கிரலாகலயில் ஏறி நின்று படம் பிடித்த இளைஞர்கள் நீதிமன்றில் தம் குற்றத்தை ஒப்புக் கொண்டு, விடுதலை பெறுவதற்கு 408,000 ரூபா செலவானது. அதற்குள் மிஹிந்தலையில் மேலும் ஒரு புராதன தூபியில் இரு முஸ்லிம் இளைஞர்கள் ஏறிய புது சர்ச்சை.
தாமிழைத்தது குற்றம் என்பதை அவர்கள் உணர்ந்தாலும் சமூகத்தின் ஏனையோர் ஒத்துக் கொள்ள மறுத்திருந்ததோடு இந்த உணர்வலையில் மிதந்தோரைத் திருப்திப் படுத்த அரசியல்வாதிகளும் அறிக்கைகளை விட்டுத் திருப்தி கண்டனர். இனி வேலைக்காகாது என தாமதமாகப் புரிந்து கொண்ட பெற்றோர் சட்டத்தரணிகளை நாடினர். அவர்களுக்கும் பெரும் புகழாரமும் பிரச்சாரமும் உணர்வு மேலோங்கப் பறந்தது.
ஈற்றில், தாம் செய்த குற்றத்துக்கான அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்ட மாணவர்கள் வழக்கிலிருந்து விடுதலை பெற்றார்கள். அதன் பின், அவர்கள் அரசியல்வாதிகளின் பிரச்சாரப் பொருளுமானார்கள்.
இருந்தாலும், இது ஒட்டு மொத்த சமூகத்தையும் சென்றடையாத ஒரு சம்பவமாகவே நடந்து முடிந்துவிட்டது. தனி நபர்களின் வாழ்க்கை மற்றும் தமக்கு விரும்பாத ஆண், பெண்களை முகப்புத்தகத்தில் விமர்சித்துச் சிற்றின்பம் காணும் கீபோர்ட் வீரர்கள், இது போன்ற நல்ல விடயங்களை தாம் சார்ந்த சமூகத்திடம் எடுத்துரைத்துப் பேசுவதுமில்லை. இன்னொரு சகோதரனின் குற்றத்தை மறைப்பதாக நினைத்து தியாகம் செய்பவர்களும் உள்ளடக்கம்.
புராதன தளங்களை துஷ்பிரயோகம் செய்த சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும் சட்டம் பாய்ந்திருக்கிறது. அப்படியே, யாராவது தப்பியிருந்தால் கூட அது நாம் தவறிழைப்பதற்கான அனுமதியில்லை. புத்தரின் படத்தைத் தன் கையில் பச்சை குத்தியிருந்த வெளிநாட்டுப் பெண்ணைக் கைது செய்து சர்ச்சையும் உருவாகியிருந்தது.
புராதன தளங்களில் சிங்கள மக்களும் தமது யாத்திரிகை நினைவாக படங்களை எடுக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் எம்மவர் எடுக்கும் 'விதம்' தொடர் சர்ச்சையாகிறது. முஸ்லிம்கள் ஏனைய மதங்களையும், நாட்டின் சட்டத்தையும் மதிப்பதில்லையெனும் குற்றச்சாட்டு இன்னும் நம்பப்படுவதனால், நாமும் அதனை நிரூபித்துக் கொண்டிருப்பதனால் அது பிரச்சினையாகிறது.
துரதிஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்கள் மூலமாகவாவது பௌத்த உணர்வும் - மதிப்பும் சிங்கள சமூகத்தில் மேலோங்கியிருப்பதை அறிந்து நடக்கும் பக்குவம் நம் மத்தியில் எழவில்லை. தற்காலத்தில் நாடெங்கிலும் பள்ளிவாசல்களில் இடம்பெறும் நடவடிக்கைகளை ஏனைய மதத்தவர்களுக்கும் அறியச் செய்யும் வகையில் Open Mosque Day நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஆனால், ஓரிரு வருடங்கள் வரை அன்னியன் பள்ளிவாசலுக்குள் வரவே கூடாது என்ற நிலைப்பாடு ஓங்கியிருந்ததால் இன்றும் இந்நிகழ்வுகளை விமர்சிப்போர் காணப்படுகின்றனர்.
