ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் இன உணர்வு அல்லது இனம் தொடர்பான பார்வைகள் மிகவும் மாறிவிட்டன. நீண்டகாலமாக உணர்வு நிலையில் காணப்பட்ட இன ரீதியான பார்வை தற்போது வீரியமிக்க செயல்நிலையை அடைந்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களாக இவ்வளவு காலமும் கற்பிக்கப்பட்டு போசிக்கப்பட்டு வந்த அனைத்தும் ஓரிரு நாட்களில் அடிப்படைவாத்தின் அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டன.
அடிப்படை வாதத்தின் மிக தீவிரத்தன்மையை போதித்து அதனை செயலில் காட்டிய பயங்கரவாதக் கும்பலுடன் முஸ்லிம் சமூகத்தின் பொதுவான அடையாளங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
ஆடை அணிகலன், உணவு, கல்வி, அரசியல், கொடுக்கல் வாங்கல், குடும்ப உறவு, திருமணம் என வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமிய சமூக அடையாளங்கள் அனைத்தும் கேலிக்குரியதாகிவிட்டன.
அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மீக நிறுவனங்களின் தலைவர்கள் வரை அனைவரும் ‘நாம் எமது வாழ்வுமுறையை சுய விமர்சனம் செய்து கொள்கிறோம். எமது வாழ்வு முறையினுள் பல தவறுகள் நடைபெற்றுவிட்டன. அதனை நாம் மாற்றிக் கொள்கிறோம். நாம் ஆரம்ப காலங்களில் எவ்வகையான சமூக அடையாளங்களோடு வாழ்ந்தோமோ அந்த அடையாளங்களுக்கு மீளச் செல்கிறோம்’ என்ற உறுதி மொழிகளை நாளுக்கு நாள் வழங்கிவருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நமது சமூகம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விடயங்களையும் செய்து விசுவாசத்தை உறுதிப்படுத்த முயற்சித்து வருகிறது.
இம்முறை வெசக் நிகழ்வுகளில் நாம் காட்டும் ஈடுபாடும் பங்கேற்பும் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
இன்னொரு பக்கம், இஸ்லாத்தின் பெயரில் வாழ்ந்து கொண்டிருந்த குராபிகளும், சடவாதிகளும், மத விரோதிகளும் களத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் இஸ்லாத்தின் மீதும் அதன் வாழ்வொழுங்கின் மீதும் வசை பாட ஆரம்பித்துவிட்டனர்.
நாம் கலாசார ரீதியாக அடிமைப்பட்ட சமூகமாக மாற்றப்படும் காலத்தில் பிரவேசித்துள்ள எச்சரிக்கையை பலரும் விடுத்துள்ளனர். இந்நிலை மிக மோசனமான விளைவுகளை கொண்டுவந்து தரும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்காது.
முஸ்லிம் சமூகம் தான் விட்ட தவறுகளை ஏதோ ஒரு நிர்ப்பந்த அடிப்படையில் சரி செய்வதற்கும் அதற்கான ஒழுங்குமுறைக்கு மீளவும் தயாராகிவிட்டது. இச் செயன்முறை கிட்டத்தட்ட உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
எல்லாம் செய்த பின்னரும் ஒரு கேள்வி எஞ்சி நிற்கின்றது. அக்கேள்வியே எல்லாவற்றுக்குமான விடையாகவும் அமையக் கூடும். இந்த ஒரு மாதத்தில் மிக உயர்ந்த குரலில் பலராலும் கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி அது. ஆனால் அக்கேள்வி எங்கும் இதுவரை யாராலும் கேட்கப்படவில்லை.
இந்த நாட்டில் காணப்படும் பௌத்தம் அல்லது சிங்களக் கலாசாரம் நூற்றுக்கு நூறு புனிதமான வாழ்வொழுங்கைக் கொண்ட உன்னதமான தொன்றா? அதனை மீள்பரிசீலனைக் குட்படுத்த தேவையில்லையா? பௌத்த – சிங்கள கலாசாரம் பிரச்சினைக்குரியதொன்றில்லையா?
இலங்கை மூன்றாம் மண்டல, வளர்ச்சியடைந்து வரும், வறுமைக்குரிய நாடாகவும், இனவாதம் மற்றும் தீவிரவாதம் பரவி இக்கட்டில் நிற்பதற்கு சிங்கள - பெளத்த போதனைகளும் வாழ்வு முறையும் காரணம் என்பது மறைக்க முயற்சிக்கப்படுகிறது.
சில அம்சங்களை இங்கு குறிப்பிடலாம்:
1. இலங்கையில் நடைபெற்ற கலவரங்கள் மற்றும் வன்முறைகளின் பின்னால் சிங்கள - பௌத்த வாழ்வு முறையே இருந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பின்னால் பௌத்த பேரினவாதமே இருந்துள்ளது. வரலாறு நெடுகிலும் இரத்த வாடையும் பிணக்குவியல்களும் நிறைந்து காணப்படும் பேரினவாதத்தின் சமய-வாழ்வு முறையினதும் புனிதம் தான் என்ன?
அண்மைய வரலாற்றை எடுத்து நோக்குவோம். மாவனல்ல, அளுத்கம, திகன, தெல்தெனிய, மினுவங்கொட, குளியாப்பிட்டி ஆகிய கலவரங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டவை?
ஏன் இக்கலவரங்களின் பின்னால் சிங்கள – பௌத்த காடைத்தனமும் பேரினவாதமும் இருக்கின்றன என்று எம்மால் பகிரங்கமாக குற்றம் சுமத்த முடியாதுள்ளது?
ஏனைய இனங்களின் மீது புரிந்து வரும் வன்முறை பிழையானது , எனவே உங்கள் இன ரீதியான சிந்தனைகளை மறு பரிசீலனை செய்யுங்கள் என்றும் ஏன் யாரும் கோரிக்கை முன்வைக்கவில்லை?
2. பேரினவாதத்தின் அடிப்படையிலான வன்முறைகளின் பின்னர் அவர்களின் சமய வழிகாட்டிகளும் காரணமாகவும், காரணியாகவும் தூண்டுகோளாகவும், ஆசான்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்துள்ளனர்..
அண்மைக்காலமாக இப்பேற்பட்ட பேரினவாத துறவிகள் இனவாதத்துடனும் ஏனைய இனங்கள் மீதான வன்மத்துடனும் நடந்துகொண்டுள்ளனர். அடிதடி, அச்சுறுத்தல் என அவர்களின் அக்கிரம்ம ஏதோ ஒரு வகையில் தொடர்கின்றது.
அவர்கள் இழைக்கும் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கடைசியாக அவர்களுக்கு என தனியான சுற்றவியல் சார்ந்த நீதி மன்ற கட்டமைப்பை உருவாக்குமளவுக்கு தேர்ர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன.
எனினும் அவர்களுக்கான தனியான பிரிவேனா கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகள் தான் இவற்றுக்குக் காரணம் என்று ஏன் யாரும் குற்றம் சாட்டுவதில்லை?
இதனை மீள் பரிசீலிக்க ஏன் யாரும் கோரவில்லை. இதன் பாடத்திட்டத்தை யாரும் ஏன் குறை கூறவில்லை. இதன் போதனை முறையை ஏன் யாரும் பிழை காணவில்லை?
3. பௌத்த சிங்கள சமூகத்தின் குடும்ப அமைப்பு முற்றாக சிதையத் தொடங்கியுள்ளது. இலங்கையில் நாளாந்தம் பொதுச் சட்டத்தின் கீழ் விவாக விடுதலை பெறுபவர்களின் எண்ணிக்கை 400 ஆக பதியப்பட்டுள்ளது.
சிங்கள – பௌத்தர்களின் திருமண வயது 35 – 40 ஆக அதிகரித்துள்ளது. ஆடம்பரம் மற்றும் மேற்கத்தேய மோகம் காரணமாக திருமண செலவு அதிகரித்து சாதாரண பொதுமக்கள் திருமணத்திற்காக பல வருடங்கள் சேமிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதிகள் மலிந்துவிட்டன. எல்லா நகர்களிலும் விடுதிகள் இயங்குகின்றன. சமபாலுறவுக்கான கழகங்கள் உருவாகிவிட்டன. குடும்ப அமைப்பு முற்றாக சிதைவடைந்து சந்ததி உருவாக்கம் குறைவடைந்து விட்டது.
இந்த சீரழிவுக்கு அவர்களின் வழிகாட்டல்கள் தான் காரணம் என்றும் இந்த வழிகாட்டல்கள் ஏன் மீள்நோக்கப்படக் கூடாது என்றும் யாரும் கேள்வி எழுப்புகிறார்கள் இல்லை.
4. நாட்டின் பெரும்பான்மையினருக்கான வணக்கஸ்தலங்களை விட மதுபாவனைக்கான நிலையங்கள் அதிகரித்துவிட்டன. போதைக்கான வாயில்கள் திறக்கப்பட்டு அது மிக மலிதானதாக மாற்றப்பட்டுவிட்டது.
5. சிங்கள பெரும்பான்மையினருக்கான பிரத்யேகமான ஆடைக் கலாசாரம் மரணித்துவிட்டது. பன்சலைகளில் சில் எடுப்பதற்குக் கூட டெனிமும் ரீ – சேர்ட்டும் அணிந்து தான் செல்கின்றனர்.
வயதான பாட்டிகளிடம் மாத்திரமே ஒட்டிக் கொண்டிருக்கும் சிங்களக் கலாசாரம் மடிந்து கொண்டிருக்கின்றது.
6.அரசியல், ஊழல் மோசடி, கொலை, கொள்ளை என அனைத்தும் மிக உயர்ந்த வீதத்தில் பதிவாகும் நாடுகள் பட்டியலில் இந்நாட்டுக்கு விசேடமான இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஏன் இவை பெரும்பான்மையினரின் வாழ்வுமுறையினை கேள்விக்குட்படுத்தக் கூடிய விடயங்களாக நோக்கப்படவில்லை?
இவ்வாறு மிக நீண்ட பட்டிலில் சிங்கள – பௌத்த வாழ்வு முறையை மறு பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்கான சான்றுகளை அடுக்கிச் செல்லலாம்.
ஆனால் இவற்றை பொது வெளியில் கேட்பது யார்?
முஸ்லிம்களாகிய நாங்கள் எமது வாழ்வுமுறை குறித்து மீள் பரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டோம். ஆனால் உங்கள் வாழ்வு முறையில் காணப்படும் இந்த நிலையிலிருந்து மீள நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று யார் அவர்களிடம் உரத்துக் குரல் எழுப்புவது?
முடிவாக, இஸ்லாமிய அடையாளங்கள் அனைத்தும் அடிப்படைவாத்தின் அடையாளம் எனில் அடிப்படைவாதியாகவே இருந்துவிட்டுப் போவோம். ஆனால் எம்மிடையே இருக்கும் உண்மையான அடிப்படைவாத்தை அல்லது தீவிரவாத்த் துடைத்தெறிந்து எம்மை சீரான வாழ்வுக்காக ஒழுங்குபடுத்திக் கொள்வோம். அதனை உள்ளிருந்து ஆரம்பிப்போம். இச்செயன்முறையில் கரைந்துவிடாமல் எமது தனித்துவத்துடன் அவதானமாக இருப்போம்.
அதேவேளை, பெரும்பான்மையினரின் கலாசாரத்திற்கும் வாழ்வு முறைக்கும் வாருங்கள் என்ற கோரிக்கையை முற்றாக மறுப்போம். அவர்கள் தமது வாழ்வுமுறை குறித்தும் சமூக ஒழுங்கு குறித்தும் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் உரக்கச் சொல்வோம். அதுவே நீண்ட கால ஆரோக்கியமான இலங்கையைக் கட்டியெழுப்புதவற்கான தீர்வாக அமைய முடியும்.
-Jowshi J.
No comments:
Post a Comment