இம்முறை நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீச்சம் பழம் கடந்த வருடத்தை விட கூடுதலான அளவு வழங்குவதற்கு இலங்கைக்கான சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அதேவேளை சவூதி அரேபியா பேரீச்சம் பழ அறுவடைக் காலம் நோன்புக்கு பிந்திய நிலையில் இடம்பெறுவதால் பேரீச்சம் பழம் வழங்கும் நடவடிக்கைகள் சற்றுத் தாமதம் ஏற்படலாம். எனினும் அதனை துரிதமாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக தூதுவர் உறுதியளித்துள்ளார் எனவும் முஸ்லிம சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அரபுக் கல்லூரிகளில் கற்று வெளியேறும் உலமாக்களுக்கு மேலதிக பயிற்சி நிலையமொன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பாக இலங்கை சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகத்தில் தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கலந்து கொண்ட முஸ்லிம சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் பேரீச்சம் பழம் அறுவடைக் காலம் தாமதிக்கப்பட்டமையினால் நோன்பு காலத்தில் சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீச்சம் பழம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதுடன் போதியளவிலான பேரீச்சம் பழம் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வில்லை. எனினும் இம்முறை அந்த நிலையில்லாமல் கடந்த வருடம் வழங்கப்பட்ட 150 மெ. டொன் பேரீச்சம் பழத்தை விட மேலும் 250 மெ. டொன் பேரீச்சம் அதிகரித்துத் தருமாறு தூதுவரிடம் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி கூடுதலான பேரீச்சம் பழத்தைப் பெற்றுத் தருவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் துரித கதியில் உரிய காலத்தில் விநியோகம் செய்ய அவற்றைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
கடந்த வருடம் புனித நோன்பு காலத்திற்கென சவூதி நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீச்சம் பழம் தாமதம் ஏற்பட்டமையினால் நான் அரசாங்கத்திடம் முன் வைத்த வேண்டுகோளின் பிரகாரம் முஸ்லிம் மக்களுடைய புனித நோன்பு காலத்தின் பெறுமதியை உணர்ந்து இலங்கை அரசாங்கத்தின் மூலம் 150 மெ. டொன் பேரீச்சம் பழம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் காலம் தாமதித்து சவூதி அரசாங்கத்தின் பேரீச்சம் பழம் 150 மெ. டொன் கிடைக்கப் பெற்றது. ஆனாலும் அது ஏனைய வருடங்களை விட குறைந்தளவே கிடைத்ததுள்ளது. இலங்கை அரசாங்கத்தினுடைய பேரீச்சம் பழம் கிடைக்கப் பெற்றமையினால் ஓரளவு சமாளித்துக் கொள்ள முடிந்துள்ளதாக என்று அமைச்சர் தூதவரிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளை ஹஜ் உம்ராவின் போது முகவர்களினால் இழைக்கப்படும் அநீதி தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது விசா வழங்கும் உயர்ஸ்தானிகராலயம் என்ற வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து நடடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தூதுவரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கு புதிய தூதுவராக வந்து கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுடைய விவகாரங்கள் தொடர்பாக துரித செயற்பட்டு வரும் தூதுவர் தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி பாராட்டி அமைச்சர் எம். எச். ஏ. ஹலிமினால் ஞாபகார்த்த சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதில் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ பாஹிம், ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. எம். இல்லியாஸ், முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். ஆர். எம். மலீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இக்பால்அலி
No comments:
Post a Comment