மனிதாபிமானத்திற்கான நிவாரண அமைப்பு (எச்.ஆர்.எப்) அமைப்பினால் நடாத்தப்பட்ட ஹிப்ழ் போட்டிக்கான பரிசளிப்பு விழா தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த போட்டியில் பலநூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளைக் காட்டியுள்ளனர். இவ்வாறு தமது அதிக திறமைகளைக் காட்டிய சுமர் 100 மாணவர்களுக்கு இன்று நற்சான்றுப் பத்திரங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முதல் 15 மாணவர்களுக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான விமானப் பயணச் செலவிற்கான பணத் தொகையும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று அமைப்பின் தலைவர் ஹனீப் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக, நீண்டகால இடம் பெயதர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்ற மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார்,இஷாக் றஹ்மதுல்லா,மேல்மாகாண சபை உறுப்பினர் முஹமட் பாயிஸ், மனிதாபிமானத்திற்கான நிவாரண அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்கள், பிரதிநிதிகள், உலமாக்கள், மௌலவிமார்கள், நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment