கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கமைய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இன்று போராட்டக்களத்திற்குச் வந்தார். ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.
கல கொட அத்தே ஞானசார தேரர் தனதுரையில்,
மிக விரைவில் இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பேன். முடியாவிட்டால் நானும் இங்கு வந்து உண்ணாவிரதம் இருந்து இம்மக்களுக்காக குரல் கொடுப்பேன்.
இங்குள்ள மக்கள் மத்தியில் ஒரு சந்தேக நிலை உருவாகியுள்ளதை நாம் அறிவோம். அதனால் சமூக ஒற்றுமை சிதைந்து போயிருக்கின்றது.
கடந்த ஆறு நாட்களாக இந்த உண்ணாவிரதத்திலே மதகுருமார்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது இந்த போராட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஒரு குறிக்கோளை அடைவதற்கான அகிம்சா வழி இறுதி வடிவம்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்பது, 30 வருட காலமாக இந்த தமிழ் மக்களினுடைய பிரச்சினையை தீர்க்காமல் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அநீதியை எதிர்த்து இன்று உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இது சாதாரண மக்களின் பிரச்சினையல்ல. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் அரசியலை வழி நடாத்திய அரசியல்வாதிகள் தான் என்பதை மறுக்க முடியாது.
எனவே தான் இது விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேசி மிக மிக விரைவில் இந்த பிரச்சினையை தீர்த்து தருகிறோம். இல்லாது விட்டால் நான் இந்த உண்ணாவிரதத்தை இங்கு முன்னெடுப்பேன். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதே வேளை உண்ணாவிரதமிருந்த கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரர் உள்ளிட்ட 5 பேர்களும் கல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினரின் வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் சுழற்சி முறையில் கலந்து கொள்வதாகவும் அறிவித்துள்ள நிலையில் கல்முனை மா நகர சபை உறுப்பினர் ராஜன் மட்டும் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாதவிடத்து நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாகவும் உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் இன்று ஞானசார தேரர் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்தார்.
-எஸ்.அஷ்ரப்கான்
No comments:
Post a Comment