அரசியல் நெருக்கடியின் போது ஏற்பட்ட மருந்து பற்றாக்குறையின் தாக்கம் தொடர்வதாகவும் அந்த பற்றாக்குறையை விரைவில் நிறைவுக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மருத்துவமனைகளை மருந்துத் தட்டுப்பாடுகள் இன்றி நடத்திச் செல்வது குறித்து அமைச்சரின் தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இதனைத் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு இறுதிப் பகுதி அரசியல் நெருக்கடியால் ஏற்பட்ட 216 மருந்து வகைகளின் பற்றாக்குறையின் தாக்கம் இன்றுவரையும் தொடர்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வைத்திய வழங்கல் பிரிவு, அரச ஔடத கூட்டுத்தாபனம், அரச ஔடத உற்பத்திக் கூட்டுத்தாபனம் ஆகியனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிர்வாக அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, பற்றாக்குறை நிலவுகின்ற சில மருந்து வகைகளை தொடர்ந்து வைத்தியயசாலைகளுக்கு வழங்குவதற்கு முடியாத நிலை தொடர்கின்றது. கொள்முதல் செயற்திட்டம் கடந்த வருட இறுதியில் முறையாக நடைபெறாததே அதற்கான காரணம். 52 நாட்கள் தொடர்ந்த அரசியல் நெருக்கடியால் எவ்வித விலைமனு கோரல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படவில்லை.
தற்போது நிலவுகின்ற சிறு அளவிலான பற்றாக்குறையை விரைவில் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதேபோன்று, அத்தியாவசிய மருந்துவகைகளை விமானத்தில் கொண்டு வருவதற்கும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வைத்திய வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜனரால் டீ.ஆர்கே.ஹேரத், பணிப்பாளர் துசித சுதர்ஷன, அரச ஔடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி எம்.எச்.எம்.ரூமி, அரச ஔடத உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் சமரசுந்தர உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
-Nuzly Sulaim
No comments:
Post a Comment