ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளை அவசர அவசரமாக அடக்குவதற்கு முஸ்லிம் சமூகம் முழு ஒத்துழைப்பை வழங்கியது.
தேசிய பாதுகாப்பு எனும் பேரில் சமூகத்தின் ஒரு பகுதியினர் பேணி வந்த ஆடைக்கலாச்சாரம் விட்டுக் கொடுக்கப்பட்டது. பள்ளிவாசல்களை அவமதிக்கும் வகையில் படையினர் உட்புகுந்து செய்து வரும் அத்துமீறல்களையும் சமூகம் பொறுத்துக் கொண்டுள்ளது. வீடுகளில் உள்ள கூர்மையான பொருட்கள் எல்லாம் ஆயுதமாக வர்ணிக்கப்பட்டு தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகிறது, அதைக் கூட கால சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொறுத்துக் கொண்டு ஒத்தாசை வழங்கி வருகிறது முஸ்லிம் சமூகம்.
தமது சித்தார்ந்தத்துக்காக தீவிரவாதத்தை போதிக்க விளைந்தவர்களை நிராகரித்துள்ள சமூகம் யாருடையதோ அரசியல் தேவைக்காக தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பழி சுமக்கும் சமூகமாக மாற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது.
வீடுகளில் காணப்படும் கத்தி கூட 'ஆயுதமாக' சித்தரிக்கப்படும் சூழ்நிலையில், முஸ்லிம்களைத் தாக்குவோர் மாத்திரம் 'எதை' வேண்டுமானாலும் எடுத்து வரலாலம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இராணுவத்தின் முன்னிலையிலேயே வாகனங்களை எரிக்கலாம், ஊரடங்கை மீறி வீடுகளை உடைக்கலாம், வழிபாட்டுத்தளங்களுக்குக் கல் எறியலாம் என்றால் இந்நாட்டின் பொது நீதி யாரைத் திருப்திப்படுத்துகிறது எனும் கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் மீது 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான காத்திரமான நடவடிக்கைக்காக இதுவரை காத்திருக்கையில் மீண்டும் இச்சமூகம் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடுவதானது, தவறான சிந்தனைகளுக்க நியாயங் கற்பிக்கும் அபாயத்தை சமூகம் தவிர்க்க விரும்புகிறது. ஆனாலும், அரசியல் அதன் பால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை.
இந்நிலையில், மே மாதம் 05ம் திகதி சில கால பகை தீர்க்க விளைந்த இனவாதம் முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள், சொத்துக்களைக் குறி வைத்து அவசர அவசரமாக தாக்குதலை நடாத்தி இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு இனவாதிகளுக்குத் தேவையான அவகாசம் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டதெனும் குற்றச்சாட்டு, அளுத்கம - திகன வன்முறைகளில் கற்றுக்கொண்ட பாடத்தோடு தொடாகிறது.
இப்போது எல்லா மக்களுக்கும் பொதுவான அரசு, திட்டமிட்டு ஒடுக்கப்படும் முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வாறான நீதியை வழங்கப் போகிறது, அல்லது இவ்வாறான தாக்குதல்களை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறது என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் தான் கொதித்தெழுமா என்ற கேள்விக்கு அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளே பதிலளிக்கப் போகிறது. சமூகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
-சோனகர். கொம்
No comments:
Post a Comment