2020ல் நமது ஜனாதிபதி வேட்பாளர் தேடல் தொடர்பான தற்போதய நிலையைப் பார்க்கும் போது நான் சிறுவனாக இருந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. நான் பிறந்த மண்ணில் எனது வீட்டுக்குப் பின்புறமாக வேஹரகல என்ற ஒரு சின்ன குன்று ஒன்று அங்கே நிற்க்கின்றது. அதில் அப்போது சிறிய பற்றரைக் காடுகள் இருந்தன. பக்கத்து சகோதரக் கிராமமொன்றிலிருந்து வேட்டைக்காக அவ்வப்போது அங்கு சிலர் வந்து போவர்கள்.
வேட்டை முடிந்து திரும்பிப்போகும் அவர்கள் முகங்களில் சில நேரங்களில் மகிழ்ச்சியும் கலகலப்பும் சில நேரங்களில் சோகமும் மௌனமும் படிந்திருக்கும். மகிழ்ச்சிக்குக் காரணம் அன்று மான்களோ மறைகளோ அல்லது முயல்களோ சிக்கி இருக்கின்றது. அவர்களின் முகங்களில் சோகம் என்றால் அன்று எதுவும் சிக்கவில்லை வெரும் கையுடன் ஏமாற்றங்களுடன்தான் அவர்கள் வீடு நோக்கி போகின்றார்கள் என்பதுதான் அர்த்தம்.
இப்போது நெடுநாளாக நமது அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் வெரும் கையுடன் வீடு நோக்கிப் பயணிக்கின்ற அந்த வேடர்களின் நிலையில்தான் 2020 ஜனாதிபதி வேட்பாளர் தேடல் இருந்த வருகின்றது. எப்படி இருந்தாலும் இந்த வேட்பாளர் தொடர்ப்பில் எமக்குக்கிடைக்கின்ற நம்பகத்தனமான சில செய்திகளை மட்டும் நாம் அவ்வப்போது நமது வாசர்களுக்குச் சொல்லி வந்திருக்கின்றோம். அவ்வாறு இன்றும் நமக்குக்கிடைத்திருக்கின்ற 2020 வேட்பாளர் தொடர்பான புதிய சில தகவல்களை இந்தவாரம் சொல்ல முனைகின்றோம்.
ஏறக்குறைய ஒரு ஆறு மாதங்களாக நமது நாட்டில் பிரதான பேசுபொருளாக இருந்து வருவது அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் அதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரெல்லாம் வருவார்கள் என்பதுமாக இருந்து வருகின்றது. ஊடகங்கள் அவ்வப்போது இது தொடர்பாக பரபரப்பான செய்திகளையும் கட்டுக் கதைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
எம்மைப் பொருத்தவரை வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்ப்பில் சில செய்திகளைத் துல்லியமாகச் சொல்லி வந்திருக்கின்றோம். இன்றும் எமது அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் முரண்பாடுகளும் இல்லை. நாம் அடித்துச் சொல்லி வந்த படி சிலர் வேட்பாளர் என்ற நிலையிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கின்றார்கள். அதே போன்று சில கட்சிகள் அமைப்புக்கள் தங்களது பேரம் பேசுகின்ற சக்தியை வழுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் வேட்பாளர் தொடர்ப்பில் சில கருத்துக்களை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ஒரு கட்டத்தில் ஜேவிபி தாம் பொது வேட்பாளரை இந்த முறை களமிறக்கப்போவதாக் சொல்லி இருந்தது. சில நாட்களில் அவர்கள் தங்களது கட்சிக்காரர் ஒருவர்தான் வேட்பாளராக வருவார் என்று முன்னைய கருத்துக்கு மாற்றமாக ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார்கள். இப்போது சில மாதங்கள் கடந்து தனது வேட்பாளர் தொடர்ப்பிலான அந்த இரு கருத்துக்குக்கும் - கதைகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
இப்போது ஜேவிபி இந்த வேட்பாளர் கோதவிலிருந்து வெளியேறி இருக்கின்றார்கள் என்றுதான் அவர்களின் தலைவர்கள் பேச்சிலிருந்து பார்க்க முடிகின்றது. என்றாலும் 2020 வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் ஏதோ வகையில் அரங்கிற்கு வருவார்கள் எதையாவது செய்வார்கள் என்பதை மட்டும் எமக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.
