இன்றைய தினம், அவிஸ்ஸாவெல்ல, புவக்பிட்டி தமிழ் பாடசாலைக்குச் சென்ற முஸ்லிம் ஆசிரியைகள் தடுக்கப்பட்டு கலாச்சார ஆடைகளை மாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னணியில் சர்ச்சை உருவாகியிருந்தது.
இவ்விடயம் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் சூழ்நிலைக்கான சிறந்த தீர்வாக முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. 10 ஆசிரியைகள் உட்பட 12 பேர் இவ்வாறு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் ஆளுனர் அலுவலகத்துக்கு இப்பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்க வந்திருந்த குறித்த பாடசாலை அதிபர் தனக்கும் இடமாற்றம் தருமாறும் தானும் அதிருப்தியான சூழலை எதிர்கொள்வதாகவும் ஆளுனர் அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை முன் அநாகரீகமாக நடந்து கொண்டதுடன் ஆசிரியர்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்ட குறித்த நபர்களின் விபரம் நாளை புதன் கிழமை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என சோனகர்.கொம்முக்கு தெரிவித்த ஆளுனர் அசாத் சாலி, ஜனாதிபதி உரிய நடவடிக்கையெடுப்பார் என நம்புவதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரும் பொலிசாரும் கூட பக்க சார்பாக நடந்து கொண்டமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment