சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பிய ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) இன்று(26) காலை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை பொலிஸ் பரீசோதகர் பஸீல் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வாறு ஆஜர் படுத்தப்பட்ட ஷஹ்ரானின் மனைவி தொடர்பான விசாரணை நீதிவானின் மூடிய அறையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த இவ்விசாரணையில் 3 சாட்சியாளர்கள் வேறு வேறாக ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும் எந்த விசாரணை குறித்த சாட்சியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது என்பதை ஊடகங்களுக்கு அறிவிக்க பதிவாளர் தயக்கம் காட்டினார்.
பின்னர் ஷஹ்ரானின் மனைவி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கும் சிறிது நேரம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விடயங்களையும் தான் அறிந்த தாக்குதல் விடயங்களையும் அந்த வாக்குமூலம் ஒன்றில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்தொகுதியில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில் ஷஹ்ரானின் மகளான பாத்திமா ருஸையா(வயது-3) நீதிமன்ற வளாகத்திலும் பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் செல்லமாக விளையாடி கொண்டிருந்தார்.
மேற்குறித்த விசாரணைகளை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை அன்று விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் கொழும்பு நோக்கி ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) மற்றும் மகள் ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment