தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கிய தீவிரவாத கும்பலுக்கு கடந்த காலங்களில் நிதியுதவி வழங்கியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ஆராய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த அமைப்பைக் கட்டி வளர்க்க உதவிய குளியாப்பிட்டியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தகத்தில் ஈடுபடும் முக்கிய நபர் ஒருவரை குற்றத்தடுப்புப்பிரிவனர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமான முறையில் குறித்த அமைப்புக்கு நிதி வந்து கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை பெரும்பாலானவை துருக்கி ஊடாகவே வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டில் குறித்த அமைப்புக்கு பாரிய பள்ளிவாசல் ஒன்றை காத்தான்குடியில் நிறுவவும், பெருந்தொகை வாகனங்களை கொள்வனவு செய்யவும், தொழிற்படவும் தேவையான நிதியுதவியை வழங்கிய முக்கிய புள்ளிகளை இலக்கு வைத்து தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
தஃவா பணி செய்வதாகக் கூறிக்கொண்டு பல நூறு அமைப்புகள் பொது மக்களிடமிருந்தும், தனவந்தர்களிடமிருந்தும் நிதியுதவிகளைப் பெறுவதுடன், க்றீன் ஸ்க்ரீன் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ கமரா ஒன்றின் உதவியுடன் முகப்புத்தகத்தில் ஆக்ரோசமான கருத்தியலையும் விதைத்து வருகின்றன. இதேவேளை கடந்த அரசின் போது தேசிய புலனாய்வுத்துறையின் உளவாளிகளாக பணியாற்றியதாக குற்றஞ்சாட்டப்படும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு பற்றியும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment