கடந்த வாரம் குருணாகல மாவட்டம், குறீகொட்டுவ என்ற கிராமத்தில் நடைபெற்ற 'அல் ஹாதியா இஸ்லாமிய நிறுவன' த்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. குறிப்பாக அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பேச்சு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பிரசுரமானதை அவாதானிக்க முடிந்தது.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றி குறிப்பிட்டு அவர் எதையெதையோ பேசியிருந்தார். பெண்ணிலை வாதம் புரியும் ஒரு சாராருக்கு கொடியேந்தியிருந்தார். மார்க்க விடயங்களில் சில நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுப்புக்கு இடமிருக்கிறது என்பது கற்றோர் அறிந்ததாகும். ஆனால், மார்க்க விடயங்களை விளங்காமல் உலறுவது அறிவீனர்களின் செயலாகும்.
நம் மூதாதையர்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கென்று அரும்பாடுபட்டு அமைத்து தந்துள்ள இச்சட்டம் மேற்குறிப்பிடப்பட்ட அமைச்சருக்கு விளங்காமல் இருப்பது கைசேதப்படக்கூடிய விடயமாகும்.
முஸ்லிம் சமூகத்திற்கு உண்மையான தலைமைத்துவத்தை வழங்கிய எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் இச்சட்டத்தை பாதுகாத்துத் தந்து சென்றனர். நீதியரசர் அக்பர் அவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் பெறப்பட்டு பாதுகாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்குரிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை இல்லாதொழிக்க எடுக்கும் முயற்சியாகவே இவ்வமைச்சரின் பேச்சு காணப்படுகிறது.
நமது மூதாதையர்களான அரசியல் தலைவர்கள் சேர் ராசிக் பரீட், டாக்டர் ஏ.சீ.எம். கலீல், ஏ.சீ.எஸ் ஹமீட், எம்.எச். மொஹம்மட், குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உற்பட எவரும் இந்த முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இடையிடையே நியமிக்கப்பட்ட தேர்வு குழுக்கள் கூட நிர்வாக ரீதியான திருத்தங்கள் மாத்திரம் செய்வதே பொருத்தம் எனக் கூறிச் சென்றனர். அப்படிருக்கையில் இவ்வமைச்சர் பேசிய பேச்சு சன்மார்க்க விடயங்களில் தனது மேதாவிலாசத்தை வெளிக் காட்ட முனைகிறார் என்றே தெரிகிறது.
அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் வராத சட்டத்தை இவர் ஏன் வலியுறுத்த வேண்டும் என்கிறார். உலமாக்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்ததனால்தான் பலருடைய இரகசிய விவகாரங்கள் அம்பலத்துக்கு வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது இவ்வமைச்சருக்கு தெரியாத ஒன்றல்ல.
எனவே, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட விவகாரங்களில் உணர்ச்சிவசப்படாமல் அணுகியதன் காரணமாகவே பல விட்டுக்கொடுப்புகளோடு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முஸ்லிம் கட்சியின் தலைவர் எனக் கூறிகொள்ளும் இவர் தனது பேச்சில் இருந்து வாபஸ் பெறல் வேண்டும்.
கேவலம், தான் நீதி அமைச்சராக இருக்கும்போது செய்து முடித்திருக்க வேண்டியதை முஸ்லிமல்லாத ஒரு அமைச்சர் செய்து முடிக்க முன்வந்துள்ள நிலையில் அதனை குழப்பி அடிக்காமல் இருக்குமாறு சமூகத்தின் பெயரால் கேட்டுக்கொள்கின்றோம்.
இவரை தலைவராக ஏற்றுக் கொண்டாடும் முஸ்லிம்கள் குறிப்பாக அம்பாரை முஸ்லிம் சகோதரர்கள் இவரை தொடர்ந்தும் அத்தலைமைப் பதவியில் தொடர வைப்பதா என்பது எமது ஷரீஅத்திற்கே சவாலாகும்.
-அபூ அர்ஹம்
No comments:
Post a Comment