அத்துராலியே ரதன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஞானசார சென்றிருந்தது போன்று கல்முனையில் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்துக்கு கருணா அம்மான் மற்றும் கோடீஸ்வரன் சமூகமளித்துள்ளனர்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலை போராட்ட களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய நிர்வாகசேவை அதிகாரிகள், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
எனினும் போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அத்தோடு அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் இன்று மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும் அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் மதியம் 2 மணிக்கு அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர் .
இப்போது உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்க்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் ஆகியோர் சமூகமளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.
-நூருல் ஹுதா உமர்
No comments:
Post a Comment