நமது நாட்டில் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான சக்தியாக இருப்பது மொட்டுகள் அணியினரும் யானைகளின் அணியினரும் என்பது தெளிவு. இப்போது முதலில் ஆளும் தரப்பான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிலை என்ன என்று பார்ப்போம்.
ரணில் ஒரு பலயீனமான வேட்பாளர் என்பதனை அவரின் நெருங்கிய ஆதரவாளர்களே பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். அதே நேரம் அந்த இடைவெளியை சஜித் பிரேமதாசவைக் கொண்டு நிரப்பக்கூடாது என்று விடயத்தில் அவர்களில் சிலர் உறுதியாக இருக்கின்றார்கள். எனவே பகிரங்கமாகவே சஜித்துக்கு எதிராக ஒரு சிறிய குழு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. அதே போன்று அந்த இடத்தில் கருவை வைத்துப்பார்ப்பதற்கு சிலர் முயன்றாலும் ஐக்கிய தேசியக் கட்சி அடிமட்டத் தொண்டர்களிடையே சஜித்துக்கு ஆதரவான நிலைப்பாடே காணப்படுகின்றது. இன்னும் சிலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் பொது வேட்பாளர் ஒருவர் பற்றிப் பேசி வருகின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரை ரணில் என்னதான் ஒரு கவர்ச்சி இல்லாத தலைவராக இருந்தாலும் எஃகு போல் இருக்கின்ற அந்தக் கட்சியின் யாப்பு அவருக்கு நல்ல கவசமாக இருந்த வருகின்றது. எனவே இந்த யாப்பு இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனநாயகத்தைப் பற்றிப்பேசுவது என்பது கரடி வானம் பார்த்த கதையாகத்தான் இருக்கும். இந்த யாப்பு இருக்கும் வரைதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் இருக்க முடியும். யார் வேட்பாளராக வந்தாலும் தான் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரணில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்.
தனக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி தந்தால் மட்டுமே தான்னால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக வர முடியும் என்பது சஜித் நிலைப்பாடு. இதனால்தான் கரு விடயத்தில் ரணில் சற்று மொன்போக்கைக் கடைப்பிடிக்கின்றார் என்று தெரிகின்றது. கரு ஜனாதிபதி வேட்பாளர் என்ற விடயத்தை இப்போது ரணில் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றார். அத்துடன் தானே தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதும் பிரதமர் தானே என்ற நிபந்தனைகளுடன் கருவுக்கு அவர் பச்சைக் கொடி காட்டி இருக்கின்றார்.
சஜித் தலைமைப் பதவிக்கு வந்தால் கட்சியில் பாரிய மாற்றங்களை அவர் உடனடியாக முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எமக்குத் தகவல் தருகின்றன. அது தேவையும் கூட. ரணிலைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியில் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பது என்பது சாத்தியம் இல்லாத விடயம் என்பதை அவர் தமது சகாக்களிடம் தற்போது நேரடியாகக்கூறி வருகின்றார்.
கூட இருந்து குழிபறிப்பவர்களை வைத்தக் கொண்டு இந்த பயணத்தைப் போக முடியாது என்பது அவர் நிலைப்பாடு. சஜித் வேட்பாளர் என்று வந்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு சின்ன நம்பிக்கை ஏற்படும் என்பதும் அதேபோன்று கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவார்கள் அல்லது ஓரம் கட்டப்படுவார்கள் என்பதும் உறுதி. இவர்கள் மஹிந்த அணியில் இணைந்து கொள்வதற்கும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சித் தவிசாளர் கபீர் ஹசீம் சஜித்துக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறி இருப்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பது தனக்கே தெரியாதிருக்கின்றது என்று விரக்தியில் சிலதினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார்.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்கள் தமது ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆளுக்கால் வாய்க்கு வந்த பெயர்களை எல்லாம் உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பெரும் கேளிக்கூத்தாக இருக்கின்றது. எனவே காலம் தாழ்த்தாது ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் மனே கனேசன் ரணிலிடம் நேரடியாகக் கேட்டிருக்கின்றார். அதற்கு வழக்கம் போல் ரணில் புன்னகைத்து சற்றுப் பொருத்துக் கொள்ளுங்கள் தக்க தரணத்தில் பொருத்தமானவரை அறிவிப்பேன் என்று பூசிமொழுகி இருக்கின்றார்.
