உலக யூனானி தினம் வருடாவரும் பெப்ரவரி 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தை இலங்கையில் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஏற்பாட்டின் கீழ் கல்முனை பிராந்தி ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீலின் வழி காட்டலில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும்,ஆயுர்வேத வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி கே.எம்.அஸ்லம் தலைமையில் இத்தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாகவும், பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில் விஷேட அதிதியாகவும், கல்முனை மாநகர சபையின் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டு விஷேட உரையினையும் நிகழ்த்தி வைக்கவுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பல யூனானி வைத்தியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும், இதில் 10 வருடகால வைத்திய சேவையை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், ஆயுர்வேத வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.
-பைஷல் இஸ்மாயில்
No comments:
Post a Comment