தகவல் தொழிநுட்பத்தின் அபரித வளர்ச்சியில் சுருங்கிப் போயுள்ள உலகம் இன்று தேச எல்லைகளைக் கடந்து சித்தார்ந்தங்களால் பிணைக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் வருடங்களைத் தாண்டி மனித குலத்தின் அமைதியை மதங்களின் பெயரால் அச்சுறுத்திக் கொண்டு வரும் சக்திகள் சிலுவைக்கும் பிறைக்குமிடையிலான யுத்தத்தை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
துரதிஷ்டவசமாக, 30 வருட உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்து இப்போதுதான் தலைதூக்கிய இலங்கை மீண்டும் அதாளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது. ஸ்ரீலங்கா எனும் பெயர் தவறான காரணம் ஒன்றுக்காக இன்று உலக அளவில் பேச்சாக மாறியிருக்கிறது. இரண்டு வாரங்கள் கடந்தும், இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நியுசிலாந்தில் தனி மனிதன் ஒருவனால் நடாத்தப்பட்ட தாக்குதலின் சித்தார்ந்த அடிப்படைக்கும் இலங்கையில் ஐ.எஸ். அனுதாபிகளாக மாறி தீவிரவாத தாக்குதலை நடாத்தியவர்களுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லையாயினும் இலங்கை தாக்குதல் இரண்டு வாரங்களாகியும் இன்னும் சூடான தகவலாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இத்தீவின் அனர்த்தத்தில் இந்தியா, அமெரிக்கா மற்றும் இன்ன பிற வெளிநாடுகள் கொண்டிருக்கும் ஆர்வமும், தாக்குதல்தாரிகள் தமது சர்வதேச விளம்பரத்துக்காக தேர்ந்தெடுத்த இலக்குகளும் இதில் பிரதான பங்களிக்கின்றன. இப்பின்னணியில் இலங்கையில் முஸ்லிம்களின் ஒரு பகுதியினரால் தற்காலத்தில் பின்பற்றப்படும் ஆடைக் கலாச்சாரத்துக்கெதிராகவும் இறுக்கமான சட்டம் பாய்ந்துள்ளது.
போதாதற்கு, வருடக்கணக்கில் முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்துறைகளும் இன்று சந்தேகத்தின் பிடியில் சிக்கி கைதுகளும் - தடுத்து வைப்புகளுமாக புதிய அத்தியாயம் தொடர்கிறது. இதன் முடிவு? எது என்பதற்குத் தற்போது தெளிவான விடையில்லாயினும் பயன்பெறுவதற்குக் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஒரு சமூகத்துக்குள் எண்ணிலடங்கா கூறுகள் உள்ளதென்றால் அது இலங்கை முஸ்லிம் சமூகம் தான் என அடித்துக்கூறும் அளவுக்கு கொள்கை இயக்கங்கள், தாம் ஆதரவளிக்கும் வெளிநாடுகள், வெளிநாட்டு அரசியல் சித்தார்ந்தங்கள், அவற்றைப் போதிக்கம் ஜமாத்துகள் என பல அடிப்படையில் தமக்குள் எண்ணற்ற பிரிவுகளை உருவாக்கிக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக தறிகெட்டுப் போயிருந்ததா? எனும் கேள்வியை ஒவ்வொருவரும் நின்று நிதானிக்கக் கடமைப்படுகிறோம்.
2012ம் ஆண்டு முதல் இனவாத சூழ்நிலையால் மன உளைச்சலுக்கும் அச்சத்துக்குமுள்ளாகித் தவித்த போதிலும், இந்த சமூகத்தின் உட்கட்டுமானம் பாரிய மாற்றம் எதையும் காணத் தவறியதன் விளைவுதான் சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாக்கத்தின் மீதான அலட்சியமா? என்பதும் தமக்குத் தாமே கேட்கப்பட வேண்டிய கேள்வி. அத்தோடு ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் சொல்லிச் சென்ற தீவிரவாதத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் உடன்படுகிறதா? என்பது அரச தரப்பினர் ஐயமின்றி அறிந்து தெளிவு பெற வேண்டிய விடயம்.