இராஜங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்தன ரணில் இது விடயத்தில் தனிப்பட்ட முடிவு எடுக்கக் கூடாது என்று கூறி இருக்கின்றார். எனவே தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளரை இனம் காண்பது என்பது ஏமாற்றத்துடன் வேட்டைக்குப்போன வேடன் கதையாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
எமது கருத்துப்படி இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று தேவைப்படுவது ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்பதைவிட ஒரு நல்ல கட்சித் தலைவரும் கட்சி யாப்புமாகும். எப்படியோ வருகின்ற தேர்தலில் மக்கள் கேட்கும் சஜித்தைத் தவிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வேறொருவரை களமிறக்குமானால் அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய சேதம் உண்டாகும். மஹிந்த தரப்பு கோதாவை வேட்பாளராக்காவிட்டால் கூட அங்கு பெரிய பாதிப்புக்கள் வர இடமில்லை.
மொட்டுகள் அணி எப்படி மஹிந்த என்ற தனி மனிதனின் பிடியில் சிக்கி இருக்கின்றதோ அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு ரணிலை அங்கு ஒரு இரும்பு மனிதனாக வைத்திருக்கின்றது. எப்படி இருப்பினும் இன்று நாட்டிலுள்ள ஜனரஞ்சக தலைவர் மஹிந்த ராஜபக்ஸா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால் அவரது ஜனரஞ்சகம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று தேசியம் என்றால் மஹிந்த ராஜபக்ஸதான் அதன் குறியீடு என்ற ஒரு நிலை பெரும்பாலான பௌத்த மக்களிடம் காணப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தொடர்ப்பில் அங்கு ஆளுக்காள் பெயர்களை உச்சரித்துக் கெண்டிருந்தாலும் மொட்டுக்கள் தரப்பில் இந்த முடிவை அறிவிக்கும் ஏக அதிகாரம் மஹிந்த ராஜபக்ஸ கரங்களில் மட்டுமே இருக்கின்றது. எனவே வருகின்ற ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கின்ற அதிகாரம் இந்த நாட்டிலுள்ள இரு தனி நபர்களின் கரங்களில் தங்கி இருக்கின்றது.
ஒருவகையில் பார்க்கின்ற போது உலகில் ஜனநாயக நாடொன்றில் சர்வாதிகார கட்சிகளை வைத்திருப்பவர்கள் இந்த மஹிந்தவும் ரணிலும்தான் என்று எண்ணத் தோன்றுகின்றது. அவர்கள் இருவரினதும் தனிப்பட்ட முடிவுகள்தான் இன்று தேசத்தின் முடிவு என்ற நிலை. இது மிகவும் பயங்கரமானது.
எப்படி இருந்தாலும் 2020 தேர்தலில் மஹிந்த தலைமையிலான மொட்டுகள் அணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகம் செய்வதில் அங்கும் சில நெருக்கடிகள் காணப்படுகின்றது என்பது உண்மை. அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு மஹிந்தவுக்கு வரமுடியாத நிலை இருப்பதால் அவர் விரும்பியோ விரும்பாமலோ ஒருவரை அறிமுகம் செய்ய வேண்டும்.
அவ்வாறு அவர் அறிமுகம் செய்பவர் அனேகமான தனது சகோதரர்களில் ஒருவர் என்பது முடிவான விடயமாக இருந்தாலும், கோதாவுக்குத் சிங்கள மக்கள் மத்தியில் நல்ல கேள்வி இருப்பதால் அவரை வேட்பாளராக மஹிந்த இனம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இனவாதிகள் மத்தியில் இருந்தாலும், அவரை அதி உயர் பதவிக்கு நியமிக்கின்ற போது இன்று தன்னிடம் இருக்கின்ற ஏக அதிகாரங்களும் பறிபோய்விடும் என்ற அச்சமும் மஹிந்தவுக்கு இருக்கின்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதிகாரங்களைக் கைமாற்றுவதாக இருந்தாலும் இதற்கு மஹிந்த இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும். அதற்கிடையில் தன்னிடம் இன்று இருக்கின்ற சிங்கள மக்களில் அபிமானத்தை கோதா ஜனாதிபதியானால் தன்வசப்படுத்தி விட முடியும். இந்த அச்சம்தான் மஹிந்தவுக்கு கோதா விடயத்தில் ஒரு பயத்தை அவருக்கு கொடுத்திருக்கின்றது.
இந்தத் தனிப்பட்ட அச்சம், தனது பிள்ளைகளின் அரசியல் எதிர்காலம், சர்வதேச உறவுகள், சிறுபான்மையினரின் பயம் என்ற நிலமைகளை வைத்து மூத்த சகோதரர் சாமல் ராஜபக்ஸாவை அந்த இடத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் பிடியைத் தொடர்ந்தும் தன்வசப்படுத்தி கொள்ளும் இராஜதந்திரத்தை மஹிந்த கையாளக்கூடும். தமது பிள்ளைகள், மனைவி சிபார்சுகள் கூட இதுவாகத்தான் இருக்கின்றது என்கின்றது அந்தரங்கத் தகவல்கள். சாமலும் வாய்ப்புக் கிடைத்ததால் தான் தயார் என்று சொல்லி இருக்கின்றார்.
கட்சியிலுள்ள இடதுசாரிகளையும் முரண்பாட்டாளர்களையும் சமாதானப்படுத்தும் முயற்ச்சியாகவும் இந்தத் தெரிவு இருக்கும். என்னதான் பிரதமர் பதவி தன்னிடம் இருந்தாலும் கடும்போக்கு கோதா ஜனாதிபதியானால் அவர் முன்னிலையில் பிரதமர் பதவி என்பது செல்லாக் காசாகவே இருக்ககும் என்பது மஹிந்தாவுக்கு தெரியும்.
கோதாவுக்கு இன்னும் அமெரிக்க குடியுரிமை விவகாரத்திலுள்ள சிக்கல் தீரவில்லை. ஏன் இந்த விடயத்தில் அமெரிக்கா இழுத்தடிக்கின்றது என்று புரியவில்லை. அதே நேரம் மிலிந்த மொரகொட தனது இரட்டை பிரசா உரிமை விவகாரத்தில் இருந்து வெறும் 10 நாட்களில் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால் கோதாவுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. பேராசிரியர் ஜீ.எல். அவர் சுயமாகவே குடியுரிமையைத் துறந்துவிட்டார் என்று கதை விடுகின்றார். இதன் சட்டரீதியான நிலை என்ன என்று தெரியவில்லை.
2020 ஜனாதிபதி தேர்தலில் தற்போதய ஜனாதிபதி மைத்திரி ஓய்வு பெற்ற பொலிஸ்காரன் என்ற நிலையில். அவருக்கு அதிகாரங்கள் இருக்கும் வரை சிலர் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். இதனால் மஹிந்த அணியினர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஒரு தீர்க்கமான சக்தியாகவே கருதவில்லை.
இன்று ஜனாதிபதி மைத்திரியுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டமாக மஹிந்த முகாமில் போய் நிற்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். இதனை இதற்கு முன்னரும் நாம் சொல்லி இருந்தோம். சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸா கூட இது பற்றி பேசி இருந்தார்.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் பௌத்த இனவாதத்தை முதன் மைப்படுத்தியதாகவே இருக்கும். சஜித் கூட தான் ஜனாதிபதியானால் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் நாட்டில் 25 மிகப் பெரிய பௌத்த விகாரைகளைத் நிர்மாணிக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
ரஞ்சன் ராமநாயக்க சஜித்தான் தமது வேட்பாளர் என்றும் அதேபோல் வாசு சாமல் ராஜபக்ஸதான் தமது தெரிவு என்று சொல்லி வருகின்றார்கள். தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்பும்கூட ஜனாதிhதி வேட்பாளர் பற்றி பேசுகின்றார்கள். எம்மைப் பொறுத்த வரை இவை எல்லாம் வெறும் வார்த்தைப் பிரயோகங்கள் மட்டுமே. அதற்கு அப்பால் எதுவுமே நடக்காது.
வருகின்ற 5ம் திகதி ஐதேகவும் 11ம் திகதி மஹிந்த தரப்பும் தமது வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாக சொல்லி இருக்கின்றது. அது கூட அந்தத் தேதிகளில் முடிவாக வாய்ப்புக்கள் இல்லை என்பது எமது அவதானம். இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரி எப்படியாவது அவசரமாக மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதில் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
எப்படியும் பிரதான கட்சிகளின் வலையில் இன்னும் அந்த வேட்பாளர்கள் சிக்கவில்லை என்று கூறுவதைவிட வலையைக் கையில் வைத்திருக்கும் ரணிலும், மஹிந்தவும் பிடிக்கின்ற ஆள்விடயத்தில் தயக்கத்தில் இருக்கின்றார்கள். எப்படியும் விரைவாக ஆளைப்பிடுத்துத்தான் ஆகவேண்டும்.
-நஜீப் பின் கபூர்
No comments:
Post a Comment