30 வருட கால யுத்த நிறைவின் பின்னரும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே வட-கிழக்கு பகுதிகளில் நிலவும் சந்தேகம் முற்றாகத் தீராத நிலையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராகவிருந்து எண்ணற்ற கொலைச் சம்பவங்களை அரங்கேற்றியதாக அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோகேஸ்வரனால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கருணா அம்மான், மீண்டும் அப்பகுதிகளில் பிரிவினை வாதத்தை விதைப்பதில் இன்றைய தினம் வெற்றி கண்டுள்ளார்.
தேசிய அரசும் இன மையக் கொள்கையிலேயே இயங்கி வரும் நிலையில், கிழக்கில் முஸ்லிம் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட்டமையை தமிழர் விரோத செயற்பாடாக சித்தரித்து, இனவாதமும் பிரிவினையும் தூண்டிவிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்திலும் பாரிய அளவில் முஸ்லிம் விரோத பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் சகாவான கருணா அம்மான், தொடர்ந்தும் கிழக்கில் முஸ்லிம் விரோத கருத்துக்களை சுதந்திரமாக விதைத்து வருகின்றமை அவதானிக்கப்படுகிறது.
இலங்கையில் இனவாத பேச்சுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்டம் இல்லாத நிலையில் கருணா அம்மானின் தூண்டுதலில் கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் நேற்றைய தினம் சுவரொட்டிகள் தோன்றியிருந்த அதேவேளை இன்றைய தினம் தமிழ் சமூகத்தினர் செறிந்து வாழும் பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பகுதிகளில் வழமை போன்று இயல்பு வாழ்க்கை தொடர்கின்ற நிலையில் கிழக்கில் இரு சமூகங்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை விதைப்பதில் அரசியல் எதிர்காலத்துக்காக போராடிக்கொண்டிருக்கும் கருணா அம்மான் வெற்றி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment