அபாயா அணிதல் சம்பந்தமாக பொது நிர்வாக அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்தை அடிப்படையாகக் கொண்டு "அடிப்படை மனித உரிமை மீறல்" தொடர்பாக பொதுமக்களிடத்தில் பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பன்னிரண்டாம் உறுப்புரிமையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமை மீறலை காரணமாக கொண்டு தங்களது ஆடை விடயத்தில் முஸ்லிம் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அடிப்படையாக வைத்தே இந்த விடயம் விவாதிக்கப்படுகின்றது.
'ஒசரி' என்ற சிங்கள மக்கள் கலாச்சாரத்தையும் 'சாரி' என்ற தமிழ் மக்கள் கலாச்சாரத்தையும் பார்க்கும்போது முஸ்லிம் மக்களுக்கும் தங்களது கலாச்சார உடையான 'அபாயா' அணியப்படும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
அடிப்படை மனித உரிமை என்பது மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகள் ஆகும்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம்.
மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை 'அடிப்படை உரிமைகள்' என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அபாயா விடயத்தில் நீதி கிடைப்பதற்காக போராட வேண்டிய கட்டாயத்துக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்கு எதிரான சட்ட நடவடிக்கையானது ஒரு மாத காலத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். "தங்களது அடிப்படை மனித உரிமை மீறிய தினத்திலிருந்து ஒரு மாத காலத்திற்குள் ஒருவனால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே அதற்கான நீதி கிடைக்கும்" என்பதே இதன் விளக்கமாகும்.
மனித உரிமை மீறல் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த விடயத்திற்காக ஒருவர் தனியாகவோ குழுக்களாகவோ அல்லது சங்கங்கள் மூலமாகவோ வழக்குகளை நீதிமன்றத்தில் பதியலாம். எல்லோரும் வழக்கில் முன்னிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் பலரும் பல்வேறு கோணங்களில் தங்களது கருத்துக்களை நீதிமன்றங்களில் விவாதிப்பதற்காக பல வழக்குகள் தொடர்வதுதான் சிறப்பானது.
ஒருவரின் அடிப்படை மனித உரிமை மீறப்படும் போது நேரடியாக நீதி மன்றத்திற்கு செல்லாமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு மாத காலத்துக்குள் முறையீட்டை மேற்கொண்டாலும் போதுமானது. ஆனால் ஒரு நிபந்தனை அந்த முறையீட்டை விசாரணை செய்வதற்காக எதிர்த்தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அல்லது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருக்கும் இடத்தில் ஒரு மாதகால கணிப்பு நீதிமன்றத்தில் விதிவிலக்காக அமையும். மனித உரிமைகள் ஆணைக் குழு கொழும்பை தலைமையாகக் கொண்டு இயங்கினாலும் அதன் கிளைகள் வவுனியா, யாழ்ப்பாணம், கல்முனை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ளன. அவற்றில் விண்ணப்பங்களை பெற்று பூரணப்படுத்தி கையளித்த பின்னர் விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது நீதி மன்ற நடவடிக்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.
அரசாங்கம் இந்த விடயத்தில் தனது சுற்று நிருபத்தை மாற்றியுள்ளது என்று பத்திரிகைகள் வாயிலாக அறியக் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சுற்றுநிருபம் ஒன்று என்பதனால் அரசாங்கத்தால் அதனை எந்த நேரத்திலும் மாற்றும் உரிமையும் உள்ளது. அதனை மாற்றுவதற்கான கால எல்லை ஒன்று இல்லை. காலத்துக்கு காலம் தேவைக்கு ஏற்ப சுற்று நிருபங்களை மாற்றலாம். ஆகவே இந்த அபாயா விடயத்தில் அரசாங்கம் தனது சுற்றுநிருபத்தை மாற்றி உள்ளது. அது இன்னும் குறிப்பிட்ட அரசாங்க திணைக்களங்களுக்கு முறையாக செல்லவில்லை. அந்த சுற்றுநிருபங்கள் குறிப்பிட்ட திணைக்களங்களுக்கு உடனடியாக கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் முடித்து பொதுமக்கள் தங்களது உரிமைகளையும் அபாயா விடயத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இத்தகைய வழக்குகளில் ஒருவரின் வெற்றியானது உரிமைமீறப்பட்டு வழக்குகளை பதிவு செய்த, செய்யாத அனைவரினதும் வெற்றியாகவே கொள்ளப்படும். எனவே அபாயா விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வழக்குகளை பதிவு செய்ய தேவையற்ற போதும் யாராவது ஒருவரேனும் கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும்.
இந்நடைமுறையானது அபாயா விடயத்திற்கு மாத்திரமின்றி சட்ட விரோதக் கைதுகள், துன்புறுத்தல்கள், பாரபட்சங்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தக்கூடியதாகும்.
இறுதியாக இந்த விடயத்தில் கூடுதலான கரிசனை கொள்ள வேண்டியது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்கள் தனிப்பட்ட ரீதியாக அல்ல .அதற்கு அப்பால் முஸ்லீம் சமூக இயக்கங்கள் ,கட்சிகள், மத நிறுவனங்கள் என்பவையாகும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்
-சட்டத்தரணி fபஸ்லின் வாஹிட் (கண்டி)
No comments:
Post a Comment