2005 ஜுலை மாதம் 25ம் திகதி கொள்ளைக் கூட்டத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து, தலைமறைவாகியிருந்த மதுஷை முதலில் தானே கைது செய்திருந்ததாகவும் அப்போது 02 கொலைகள் மற்றும் சில கொள்ளைச் சம்பவங்களில் மாத்திரமே தொடர்புபட்டிருந்த நபர் அடுத்த 12 வருடத்துக்குள் பாதாள உலகில் பெரும்புள்ளியாக உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் டி.ஐ.ஜி பிரியந்த ஜயகொடி.
மதுஷை கட்டியிழுத்துச் சென்ற சம்பவத்தை நினைவு மீட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த நபர் கீழ்த்தரமான, உயிருக்குப் பயந்த கோழையெனவும் வர்ணித்துள்ளார்.
தனது உயிர் மேல் அதீத ஆசை கொண்ட மதுஷ், கமான்டோ நிசங்க என அறியப்பட்ட முன்னாள் இரணுவ உறுப்பினர் ஒருவரை வைத்தே தனக்குத் தேவையான கொலைகளை செய்ததாகவும் தானாக நேரடியாக எதையும் செய்ததில்லையெனவும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் டுபாயிலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருள் விநியோகத்தை பாரிய அளவில் செய்து வந்ததோடு பல கொள்ளைச் சம்பவங்களை நடாத்தியுள்ளதாகவும் ஜயகொடி மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறைப்படுத்தப்பட்ட கமான்டோ நிசங்கவை பிணையில் விடுவித்த மதுஷ், அவனைக் கொண்டே அனைத்து குற்றச் செயல்களையும் செய்து வந்ததாகவும், நிசங்க பொலிசாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பின்னர், கூலிப்படைகளை அமர்த்தி தொடர்ந்தும் பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் மதுஷ், தனது உயிர் மேல் அதீத ஆசையும் சொகுசு வாழ்க்கைப் பிரியனாகவும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டும் பிரியந்த ஜயகொடி, அண்மைய டுபாய் கைது வரை மதுஷை ஒரு தேசிய வீரன் போல் எழுதி, சிங்கள ஊடகங்கள் பல இளைஞர்ள் வழி கெடுவதற்கும் காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ பல பிரபல பாதாள உலக பேர்வழிகள், தமது பிழைப்புக்காக பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தாம் சார்ந்த சமூகத்தில் ஓரளவு கௌரவத்துடன் வாழ்ந்ததாகவும் மதுஷ் கோழைத்தனமாக வெளிநாட்டில் ஒளிந்திருந்து கூலிப்படைகளை வைத்தே காரியம் சாதிக்கும் கீழ்த்தரமான ரவுடியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மதுஷை விடுவிப்பதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையும் டி.ஐ.ஜி பிரியந்த ஜயகொடி முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment