இனவாதமும், மதவாதமும் களையப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்கள் 71வது சுதந்திர தினத்தை உணர்வு பூர்வமாக கொண்டாட முடியும்..
இலங்கையின் 71வது சுதந்திரம் இன்று பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்பட்டாலும் அது சிறுபான்மை மக்கள் மத்தியில் சுதந்திரமானதொன்றாக கருத முடியாதுள்ளது. காரணம் இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு முழு நாட்டு மக்களுக்கமான சுதந்திரமாகவே அது வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த உண்மை இன்று மறுக்கப்பட்டு ஒரு இனத்திற்கான சுதந்திரமாக சித்தரிக்கப்படுவது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒருவகையான கவலையையே ஏற்படுத்தியிருக்கின்றது.
எந்தவிதத்திலும் இரத்தம் சிந்தாத வகையில் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் அதனைப் பெறுவதற்கு அகிம்சையான முறையில் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், அதற்காக பல முறை அசிம்சையான வகையில் இரவு, பகலாக சத்தியாக் கிரகங்களை மேற்கொண்டதன் பயனாகவே அந்நியர்களால் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இன, மத, பேதமின்றி அணைத்துச் சமுகங்களும் ஒற்றுமையாக வழங்கிய பங்களிப்பே இங்கு முக்கியமானதாகும்.
இவ்வாறு பெறப்பட்ட சுதந்திரம் இலங்கை வாழ் மக்களுக்கு வாழ்நாளில் மறக்க மடியாத ஒரு விடயமாகவே அக்காலத்தில் கொண்டாடப்பட்டது. சிங்கள, தமிழ், இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடின்றி அணைவரும் ஒருமித்து வழங்கிய குரல்களின் பிரதிபலிப்புக்கள் இந்த நாட்டின் விடிவிற்காக மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, சுயமான ஆட்சி முறை மற்றும் இலங்கைக்கான சர்வதேச அங்கீகாரம் என்ப கிடைக்கப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது எனலாம்.
இந்த வகையில் சுதந்திரத்தின் வெற்றியை சுவாசித்துக் கொண்டிருந்த சில வருடங்களிலேயே இந்த நாட்டில் இனவாத மற்றும் மதவாத பிரிவினைகள் ஒருசில கபடத்தனங் கொண்ட அரசியல் வாதிகளால் விதைக்கப்பட்டதன் விளைவாக சுதந்திரத்தின் பெறுமதி மழுங்கடிக்கப்பட்டு இந்த நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொல்லுக்கும், பிரிவினைக்கும் வித்திட்டு விட்டது எனலாம்.
குறிப்பாக 1956ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம் இந்த நாட்டு மக்களின் எந்தவித சம்மதங்களும் பெறாது அக்கால ஒருசில அரசியல் வாதிகளின் குரோதத்தனங்களால் சட்டமாக்கப்படதில் இருந்து இந்த நாட்டில் மொழி ரீதியிலான பிரிவினை ஆரம்பமாகி இன்று அது இனவாதமாகவும், மதவாதமாகவும் பூதாகாரமாகி நாடு பல்வேறு வகையான துண்டால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு விட்டது.
இந்தச் செயற்பாடுகளின் காரணமாக இலங்கை ஜனநாயக நாடு என்ற கோட்பாட்டில் இருந்து விலகி சர்வாதிகார முற்போக்கு அரசியல் நடவடிக்கைகளுக்கு வழிகோலி நாட்டில் எதற்கு எடுத்தாலும் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கோடு வரையப்பட்டு குரோதங்களும், பிரிவினைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி விட்டதுடன் ஒருசிலர் சட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டு அமைதி இன்மையை தோற்று வித்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாக சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், உரிமைகளை மறுக்கும் ஒருவகையான கலாசார புதுமைகளை ஒருசில சுயநல அரசியல் வாதிகள் கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி பௌத்த மக்கள் மத்தியில் இன ரீதியாகவும், சமய ரீதியாகவும் அவர்களை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வெறுக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக சிறுபான்மை மக்கள் மீதான பெரும்பான்மையினரின் வெறுப்புணர்வுகள் பூதாகாரமாகி இன்று கொலைகளைப் புரியுமளவிற்கு நிலைமைகளை மோசமாக்கி விட்டனர் என்ற செய்தியை கவலையோடு பகிர வேண்டியுள்ளது.
கடந்த 30 வருட யுத்தம் கூட இந்த நாட்டின் ஒருசில அரசியல் வாதிகள் மேற்கொண்ட ஜனநாயக மறுப்பு நடவடிக்கையின் பிரரிபலிப்புக்கள் என்றே கூறலாம். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்கவும், மேலும் பல ஆயிரக்காணக்கான மக்கள் அங்கவீனர்களாக ஆகுவதற்கும், பல ஆயிரக்கணக்காண பெண்கள் விதவைகளாகவும் ஆக்கப்பட்டமை, பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாக ஆகுவதற்கும,; கோடிக்கணக்கான உடமைகள் அழிவதற்கும் வித்திட்டதை மறந்துவிட முடியாது.
இன்று ஏதோ ஒரு வகையில் கொடிய யுத்தம் முடிவுற்றாலும் இனவாதம் என்ற அரக்கனின் அடியாற்கால் நாட்டில் அமைதி, சமாதானம், ஒற்றுமை என்பனவற்றை நிலைபெற விடாது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது தொடராகவே அரசியல் பலத்தை கையில் வைத்துக் கொண்டு தேவையற்ற வகையில் பொய்யான வதந்திகளைக்கூறி பிரச்சினைகளை எற்படுத்தி வருகின்றனர். இது மாபெரும் ஆபத்தான விடயமுமாகும்.
குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது இனவாதக் கும்பல்கள் கடுமையான ஆக்கரமிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக சமய ரீதியாக முஸ்லிம்களின் ஆடை விடயங்கள், உணவு விடயங்கள், சமய அனுஷ்டானங்கள் மற்றும் மதஸ்தளங்களை தாக்குதல் போன்ற விடயங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் ஒற்றுமை என்ற விடயம் அகன்று குரோதங்களும், வெறுப்புக்களும் மேலோங்குவதற்கு இந்த இனவாதக் குழுக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுபான்மை மக்கள் என்ற வகையில் அவர்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாகவும், சமாதானமுமாகவுமே வாழ விரும்பகின்றனர். ஆனால் இதனை நிலைபெற முடியாதளவு தடங்களை ஏற்படுத்தி ஏதாவது ஒருவகையில் முஸ்லிம் சமுகத்தினை குற்றவாளிகளாக சித்தரித்து அவர்கள் இஸ்லாமிய வழிமுறைகளை இல்லாது செய்வதற்கே பாடுபடுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் இன்று பாரிய மனஉழைச்சல்களையும், கவலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் பல வழிகளிலும் தம்மாலான உதிகளையும், ஒத்துழைப்புக்களை வழங்கியே வந்துள்ளனர். இது இலங்கையின் வரலாற்றில் இருந்தாலும் தற்காலத்தில் அவையனைத்தும் இருட்டடிப்புச் செய்து அவற்றை வெளிக் கொண்டுவருவதில்லை. இந்த வி;டயமும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய கவலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையைப் பிரித்துக் கேட்டோ அல்லது தமக்கு தனியான ஆட்சி அதிகாரங்கள் வேண்டும் என்று கேட்டோ போராடியது கிடையாதுஇ மாறாக ஆட்சிக்கு வரும் அரசுகளுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் பங்காளிகளாகவே இன்றுவரை இருந்து வருகின்றனர். என்றாலும் புறக்கணிப்புக்கள் என்ற விடயம் இல்லாமலில்லை. இருக்கத்தான் செய்கின்றது.
இலங்கையின் தேசியக் கொடி நிலைபெறுவதற்கும்கூட முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இலங்கையின் அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அதன் தாற்பரியத்தை நன்கு அறிந்த கொள்ளலாம். தேசியக் கொடியில் பௌத்த, இந்து, இஸ்லாமிய மக்களின் அடையாளங்கள் தெளிவான முறையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் காணப்படும் ஒவ்வொரு அடையாளங்களும் சமாதானம், ஒற்றுமை, புரிந்துணர்வு என்பவற்றை கோடிட்டுக் காட்டும் நிலையில் இந்த தேசியக் கொடியில் கூட ஒருசிலர் இனவாதம் காட்டி அதில் இருக்கும் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை அகற்றத்துடிப்பதும், ஒருசில கட்டங்களில் அகற்றிய சந்தர்ப்பங்களும் நடந்தேறியே இருக்கின்றன.
இலங்கையின் தேசியக் கொடியில் அன்பு, காருண்யம், மகிழ்ச்சி மற்றும் நன்மை தீமைகளை பிரித்தறிதல் போன்ற விடயங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை சரியான முறையில் புரிந்த கொள்ளலாதும் அதன் நன்மைகளை அறிந்து கொள்ளாதுமே செயற்பட்டு வருகின்றனர். தேசியக் கொடியில் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு மாற்றமாக அதனைக் கொச்சைப்படுத்தி மதவாதம் காட்டி நாட்டில் அமைதியைக் குழப்பும் நபர்களும், குழுக்களும் இருக்கும் வரையில் இந்த நாட்டில் முஸ்லிம்களோ அல்லது தமிழ் மக்களோ நிம்மதியாக சுதந்திரத்துடன் வாழ முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
எனவே இலங்கை மக்களுக்கு சரியான சுதந்திரதின கொண்டாட்டம் என்பது இனவாதம், மதவாதம் என்பன களையப்பட்டு சிறுபான்மை மக்கள் சமய ரீதியாவோ அல்லது மத ரீதியாகவோ அல்லது மொழி ரீதியாகவோ புறக்கணிக்கப்படாது அணைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேரும் ஒரு தினமே அணைவர் மத்தியிலும் உண்மையான சுதந்திரதின நாள் அமையும் எனலாம்.
-சத்தார் எம் ஜாவித்
No comments:
Post a Comment