ஓ.. அவர்கள் எல்லோரும் 'மௌனித்து விட்டார்கள்' ! - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

ஓ.. அவர்கள் எல்லோரும் 'மௌனித்து விட்டார்கள்' !


அரசாங்கம் நாட்டின் கட்டுப்பாட்டையிழந்துள்ளதை பறைசாற்றும் வகையில் நாடெங்கிலும் மக்கள் அச்ச சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.



இலங்கையில், முஸ்லிம்களின் பெயரால் அரங்கேற்றப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகளை ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து எதிர்த்ததுடன் பயங்கரவாதிகளையும் கைது செய்ய பேருதவி செய்தனர். இதற்கு எந்த அரசியல்வாதியும் வழிகாட்டவில்லை, மக்கள் தாமாக உணர்ந்து செய்தனர்.

இன்று அதே மக்கள் அச்சத்துக்குள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டும் பாரிய அளவில் பொருளாதார இழப்புகளை சந்தித்தும் வருகின்றனர். இந்நிலையில், அன்று ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்பட்டபோது அணி திரண்டது போன்று ஒரு அரசியல் சக்தி அணி திரள மறுப்பதும் ரணில் விக்கிரமசிங்கவும் மௌனமாக இருப்பதும் கவலைக்குரிய விடயங்கள்.

பேரினவாத காடையர்கள் தாம் விரும்பியதை செய்து முடித்த பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதுமான வரலாறு 2014 இலிருந்து தொடர்கிறது. 2015ல் தமது கோபத்தை ஆட்சி மாற்றத்துக்கான வழிமுறையாக மாற்றிய மக்கள் இன்று அதே அரசின் கையாலாகாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மௌனித்து, முடங்கிப் போயுள்ளனர். யாரிடமிருந்து உதவி கிடைக்கும் என்பதை விட யாரால் இப்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தி மூச்சுவிடும் இடைவெளியை உருவாக்க முடியும் என்ற கேள்விக்கும் பதிலும் இல்லை.

குருநாகல், மினுவங்கொட பகுதிகளில் வெளியிடங்களிலிருந்து பஸ்களில் 'காடையர்கள்' இறக்கப்பட்டதாகவே பரவலாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளமைக்கான போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இவை தொடர்பில் என்றாவது விசாரணை இடம்பெறுமா? என்றாவது நீதி பிறக்குமா? என்றால் அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. ஆதலால், நடந்த பின் இழப்பீடு பெற்றுக் கொள்வதை விட நடக்குமுன் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசியல் பிரதிநிதிகளின் கடமையாக இருக்கிறது.

இது எந்த அளவு தூரத்துக்கு சாத்தியம்? என்ற கேள்விக்கு அரசியல்வாதிகளுக்கே பதில் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தற்சமயம் விடையின்றி மௌனித்திருக்கிறார்கள், அது போலவே அரசும் - அரசின் தலைவர்களும் இருக்கிறார்கள்.  இந்நிலையில் சுய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை முஸ்லிம்கள் வன்முறையை ஒரு போதும் ஆயுதமாகக் கொண்டதில்லை. மார்க்கத் தலைமைகளும் எதைச் சொல்வது என்று தெரியாமல் மௌனம் காக்கும் இந்நேரத்தில் இறைவின் பாதுகாப்பை வேண்டி தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

நாடெங்கிலும் வன்முறை பரவுகின்ற நிலையில் இது எல்லா பகுதியில் வாழும் மக்களுக்கும் அவசியமாகிறது.

-Sonakar.com

No comments:

Post a Comment