சந்தடியில்லா ஞானசார - மைத்ரி சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

சந்தடியில்லா ஞானசார - மைத்ரி சந்திப்பு!



மைத்ரிபால சிறிசேனவின் தொடர் மௌனத்தின் மத்தியில் சிறைச்சாலையில் இருக்கும் ஞானசாரவை நேற்றைய தினம் அவர் சந்தடியின்றி சந்தித்துள்ளமை புருவங்களை உயர்த்தியுள்ளது.



எதுவுமே நடக்காதது போல் இன்று வரை நடந்து கொள்ளும் ஜனாதிபதி, அவ்வப்போது நாட்டை சரி செய்யப் போவதாக அறிவிப்புகளை செய்து வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் விசுவாசத்துக்குரிய பவித்ரா வன்னியாராச்சி, இரு தேர்தல்களையும் நடாத்தக் கிடைத்தால் அதுவே மாபெரும் வெற்றியென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை நடாத்தக் கிடைத்து விட்டால் போதுமென அவர் விட்ட பெருமூச்சு அவ்வளவு சாதாரணமதாகத் தெரியவில்லை.

நாடு அல்லோலகல்லோலப்பட்டிருக்கும் நிலையில் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் தலைவரும், வாய்ப்பைப் பயன்படுத்தித் தமது ஆளுமையை நிறுவிக்கொள்ளத் தத்தளிக்கும் மஹிந்த தரப்பும், வியூகம் வகுத்துக் கொண்டிருக்கும் ரணில் தரப்பும் எந்தத் திசையை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கின்றன எனும் கேள்விக்கு தெளிவான பதிலில்லாத நிலையில் கைதிகளை விடுவிக்கச் சென்ற ஞானசாரவை சந்தித்தமை முக்கியத்துவம் உள்ள விடயமே.

இனவாதத் தீ வருடாந்தம் கொளுந்து விட்டு எரியும் நிலையில் அதற்குத் தூபமிட்ட ஞானசார போன்றவர்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்றைய தினம் லண்டனில் சற்றும் எதிர்பாராத வகையில் 40 வருடங்களாக அங்கு குடியிருக்கும் ஒரு துறவி தனது முஸ்லிம் விரோதத்தைக் கொட்டியபோது இதன் ஆழத்தை உணரக்கூடியதாக இருந்தது.

ஒரு மனிதன் முஸ்லிமாக இருந்த ஒரே காரணத்திற்காக அவனை அடித்து இழுத்துச் சென்று, அவனுக்காக ஒரு முச்சக்கர வண்டி கூட நிற்கக்கூடாது என்ற விஷம் மினுவங்கொடயில் கக்கப் பட்டபோது இனவாதத்தின் விரிவின் பயங்கரம் தெரிந்தது. பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களை உடைத்துக் கொளுத்தியவர்களின் நாடி, நரம்பெல்லாம் இனவாதம் ஊறிப்போயிருக்க, தம் நல்லிணக்க - சகவாழ்வை வலியுறுத்த பூஜைத்தட்டுகளை ஏந்தும் நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த நிலை வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை இன்றி தமக்குள் பிரிவுற்றுப் பிளவடைந்து சண்டையிட்டுக் கொண்ட முஸ்லிம் சமூகம் கடந்த நாற்பது வருடங்கள் சிதைவுற்றதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அப்படியே விட்டு விட்டு இன்னும் நாற்பது வருடங்கள் பின் தங்கிப் போக முடியாது, மீளெழும் புள்ளியைக் கண்டறிந்தாக வேண்டும். ஆனாலும் யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள்? என்ற கேள்வியும் அதற்கான விடையின் தேடலோடும் இன்னும் ஒரு வாரம் நகர்கிறது.

-சோனகர்.கொம்

No comments:

Post a Comment