ஜே.வி.பி காலத்திலோ, விடுதலைப் புலிகள் காலத்திலோ இல்லாத வகையில் தமது சமூகத்துக்குள் இருந்த, இருக்கும் தீவிரவாதிகளை உடனடியாக அடையாளம் காட்டுவதில் மும்முரமாக செயற்பட்டு பாதுகாப்பு படையினரின் பணியை இலகுவாக்கிய பங்களிப்பு ஒன்று மாத்திரம் இலங்கை முஸ்லிம்கள் மீதான சந்தேகப் பார்வையை உடைத்தெறியப் போதுமானதா? என்பதுவும் நடைமுறை விடயங்களைக் கொண்டு அலசப்பட வேண்டிய கேள்வி.
அவ்வாறாயின், சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் - எதிர்வினைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஏதோ ஒரு பாரிய குழியில் நாம் வீழ்ந்து விட்டோம் என்பது உணரப்பட வேண்டும். மீளெழுவதற்கு ஒவ்வொருவரும் தனித்தனி வழிகளைத் தேடாது சேர்ந்து பயணிக்கும் அவசியம் என்பதன் அடிப்படை முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஒன்றில் யாரையாவது ஓஹோ என புகழ்வது அல்லது தரக்குறைவாக இகழ்வதுவே தமது சமூகக் கடமையென சமூக வலைத்தளங்களில் காலந்தள்ளும் இளைஞர்களும் ஆற அமர சிந்திக்க ரமழான் நம்மை அண்மித்திருக்கிறது. இக்காலத்தில் நம் சிந்தனைகளை மெருகூட்டி, எதிர்காலத்தைக் கருத்திற்கொண்ட சிந்தனை மாற்றங்களை உருவாக்கிக் கொள்ளவும் இது அவகாசமாக அமைகிறது.
உலமாக்களிடம் மார்க்கக் கல்வியைப்பெற்றுக்கொள்ளும் பாரம்பரியம் இன்னும் காப்பாற்றப்பட வேண்டுமானால், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முதலில் நவீன மயப்பட வேண்டும், காலத்திற்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுக்கவும் கருத்தியலை மாற்றக்கூடிய நவீன சிந்தனைவாதிகளை தம் அமைப்பில் உள்வாங்க வேண்டும்.
அண்மையில் தெரண தொலைக்காட்சியில் தோன்றிய அம்ஹர் மௌலவிக்கு சமூகம் வழங்கிய வரவேற்பு இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும். உலக வரலாற்றில் சிலுவைக்கும் - பிறைக்குமிடையிலான பாரிய யுத்த பிரகடனங்கள் செய்யப்பட்ட போது கூட வரலாற்று ரீதியாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஏனைய மதத்தவர்களுடன் மென்மைப் போக்கோடு வாழ்ந்து வந்த பக்கங்களை புரட்டிக் கற்பிக்க வேண்டும்.
இஸ்லாம் என்றாலே கடும்போக்குவாதமெனும் கருத்தியல் கடந்த இரு தசாப்தங்களாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இதுவரை நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? அதனை எவ்வாறு எதிர்கொண்டோம்? எமக்கடுத்த தலைமுறையினரை எவ்வாறு தயார் படுத்தியிருக்கிறோம்? எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்று சிந்திப்பது ஒவ்வொருவருக்கும் கடமையாகிறது. அதைச் செய்ய அரசியல்வாதகளிடமோ அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடமோ அல்லது அவர்களை எதிர்ப்பதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டிருக்கும் ஆக்ரோஷ ஜமாத்துகளிடமோ தங்கியிருக்க வேண்டிய அவசியமிலலை.
விரல் நுனியில் சுருங்கியிருக்கும் தகவல் உலகத்தில் நவீனப்பட முடியாமல் தவிப்பது நமது குற்றமேயன்றி நம்மைக் குற்றவாளிகளாகப் பார்ப்பவர்களின் குற்றமன்று. எனவே, மாற்றத்துக்கு நாமே தயாராக வேண்டும், அதற்கான வினைத்திறன் மிக்க செயற்பாடுகளில் இச்சமூகத்தை வழி நடாத்த வேண்டும்.
-Sonakar.com

1 comment:
Very useful article please share this to other social networks...
Post a Comment