ஆக, இலங்கை முஸ்லிம்களிடம் புதிய சிந்தனைத் தூண்டல்களை உருவாக்குவது மிகவும் கடினமாகவே தொடர்கிறது. இதற்கான பொறுப்புகளை யார் ஏற்கப் போகிறார்கள் என்பது இன்னும் விடை காணப்படாத கேள்வி. பால்மாவில் பன்றிக் கொழுப்பு இல்லையென வாதிடத் தெரிந்த எங்கள் சமூக அமைப்புகள் எம் இளைய சமூகத்திடம் பொது அறிவை வளர்க்க முடியாது திண்டாடுகின்றன.
வானிலை அறிக்கையை நம்புவது 'பாவச்' செயல் , பெண்களை பல்கலை அனுப்பினால்க்கழகம் அனுப்பினால் அங்கு கருக்கலைப்பு நடக்கிறது, ஆதம் அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் அணிந்த ஜுப்பா கழுவிக் காயப் போடப்பட்டிருக்கிறது போன்ற விடயங்களை எந்த சிக்கலும் இன்றி சமூக மத்தியில் வேகமாகப் பரப்பி விடலாம், ஆனாலும் அடுத்தவன் மத உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள் என்று சொல்லிப் புரிய வைக்க பல நூற்றாண்டுகள் தேவைப்படும் நிலையே நிலவுகிறது.
ஏன்? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்கக் கடமைப்படுகிறோம். நாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இவை பற்றி பேச வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. நமது சமூக விவகாரங்களில் நமக்கிருக்கும் உணர்வு மாத்திரமே உயர்ந்தது எனும் நிலைப்பாடு பல்லின மக்கள் வாழும் நாடொன்றில் மாற்றம் பெற வேண்டிய சிந்தனை வடிவமாகும்.
தனியான சிறப்புச் சலுகைகளும், தனியார் சட்டங்களும் இச்சமூகத்துக்குக் கிடைத்த கௌரவமாகும். அந்த சலுகைகளினால் மூடி வைக்கப்பட்டுள்ள பொது சிந்தனைகளை இனியும் அவ்வாறே அனுமதிக்கக் கூடாது. இன்றைய கால கட்டத்தில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளின் வடிவங்களே.
அது போல தற்காலத்தில் நாம் விடும் தவறுகளே அடுத்த தலைமுறையினராகப் போகும் நமது சந்ததிகளுக்கு சர்ச்சைகளை உருவாக்கும். எனவே, சமூக மட்டத்தில் நம் தாய் நாடு, அதன் சூழல், ஏனைய மதங்கள் மற்றும் மனிதர்கள், புராதன தளங்கள், வணக்கஸ்தலங்கள் பற்றிய அறிவை வளர்க்க உதவுவது அனைவருக்கும் கடமையாகிறது. உலமாக்கள் சமூக விடயங்களை அன்றாடம் பேசி மக்களை வழி நடாத்துபவர்களாக மாற வேண்டும். ஆசிரியர்கள் தம் சமூகத்துக்கு பல்லின மக்கள் வாழும் நாட்டில் நாமும் ஒரு தேசிய இனமாக வாழ்வது எப்படியென மேலதிகமாக வழி காட்ட வேண்டும். சமூக ஆர்வலர்கள், இன்னும் பயிற்சிப் பாசறைகள் விழிப்புணர்வு நிகழ்வுகள் என பல செயற்திட்டங்கள் அவசியப்படுகிறது.
இதையெல்லாம் ஏதோ ஒரு என்.ஜி.ஓ வந்து செய்யும் என்று இருக்காமல் அந்தந்த ஊரைச் சார்ந்தவர்கள் கடமையுணர்ந்து செயற்படுதல் காலத்தின் கட்டாயமாகும்.
-Sonakar.com
1 comment:
உண்மையான விடயம்..எமது பாடசாலை காலை கூட்டங்களில் மாணவர்களுக்கு இதை பற்றி அறிவுறுத்த வேண்டும்.அவ்வாறே அரபிக்கல்லூரிகளில் பொது அறிவு,அந்நிய கலாச்சார விதிகள் பற்றி கட்டாயம் அறிவு புகட்ட வேண்டியது கட்டாய கடமை.தொல்லியல் சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம்கள் மீது பாவிக்கப்படும் கூரிய ஆயுதமாக இவை இருக்கின்றன என்பதும் மறைமுகமான உண்மை.சரியாக சொல்வதானால் ஒவ்வொரு ஊரிலும் ஜும்மா பேருரைகளிலாவது இது சம்பந்தமாக வழிகாட்டினால் இனிவரும் காலங்களிலாவது நம் இளைஞர்கள் திருந்த வாய்ப்பாக அமையும்.
Post a Comment