மார்க்கத்தின் மீதான பற்றும், அதன் மீதான மரியாதையும், அண்ணலார் மீதான நன்மதிப்பும் ஒன்றிணைந்து கட்டுக்கோப்பாக வைத்திருந்த சமூகத்திடம் உலக வாழ்க்கை மீதான ஈர்ப்பு அதிகம் இருக்கவில்லை. ஆதலால், ஹலாலான வாழ்க்கை என்ற வட்டமும் மறுமையின் வெற்றியுமே இலக்காக இருந்தது.
நாளடைவில், தண்ணீர் - சோப்பு - சீப்புக்கெல்லாம் ஹலால் சர்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டதாகக் கருதிக் கொண்ட போதிலும் அடிப்படையில் சமூகக் கட்டுமானம் ஆட்டம் கண்டு நெடுங்காலமாகி விட்டது.
அவ்வப்போது நாட்டை உலுக்கும் சில செய்திகள் வெளியாகும். கடந்த காலத்தில் பெறுமதி சேர் வரி (VAT) மோசடி விவகாரம் பற்றித் தகவல் வெளியான போதும், இந்த வாரம் பாரிய இறக்குமதி வரி (Import Duty) மோசடி விவகாரம் பற்றி தகவல் வெளியான போதும் கூட, சாதாரண மொழியில் கூறுவதாக இருந்தால் 'எங்கடவங்களா இருக்குமோ?' எனும் கேள்வி மனதில் எழுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.
இந்த விசயத்துல எதிர்பார்ப்புகளை ஏமாற்றாத 'எங்கடவங்க' நேற்று கொல்லுபிட்டியில், அதுவும் இலங்கையில் இதுவரை கைப்பற்றப்பட்ட பாரிய தொகை போதைப் பொருளுடன் அகப்பட்டிருக்காங்க. குடு என்ற அடைமொழியுடன் 'முஹம்மத் .. அஹமத்...' பேர்வழிகளின் கதையெல்லாம் தனி ரகம்.
இத்தனைக்கும் இந்த சமூகத்துக்குள் என்.ஜி.ஓக்களின் ஆதரவில் இயங்கும் ஜமாத்துகளுக்கு பஞ்சமே இல்லை. பேஸ்புக், வட்ஸ்அப்பை திறந்தா யாராவது ஒரு ஜமாத்து உலமாவுடைய பத்வாவும், அறிவுரையும், விவாத அழைப்பும் தான் மலிந்து கிடக்கிறது. அண்மையில், லிவர்பூல் சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு தூர கிராமத்தில் தனித்து வாழும் முஸ்லிம் நபர் ஒருவர் 'போற போக்கில்.. கப்ரு குழிக்கு பக்கத்துலயே பாயும் தலவாணியும் வச்சு .. தூங்கி எழும்பனும் போலிருக்கு, அந்தளவு வட்ஸ் அப் பத்வாக்களால் வாழ்க்கை குழம்பியிருக்கு' என்று சொன்னாரு.
அது வெறும் விளையாட்டுக்காக அல்ல, வெறுப்பில் சொன்னது. போதாததற்கு எங்களுக்கு உலகில் வேறு எங்குமே கிளைகள் கிடையாது, நாங்களும் யாருடைய கிளையுமில்லையெனக் கூறிக் கொண்டு, இலங்கை முஸ்லிம்கள் எகிப்து, கட்டார், ஈரான்ல நடக்கிற விசயங்களுக்குத் தான் 'ரியாக்ட்' செய்யனும், அவ்வப்போது பலஸ்தீனத்தை பற்றி பேசனும், எப்பயாச்சும் கஷ்மீரை பற்றி பேசனும்னு அறிவேற்றி, புத்தர் சிலைகளை உடைக்க வைக்கிற அளவுக்கு வழிகாட்டுற ஜமாத்துகளும் இன்னொரு பக்கம்.
எந்த சம்பவமும் நடந்து முடிந்து இரண்டு வாரத்துக்கு பின்னர் முபாரக் மௌலவியின் பேரில் அறிக்கை விடும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இன்னொரு பக்கம்.
இப்படி ஆயிரம் ஆயிரம் அமைப்புகள் இருந்தாலும், கொலை - கொள்ளை - போதைப் பொருள் கடத்தல் - மோசடிகளில் ஈடுபடாத ஒரு கண்ணியமான சமூகத்தை யாராலும் உருவாக்க முடியவில்லை.
தனி மனித விருப்பு வெறுப்புகள் தான் இவை அல்லது இது வெறும் சிறு பகுதியினர் செய்யும் செயல்தான் எனக் கூறி, தண்ணீர் குடித்து ஆறுதலடைய விரும்புபவர்கள் முதலில் விடியற்காலையிலேயே ஹல்ட்ஸ்டொப் (Hultsdorp) சென்று, சிறு சிறு குற்றச்செயல்களில் ஆரம்பித்து பக்கற்களில் கஞ்சா - குடு விற்கும் குற்றச்சாட்டுகளுக்காக எத்தனை பீபிக்கள், சித்திக்கள் புதுக்கடையில் வழக்குகளுக்கு ஏறி இறங்குகிறார்கள் என்று பார்த்து விட்டு வர வேண்டும்.
அடுத்து, ஒருவருக்கு பணம் மற்றும் பதவி கிடைத்துவிட்டால், அதன் பின் இந்த சமூகம் எவ்வாறு மாறிக்கொள்கிறது என்பதையும் ஆராய வேண்டும். குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து வருபவர்களுக்கு டிரஸ்டி போர்டுகளில் தரப்படும் மரியாதை அதை எத்தனை தூரம் ஊக்குவிக்கிறது என்றும் அலசிப் பார்க்க வேண்டும். இவ்வாறு வாழ்க்கைப் படிமுறையின் சிறு சிறு இடங்களிலிருந்து சிந்திக்க ஆரம்பித்தால் இந்த சமூகம் எத்தனை பலவீனமானது என்பதும் அதனைத்தான் நாம் நமது உணர்வுகளால் மூடி மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம் (வெளியில் சொல்லாவிட்டாலும்).
மேலும், இது ஒன்றும் புதிய விடயமுமில்லை. கொழும்பு, புறக்கோட்டை மெயின் வீதியில் மிக முக்கியமான இடத்தில் இருந்த பெறுமதியான ஒரு கட்டிடத்தின் சொந்தக்காரராக எம்மவர் ஒருவரே இருந்தார். அவர் பற்றி 90களின் ஆரம்பத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து, அவர் முன்னிலையிலேயே பெருமையாகப் பேசிய அவரது நண்பர், 1949லேயே கடத்தல்ல ஹாஜியாருக்கு 56 லட்சம் நஷ்டம் என்று சொல்லியிருந்தார். ஆக, இதற்கும் நெடிய வரலாறு இருக்கிறது.
சிறிது சிறிதாக உருவான சமூகக் குற்றச்செயல்கள் பற்றி அலட்சியமாக இருந்த அன்றைய கால விளைவுகளே இன்று பெரும் உருவெடுத்து வளர்ந்து நிற்கிறது. நம் தேசத்தின் பொருளாதாரத் தலை நகரம் கொழும்பு என்பதால் அங்கு நடக்கும் விடயங்கள் தான் பெரும்பாலும் ஹைலைட் ஆகிறது. ஆனாலும் நுவரெலிய முதல் ஏறாவூர், மூதூர், மன்னார், ஹம்பாந்தோட்டை என எல்லாத் திசையிலும் சமூகத்தின் நிலை இவ்வாறே இருக்கிறது.
இவற்றையெல்லாம் தனி நபர்கள் எழுதுவதன் மூலமோ, சூடான காலத்தில் உணர்வு மேலோங்கப் பேசுவதன் மூலமோ நிறுத்தி விட முடியாது. எது எதுக்கெல்லாமோ சண்டையிட்டுக் கொண்டு இத்தனை ஜமாத்துகளாகப் பிரிந்து நிற்கும் நாம், எதற்காக ஒன்று பட வேண்டும்? என்ற சிந்தனை இங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். நமது நேர்மை - கண்ணியம் - நன்னடத்தையை முன்மாதிரியாகக் கொண்டு அதனால் எம்மை வழி நடாத்தும் மார்க்கத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும், அதைக் கொண்டு மற்றவர்களையும் ஈர்க்க வேண்டும்.
நல் வழியில் வாழக் கற்றுக்கொள்ளும் இன்றைய குழந்தை நாளை தம் பெற்றோர்களையும் கேள்வி கேட்கும். ஆனாலும், பேசாமடந்தையாக இருக்கும் சமூகம் அவர்களையும் சேர்த்தே கெடுக்கும்.
வீதிக்கு வீதி நின்று இஸ்லாத்தின் அடிப்படையை கேள்விக்குட்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சமூகம், செல்லரித்து போகும் கண்ணியத்தைப் பற்றியும் தாமும் சிந்தித்து அடுத்தவரையும் சிந்திக்கத் தூண்டுவது காலத்தின் தேவை!
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
https://www.facebook.com/irfaninweb
https://www.facebook.com/irfaninweb
No comments:
Post a Comment