்ளாக்கும் கட்டுரைகளும் அண்மையில் வெளிவந்துள்ளன. உண்மையில், இலங்கை முஸ்லிம்கள், வரலாற்றில் என்றும் காணாத மிகவும் பயங்கரமான சூழ்நிலையில், அரசியல் பின்புலத்தில் வாழும் இக்கால கட்டத்தில் ஜம்இய்யா ஆற்றவேண்டிய வகிபாகம் மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்கள் போலன்றி, எதிர்வரும் ஆண்டுகள் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை, மிகவும் கூரிய வீச்சுக் கொண்டதாக, ஒரு யுத்தமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வகையில், இலங்கை முஸ்லிம்கள் தமக்குள் எவ்வித கருத்துமோதலுமின்றி ஒன்றுபடக்கூடிய             -ஒன்றுபடுத்தக்கூடிய- வலிமைகொண்ட ஒரு பேரியக்கமாக ஜம்இய்யா மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். ஜம்இய்யாவை தமது வியாபார சந்தையாக, லாபம் பெறும் இடமாக மாற்றாமல் மிகவும் உளத்தூய்மையோடு புனிதமாக, இஹ்லாஸ், தக்வாவோடு ஜம்இய்யாவை வழிநடத்தக்கூடிய தலைமையும், நிர்வாகமும் இப்போது தேவைப்படுகின்றன. இந்த நிலையில் தற்போதைய தலைவரை பற்றிய எனது சில அனுபவங்களை சமூகத்திற்கு முன்வைப்பது எனது கடமை என உணர்கின்றேன். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவைகள் இன்னொருவரை பற்றிய வசையாக, யதார்த்தத்துக்கு மாற்றமான குற்றச்சாட்டாக, அவதூறு சொல்வதாக அமையக்கூடாது என்பதில் நான் மிகவும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அல்குர்ஆனும், பெருமானாரின் பொன்மொழிகளும் இவ்வாறாக மற்றவரைப் பற்றி பழிசொல்வதை கடுமையாக கண்டிக்கின்றது. எனினும், தலைவர்களை தெரிவுசெய்யும் போது சில விடயங்கள் சமூகத்துக்கு தெளிவுறுத்தப்பட வேண்டும் என்பதில் இப்னு கல்தூன் போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். எனவே, தற்கால தலைவரைப் பற்றிய எனது சில அனுபவங்களை ஜம்இய்யாவின் எதிர்கால பயணத்துக்காக முன்வைக்கின்றேன்.

ஜம்இய்யாவின் தற்போதைய தலைவர், அவர் தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன், தஃவா பணிக்காக அடிக்கடி லண்டன் போன்ற மேற்குலக நகரங்களுக்கு வந்துபோவார். எனது உயர்படிப்புக்காக 2000ஃ2004ல் நான் லண்டனில் இருந்த போது அங்குவந்த தலைவர் அவர்கள், 'பிரமிட் பிஸ்னஸ்' (Pலசயஅனை டீரளiநௌள) என்ற ஒரு வங்கி போன்ற நிறுவனத்திற்கு ஆள்சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், 'அவ்வாறு செய்வது ஆகுமானது' என பத்வா கொடுத்ததாகவும்  லண்டனிலிருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் என்னிடம் கூறினார்கள். இவ்வாறான முயற்சிகள் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது மட்டுமன்றி, இஸ்லாத்தின் பார்வையிலும் ஹராமானதாகும்.

பொதுவாக இலங்கையிலுள்ள ஜம்இய்யா கிளைகளின் நிர்வாகத் தெரிவுகளை, அக்கிளைகளே எவ்வித பிரச்சினைகளுமின்றி, ஏகோபித்த அடிப்படையில் தெரிவுசெய்து கொள்வது தொடர்ந்து வழக்கமாக இருந்தது. ஆனால் றிஸ்வி முப்தி அம்முறையை மாற்றி, 'ஜம்இய்யாவின் தலைமைப்பீட உறுப்பினர்களின் மேற்பார்வையில் பிரதேச கிளையின் தெரிவு நடக்க வேண்டும்' என்று ஒரு சுற்று நிரூபத்தை அனுப்பி வைத்தார். நான் எனது ஊரில் பல ஆண்டுகள் ஏகமனதாக கிளைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு கடமையாற்றினேன். எனக்குப் பின்னரும் பலர் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு கடமையாற்றினார்கள். 2016ல் இடம்பெற்ற நிர்வாகத்தெரிவு ஒன்றிற்கு றிஸ்வி முப்தி தலைமையிலான ஒரு குழு ஜம்இய்யாவின் தலைமைப்பீடத்தில் இருந்து கலந்துகொண்டது. நிர்வாகத் தெரிவுக்காக சுமார் ஐம்பது உலமாக்கள் கலந்துகொண்ட போது, தலைவர் பதவிக்கு நானுட்பட இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. அதற்கான வாக்குகளும் உலமாக்களால் செலுத்தப்பட்ட பின்னர், றிஸ்வி முப்தி என்னை தனிமையில் அழைத்து, இவ்வாறு வாக்களிப்பதை நிறுத்தி, ஒரு தற்காலிக சபையை (ஐவெநசiஅ டீழனல) அமைப்போம் என்று என்னை பலவந்தப்படுத்தினார். அவ்வளவு உலமாக்களும் பங்குபற்றி வாக்களித்த பின், அவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. அதன்பின் (வாக்களிப்பின் பின்) மற்றவரை தலைவராக தெரிவுசெய்தார். ஆனால் ஜனநாயக அடிப்படையிலோ, இஸ்லாமிய தெரிவு முறையிலோ உள்ள, எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன என்பதை கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நானும் அதைப்பற்றி எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. குறிப்பிட்ட இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக வரவேண்டும் என்ற பிடிவாதமே எனதூரிலும், கிண்ணியா, சம்மாந்துறை ஊர்களிலும் இவ்வாறாக தந்திரமான தெரிவுமுறை (களவாக) நடைபெற்றதாக பின்னர் நான் அறிந்துகொண்டேன்.

பெருநாள் பிறையைக் காண்பதற்காக கொழும்பிலுள்ள பிரபல முதலாளிகள், பாய்மார்கள் பிறை கண்ட ஊருக்கு அனுப்பப்படுவது ஜம்இய்யாவின் தற்போதைய வழக்கமாக உள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கிண்ணியாவில் மிக மூத்த உலமாக்களினால் உறுதிசெய்யப்பட்ட பிறை காணப்பட்ட பதிவு மழுங்கடிக்கப்பட்டு, ஜம்இய்யாவினால் அனுப்பப்பட்ட பாய்மார்களின் அறிக்கைக்கு ஏற்ப, அது நிராகரிக்கப்பட்டதும், மறுநாள் பெருநாள் கொண்டாட உலமா சபை வலியுறுத்தியதும், இது சம்பந்தமாக தலைவருக்கு எதிராக பல்வேறு முனைகளில் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்ட போது, அவர் அழுதழுது சத்தியம் செய்து ஆற்றிய உரையும் அவரின் மோசடித் தன்மையை எமக்கு புரிய வைத்தது. அவர் ஏன் பாய்மாரை அனுப்பினார் என்பது இன்னும் புரியவில்லை. அப்போது நான் ஜம்இய்யா செயலாளர் அஷ்ஷெய்க் முபாறக் அவர்களை தொடர்பு கொண்ட போது, அவரும் அன்றே பிறை கண்டதை உறுதிப்படுத்தினார்.

2004ம் ஆண்டு கிழக்கில் ஏற்பட்ட சுனாமியினால் பாதிப்புற்றோருக்கு வழங்கவென ஜம்இய்யா ஒரு தொகுதி மிதிவண்டிகளை (பைசிக்கில்களை) எமதூருக்கு அனுப்பி வைத்தது. அப்போது எமதூர் கிளையின் தலைவராக நானிருந்தேன். எமதூருக்கு வழங்கப்பட்ட சில மிதிவண்டிகள், அவற்றைக் கொண்டுவந்த தலைமையகத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒரு உலமாவால் கையாடல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக தலைமைப் பீடத்திற்கு எழுத்து மூலம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவை போன்ற பல அனுபவங்கள் என்னிடம் இருக்கின்றன. இறுதியாக, 13ந் திகதி நடைபெறவுள்ள நிர்வாகத் தெரிவு ஒத்திவைக்கப்படுவதோடு, ஜம்இய்யாவின் யாப்பில் ஏகோபித்து, மாற்றங்களை ஏற்படுத்தி, இலங்கையின் சகல உலமாக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு புதிய நிர்வாகம் இரண்டு மாதத்திற்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதன் பதவியில் உள்ளவர்கள், பணம், அரசியல், இவ்வுலக விமோசனங்களுக்கு உள்வாங்கப்படாமல், தக்வா (இறையச்சம்), வரஉ (பேணுதல்), இஹ்லாஸ் (உளத்தூய்மை) போன்ற இஸ்லாமிய தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாக தெரிவுசெய்யப்பட வேண்டும். வல்ல அல்லாஹ் அதற்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குவானாக... (ஆமீன்)

-பேராசிரியர் அஷ்ஷெய்க். எம்.எஸ்.எம். ஜலால்தீன் (கபூரி) 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment