நனையத் தெரிந்த ஆடுகள்...! - sonakar.com

Post Top Ad

Friday, 28 June 2019

நனையத் தெரிந்த ஆடுகள்...!


நல்லாட்சியொன்று மலராதா? என ஏங்கிக் கொண்டிருந்த இலங்கை மக்கள் 2014 இறுதிப் பகுதியில் அதற்கான காலம் கனிந்ததாக எண்ணி அணி திரண்டார்கள். விளைவு, 2015 ஜனவரியில் முன்னைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்சவின் அதிகாரத்துக்கான அவா மக்களால் நிராகரிக்கப்பட்டது.



எனினும், பதவிக்காலம் முடிய முன்பதாகவே தேர்தலை நடாத்தித் தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயன்ற அவரால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவரைச் சூழ்ந்து, அவரது பெயரால் அரசியலில் நிலைத்து நிற்பவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. ஆதலால், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதியென அனைத்து அரசியல் உயர் பதவிகளையும் அனுபவித்தும் கூட எதையோ பறிகொடுத்த நிலையில் மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர்கிறது.

2009 யுத்த வெற்றியை பௌத்த மக்களின் வெற்றியாகக் காண்பித்துத் தம்மை சிங்கள இனத்தின் காவலராக சித்தரிப்பதற்கு மஹிந்த எடுத்த முயற்சிகளின் பின்னணியில் அவரது வழிகாட்டிகளாக, ஆலோசகர்களாக, அறிவுரை வழங்குவோராக யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லோருக்கும் மாற்றுத் தலைமையொன்று உருவாகி, தமது இருப்புகள் பாதுகாக்கப்படும் வரை மஹிந்தவின் இருப்பு அவசியப்படுகிறது.

மஹிந்தவுக்கு அடுத்தபடியாக கோட்டாபே ராஜபக்சவை முன்நிறுத்துவதன் ஊடாக மாத்திரமே மக்கள் அபிப்பிராயத்தை வெல்ல முடியும் என கணிப்பிட்டு அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதானது வெறும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டது மாத்திரமன்றி, இதன் போது அதிகாரத்தைக் கைப்பற்றாவிட்டாலும் பின்னர் வரக்கூடிய பொதுத் தேர்தலில் தமது நாடாளுமன்ற ஆசனங்களை ஆளுங்கட்சியிலோ எதிர்க்கட்சியிலோ பாதுகாத்துக் கொள்வதும் இச்சக்திகளின் தேவையாக இருக்கிறது.

இதேவேளை, 2014ல் இலங்கை கண்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறை, சர்வதேச அளவில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியை சீர் செய்வதற்கான கால அவகாசமும் இல்லாது போனதால் அதனை எதிர்க்கட்சியிலிருந்து எவ்வாற சாதிப்பது என்றும் இவர்கள் திட்டமிட, தலைமைகளுக்குள் விரிசலுடன் பலவீனமான அரசை நடாத்த விளைந்த மைத்ரி - ரணில் கூட்டணியும் நனையத் தெரிந்த ஆடுகளான முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாக்கள் ஆக்கத் துணிந்தது.

இப்பின்னணியில் மைத்ரி .- ரணில் கூட்டாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் வருடாந்த நிகழ்வாகவும்  துன்பமே அன்றாட வாழ்க்கையாகவும் அடிமை நிலையிலேயே விடிவு எனும் நிர்ப்பந்தமும் உருவாகியுள்ளது.

இன்றைய தேதியில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், பொருளாதாரம், சமூகக் கட்டுமானம் முற்றாக நலிந்து போயுள்ளதுடன் அடிப்படை உரிமைகளும் விட்டுக்கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனினும் நனையத் தெரிந்த ஆடுகளான இச்சமூகத்தின் இந்நிலை பற்றி அக்கறை கொண்டோர் வேறு யாருமில்லையென்பதால் பேரம் பேசப் புறப்பட்டதாகச் சொல்லும் முஸ்லிம் அரசியல் இன்று கெஞ்சல் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசினால் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு நீண்ட கெஞ்சலுக்குப் பின் தளர்த்தப்பட்டுள்ளது. முகத்திரை தொடர்பில் சமூகத்துக்குள்ளேயே பல்வேறு நிலைப்பாடுகளும் கருத்துக்களும் இருப்பினும் கூட சமூகத்தின் ஒரு கூறு அதனைத் தம் அடிப்படை உரிமையாகவே கருதுகிறது. ஆனாலும் இன்றைய நிலையில் தலையை மூடுவதற்காவது மீளவும் அனுமதி பெறப்பட்டுள்ளதே பெரும் சாதனையாகக் காணப்படுகிறது என்றால் மிகையில்லை.

அந்த அளவு முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் தேசிய நீரோட்டத்தில் பலவீனப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக, நாங்கள் அமைச்சுப் பதவியில் இருந்திருந்தால் அது நடந்திருக்காது என்று சொல்லக் கூடிய வாய்ப்பும் ஒரு சில அரசியல் தலைமைகளுக்கு இருக்கிறது என்பதும் கால வரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்று வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை, அதில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள், விசாரிக்கப்பட்டு வரும் நபர்கள், முஸ்லிம் உணர்வு மற்றும் சமூக உரிமைகள் - சலுகைகள் என பல விடயங்கள் இந்த அரசியலுக்குள் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய சூழ்நிலையை உருவாக்கிய கடந்த கால அரசியல் போக்கு விமர்சனத்துக்கு மாத்திரமன்றி மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டியதாகும்.

இந்நிலையில், பெரும்பான்மை சமூகத்தவரின் ஆதரவோடும் தமது ஆசனங்களைத் தக்க வைத்துக் கொள்வதாகக் கூறும் இரு முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக முஸ்லிம் விவகார அமைச்சின் கடந்த கால - எதிர்கால சமூக அக்கறையும் பங்களிப்பும் இங்கு கேள்விக்குட்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.

வருடா வருடம் ஹஜ் ஏற்பாடுகளைச் செய்வது, மீலாத் விழா நடாத்துவது தவிர இச்சமூகத்துக்குத் தேவைப்படும் வழிகாட்டல் மற்றும் அரசியல் ரீதியான விடயங்களுக்கு இவ்வமைச்சு எவ்வாறான பணியைச் செய்கிறது? செய்யப் போகிறது எனும் வினா காலக் கட்டாயமாகும். ஏனைய அரச திணைக்களங்கள் அமைச்சுக்கள் போன்று இதுவும் ஒரு திணைக்களம் தான் என அரசியல் பேசுவதானால் அதற்குத் தனியாக முஸ்லிம்  சமய விவகார அலுவல்கள் அமைச்செனும் பெயர்ப்பலகையும் அதற்குக் கட்டாயம் ஒரு அரபு அல்லது உருது பெயர் கொண்ட நபரும் அவசியமில்லை.

இவ்வமைச்சுக்கு இதையும் விட அதிகமான பணிகளும் பொறுப்புகளும் இருப்பது உணரப்பட வேண்டும். ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் பங்கேற்ற பல நபர்கள் பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறார்கள். அதில் முக்கியமாக சில கொள்கை இயக்க அமைப்புகளின் பிரதிநிதிகள் முன் வைத்த கருத்துக்கள் சாதாரண முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அறிந்தும் அறியப்படாத அல்லது முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படாத சில விடயங்களையும் தூண்டி விட்டிருக்கின்றன. இந்நிலையில், இந்நாட்டில் யார் சிறந்த முஸ்லிம்கள் அல்லது யார் நபி வழியைப் பின்பற்றி, அல்-குர்ஆன் காட்டித் தந்த மார்க்கத்தின் பால் வாழ்கிறார்கள் எனும் கேள்விக்கு  விடை தெரியாது குழம்பிப் போயுள்ளனர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள்.

ஆனாலும் இந்த வாரமும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஞானசாரவுக்கு அதுபற்றி எவ்விதக் குழப்பமும் இல்லை. காரணம், அவர் இதைத்தான் கடந்த பல வருடங்களாக சொல்லக் கூடாத 'தொனி'யென நமது உணர்வுகள் நொந்து கொண்ட தொனியில் சொல்லி வந்தார் என்பதும் பல சிங்கள அரசியல்வாதிகளாலும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு இச்சமூகத்துக்குள் அன்றாட வாழ்வும் அதனடிப்படையிலான நடைமுறைகளும், மார்க்கமும் தொடாபில் கருத்து முரண்பாடுகள் வளர்ந்திருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஏதாவது ஒரு வழியில் சம்பந்தப்பட்ட தரப்புகளை பேச வைக்க முடியுமா? ஆகக்குறைந்தது இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலாவது பிரிவினைகள் தவிர்க்கும் மன நிலையை வளர்த்துக்கொள்ள முடியுமா? எனும் ஆதங்கத்தில பல தரப்பட்ட கொள்கை இயக்கங்களைத் தொடர்பு கொண்டு உரையாடினேன். குறிப்பாக சிலோன் தௌஹீத் ஜமாத் எனும் பெயரில் தற்போது இயங்கும் அமைப்பின் முக்கிய பிரமுகர்களை கடந்த வாரம் சோனகர்.கொம் ஊடாக வீடியோ நேரலையில் இணைத்து இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு பற்றியும் அறிய விளைந்தேன். தரீக்கா தொடர்பான பிரமுகர்களிடம் கேட்டுப் பார்த்தேன். சூனியத்துக்கு வலிமையுண்டா இல்லையா என்ற விவாதத்தினால் பிரிந்து நிற்கும் தௌஹீது பெயர் கொண்ட அமைப்புகளிடம் உரையாடிப் பார்த்தேன், ஈற்றில் தனித்தனியாக தமக்கு முஸ்லிம் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கும் இவர்கள் யாரையும் பொதுவான முஸ்லிம் அடையாளத்துக்குள் வைத்து இணக்கப்பாட்டைக் கொண்டு வருவது அத்தனை எளிதில்லையென்றாலும் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிம் விவகார அமைச்சும் அதில் பணியாற்றுபவர்களும் இக்கூறுகளில் எதை ஆதரிக்கிறார்கள் என்றும் தெரிவுக்குழு விசாரணையின் போது கேள்வியெழுப்பப் பட்டதனால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே கேட்டுப்பார்க்கலாம் என இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை கை கூடும் சாத்தியம் தெரியவில்லை. ஆயினும், இவ்வாறான இக்கட்டான கட்டத்தில் பதவியிலுள்ளவர்கள் தமது சமூகக் கடமையைத் தவற விடுவதானது எதிர்கால தலைமுறைக்கு எவ்வாறான ஆபத்துக்களை உருவாக்கும் எனும் அச்சம் மேலோங்கியிருப்பதை மறைக்கவும் முடியவில்லை.

அந்த அளவு தமது கொள்கைகளில் ஒவ்வொருவரும் தீவிரமாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். தமக்குரிய விடயங்களில் மாத்திரமே அக்கறை கொண்டிருப்பதனால் வாத-விவாதங்களில் ஈடுபட்டு இன்னொரு வகையில் காட்டியும் கொடுக்கிறார்கள். இப்பின்னணியில் இவையனைத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் அல்லது தலைமைத்துவத்தைத் தர வேண்டியவர்கள் யார்? எனும் கேள்வி தொக்கு நிற்கிறது.

மேலோட்டமாகவன்றி, ஆழமாக சில விடயங்களை அலசும் போது கட்டுமானச் சிதைவின் விளைவை உணர முடியும். இதனைத் தெளிவுபடுத்துவதற்காக அண்மைய உதாரணத்தை முன் வைப்பின், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருப விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். இதன் போது, வழக்காடியே ஆக வேண்டும் என்று சிந்தித்த ஒரு தரப்போடும் நான் தொடர்பிலிருந்தேன். இதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என சிந்தித் இன்னொரு தரப்பும் அதேவேளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அரசியல்வாதிகளின் ஈடுபாட்டில்  எந்த அமைச்சு சுற்று நிரூபத்தை வெளியிட்டதோ அந்த அமைச்சூடாகவே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தரப்பையும் அவதானிக்கக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் புத்தளத்திலிருந்து துணிச்சலாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டது. ஆனாலும் இவை ஒவ்வொன்றும் தனித்தனி கூறுகளாகவே தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தது.

சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு ஒரே  விடயத்துக்காக நடாத்தப்படும் போராட்டத்தை ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சிகள் கடும் சோதனைகளை மேற்கொண்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் புத்தளம் குழுவுக்கும் கொழும்பு சட்டத்தரணிகள் குழுவுக்கும் முதல்நாளிரவாவது தொடர்பாடல் உருவானது மன நிறைவைத் தந்தது. இன்னொரு புறத்தில் வழக்காடப் போவதாக தொடர்ந்தும் பேசிக்கொண்டேயிருக்கும் குழுக்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  எது எவ்வாறாயினும் திருத்தப்பட்ட சுற்று நிருபம் வெளிவரும் வரை உத்தரவாதம் இல்லையென்பதால் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைக்கும் இன்னும் அவசியமிருக்கிறது என்பது உணரப்பட வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலைகளின் போது அதனை அமைச்சு மட்டத்திலேயே தீர்த்துக் கொள்வதற்கும் பொது மக்கள் மத்தியில் நிலவும் குழப்பம் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்குமான பொறுப்புகள் பிரத்யேகமாக சமய - சமூக விவகாரத்துக்காக இயங்கும் அமைச்சின் பொறுப்பில்லையா? என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே வினவ ஆர்வம் கொண்டுள்ளேன்.

துரதிஷ்டம், சமூகத்தின் ஒவ்வொரு சிவில் அமைப்புகளும் கூட தனித்தனியான நிழல் ராச்சியங்களை நடாத்திக் கொண்டிருப்பதனால் முஸ்லிம் உணர்வுக்கு அப்பாற்பட்ட தேசிய நலன் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கூட கிரிக்கட் போட்டிகளின் போது மாத்திரமே வெளிக்காட்டி தலை குனிந்து கொள்கிறது நன்றாகவே நனையத் தெரிந்த ஆடுகளாக மாறிப் போயுள்ள இன்றைய முஸ்லிம் சமூகம்.

இதன் உச்சத்தைத் தொடும் வகையில், கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தினசரி 1250 பேருக்கு இலவசமாக பகலுணவை வழங்கி வந்த முஸ்லிம் தொண்டு நிறுவனமான ஜனபோஷ, இனவாத கருத்துக்கள் மற்றும் அச்சத்தால் தமது தொண்டு நிறுவனத்தைக் கூட கை விட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே  தான் சொல்லவில்லையெனச் சொல்லும் ஒரு விவகாரத்தை பிரசுரித்து அதனூடாக கடந்த ஏழு வருடங்களால நல்லெண்ணத்தில் வழங்கப்பட்டு வந்த உணவு விநியோகத்தைக் கூட முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் இச்சமூகம் நிறுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் செயற்பாட்டு முகாமையாளருடன் இது பற்றிப் பேசியபோது, அவரிடத்தில் காணப்பட்ட கவலையும் அதேவேளை அச்சமும் அதீத சோகத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை. இது போன்ற விவகாரங்கள் ஈற்றில் அவரவர் விவகாரங்களாக தனிமைப்பட்டுப் போவதனால் நாளடைவில் அரசியல் இலாபத்துக்காக அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டாலும் கூட அவரவர் வீட்டுக்கதவை ஆபத்து தட்டும் வரை ஊமையாயிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள சமூகம் தொடர்ந்தும் இனவாத மழையில் நனைந்து கொண்டுதான் இருக்கும்இ அது கண்டு ஓநாய்கள் அவ்வப்போது அழுது கொண்டுதானிருக்கும்.

இதையும் தாண்டி களப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் செயல்வீரர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆயினும், காலத்தின் தேவையறிந்து காணப்பட வேண்டிய மாற்றத்தைக் கூட ஓரணியில் திரண்டு காண முடியாத நிலையில் அல்-குர்ஆனுக்குக் கூட அவரவர் கொள்கை இயக்கங்களின் நலன் அடிப்படையில் விளக்கவுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இதர சமூகம் அறிந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு கொள்கை இயக்கம் விமர்சிக்கப்பட்ட கட்டுரையொன்றின் கீழ், இவர் அல்-குர்ஆனில் இருந்து தமக்கு சாதகமான வசனங்களை மாத்திரம் எடுத்துள்ளார் என ஒரு பின்னூட்டத்தைக் கண்ட போது அல்-குர்ஆனிலேயே உனக்கு பாதகமான வசனங்களும் இருக்குமாக இருந்தால் மார்க்கத்தை நீ மீளக் கற்றுக்கொள்ளும் தேவையிருக்கிறது என என் உள் மனது அந்த கருத்தாளரைப் பார்த்துக் குமுறியது. ஆனாலும், அது அவன் மனதை உறுத்தப் போவதில்லையென்பதால் மழையில் நனையும் மந்தைகளையும் காத்திருக்கும் ஓநாய்களையும் எச்சரிக்கையுடன் பார்த்துப் பகிர்கிறேன்.

2ld3lJX

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
https://www.facebook.com/irfaninweb




No comments:

Post a Comment