புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானம்: ACJU - sonakar.com

Post Top Ad

Thursday, 21 February 2019

புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானம்: ACJU


பல்லின மக்கள் வாழ்ந்து வரும் இந்நாட்டில் ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களும் இருந்து வருவதை நாம் காண்கின்றோம். அவ்வாறான தனித்துவங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொரு இனத்தவரும் கரிசனை செலுத்தி வருகின்றனர். அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.

அதேபோல் வரலாற்றை நிரூபிக்கும் சின்னங்களாக சில இடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்தி அவற்றை புராதன சின்னங்களென பாதுகாத்து வருகின்றது. இதற்கென பல சட்ட திட்டங்களும் நடைமுறையில் இருந்து வருவதை நாம் அறிவோம்.



இவ்வாறான இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை எமது சில வாலிபர்கள் பேணத் தவறிய இரு சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். இப்படியான செயல்கள் மாற்று மத சகோதரர்களால் இனவாத செயற்பாடுகளாக நோக்கப்படுவது மாத்திரமன்றி, இதனால் நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது. 

சக இனங்களின் தனித்துவ விடயங்கள் தொடர்பாகவும், நாட்டின் புராதன சின்னங்கள் தொடர்பாகவும், அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் எமது சமூகத்தவருக்கு தெளிவுகளை வழங்குவது அவசியமாகும். குறிப்பாக எமது வாலிபர்களுக்கு இது தொடர்பாக வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இது விடயத்தில் சமூகத்தை வழி நடாத்துகின்றவர்கள், பெற்றோர்கள், உலமாக்கள், கதீப்மார்கள், புத்திஜீவிகள்,  பாடசாலை ஆசிரியர்கள் என அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

விஷேடமாக சுற்றுலாக்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் இவ்வாறான இடங்களுக்கு செல்கின்ற போது அவ்விடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அறிந்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரிடமும் வேண்டிக் கொள்கின்றது.

அதே போன்று புராதன சின்னங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய தெளிவான அறிவித்தல் பலகைகளை மும்மொழிகளிலும் இடுமாறு உரிய அதிகாரிகளிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.எ முபாறக்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment