டி.ஐ.ஜி லத்தீப் ஓய்வு பெறுவதை முன்னிட்டே மாகந்துரே மதுஷ் தனது பாதாள உலக சகாக்களை வரவழைத்து கேளிக்கை நிகழ்வொன்றை நடாத்தியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னராக மதுஷின் இரண்டாவது மனைவியின் புதல்வரின் பிறந்த தின கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டிருந்த அதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் மதுஷின் மனைவி தாமதமாக வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது போதைப் பொருள் மற்றும் பாதாள உலகை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக செயற்பட்டு வரும் டி.ஐ.ஜி லத்தீபின் பதவி விலகலை கொண்டாடவே பாதாள உலக கோஷ்டியினரை மதுஷ் ஒன்று சேர்த்ததாக புலனாய்வுத்துறையினரை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நிகழ்வில் மதுஷுடன், கஞ்சிபான இம்ரான், அஜ்மி, அங்கொட லொக்கா போன்ற முக்கிய பாதாள உலக பேர்வழிகள் ஒன்றிணைந்திருந்த அதேவேளை, போதைப் பொருள் உட்கொண்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பின்னணியில் அதற்கான தண்டனையே (1 வருடம்) ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் என்பதால் இலங்கையில் துரித கதியில் மதுஷுக்கு எதிராக கொலை வழக்குகளை விசாரித்து அதனூடாக அமீரக நிர்வாகத்திடம் நாடு கடத்தும் கோரிக்கையை முன்னெடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுஷ் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை, டி.ஐ.ஜி லத்தீபின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அத்தருணத்தில் தகவல்கள் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்றைய தினம் மதுஷ் குழுவிடம் டுபாய் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment