போன மாதம் நீதித்துறையை போற்றிய முஸ்லிம்கள்.. இந்த மாதம்? - sonakar.com

Post Top Ad

Wednesday 30 January 2019

போன மாதம் நீதித்துறையை போற்றிய முஸ்லிம்கள்.. இந்த மாதம்?


ஒக்டோபர் 26 முதல் அடுத்து வந்த 50 தினங்கள் இலங்கையின் அரசியலில் மாத்திரமன்றி வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஈற்றில் நீதிமன்றம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி ஜனநாயக வெற்றியாக சர்வதேச அரங்கிலும் பேசப்பட்டது.

இதனை இலங்கையர்களாக அனைத்தின மக்களும் கொண்டாடினார்கள். இப்போராட்டத்தில் சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்பு போற்றத்தக்கதாக இருந்ததுடன் அரசியல் பிரதிநிதிகளாகவும் சட்டவல்லுனர்களாகவும் இருக்கும் தலைவர்கள் தமது கருப்பு அங்கிகளை மாட்டி ஜனநாயகக் கடமையை செவ்வெனே நிறைவேற்றினார்கள்.

இதன் போது, இலங்கையில் நீதி சாகவில்லையென்பதே ஒவ்வொரு குடிமகனும் கொண்ட பெருமிதமும் பேராறுதலும். எனவே, நீதித்துறையும் நீதிபதிகளின் நியாயமான தீர்ப்பும் மெச்சப்பட்ட்டது. இன்னொரு வகையில் கொண்டாடப்பட்டதென்றே கூறலாம்.

மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பாளர்கள் மாத்திரமன்றி, புதிதாக உருவான மைத்ரி அதிருப்தியாளர்கள், ஜனநாயகவாதிகள், அமைதியை விரும்பும் மக்கள் மற்றும் குமார வெல்கம உட்பட மஹிந்த அணியின் ஆதரவாளர்களும் கூட இதனைக் கொண்டாடினார்கள். சமூக வலைத்தளங்களில் இதன் பெருமிதத்தை உச்ச கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் பங்கும் உண்டு.

ஆனால், இந்த மாதம் இப்போது வழக்கம் போல நீதித்துறையையன்றி அரசியல்வாதிகளின் தயவின் பக்கம் தலை சாய்த்து தற்போது அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறது அதே சமூகம். கிரலகலயில் அறிந்தோ - அறியாமலோ ஆர்வமிகுதியில் ஏறிய தென் கிழக்குப் பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அது ஒரு வருடத்துக்கு முன் நடந்த நிகழ்வென தெரிவிக்கின்றனர். ஏதோ ஒரு வகையில் அது பூதாகரமாக்கப்பட்டு, அதிகாரிகளின் கவனத்தையீர்த்த போது மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் மாணவர்களின் நியாயம் - அநியாயங்களை பேச வேண்டியது நீதிமன்றில் அன்றி தனிப்பட்ட அமைச்சர்களிடம் இல்லையென்பதை மீண்டும் சமூகம் மறந்து விட்டது. பொது பல சேனாவின் இனவாதம் உச்ச கட்டத்திலிருந்த காலத்தில் கூட கருத்துக் கூறிக்கொண்டிருந்த அளவுக்கு நீதி மன்றத்தை நாடும் நாட்டம் மக்களிடம் இருக்கவில்லை.

அவ்வாறே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் முறையான நீதி கிடைக்கவில்லை. நிற்க, இப்போது இலங்கையின் நீதித்துறையில் காட்சிப்படுத்தப்படும் சுயாதீனத்தைப் பயன்படுத்தி அதற்கான போராட்டத்தை நீதித்துறையூடாகவே மேற்கொண்டு அதற்கு ஒரு அமைச்சர், அது சஜித் பிரேமதாசவாகவே இருப்பரானால் அதனையும் துகிலுரித்துக் காட்டுவதுதான் கடமை.

அதை விடுத்து, இதை சஜித் பிரேமதாச பிரநிதிதித்துவப்படுத்தும் மத நம்பிக்கைக்கு எதிரான முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலமாக்க முயற்சிப்பதால் இதுவரை எந்தப் பயனும் எட்டப்படவில்லையென்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 



கிழக்குப் பகுதியிலிருந்து சீகிரிய சென்ற முஸ்லிம் மாணவியொருவர் அங்கு சிற்பத்தில் கீறிய வேளை பொலிஸ் மட்டத்திலேயே அவ்விவகாரத்தைப் பேசி முடிக்க அரசியல்வாதிகளால் முடிந்திருந்தது. இம்முறை அது நீதிமன்றத்துக்குச் சென்ற பின் அதனை மீண்டும் அரசியல்வாதிகளிடமே கொண்டு செல்ல வேண்டும் என சமூகம் கருதுமாக இருந்தால் கடந்த மாதக் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றதாகி விடும்.

அரசியல் அழுத்தம் மூலம் எதனையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுப்பதும், முஸ்லிம் இளைஞர்கள் தவறு செய்து மாட்டிக்கொண்டால் அவர்களை விடுவிப்பதுதான் தமது தலைமைத்துவ ஆளுமையை நிரூபிப்பதும் என அரசியல் பிரதிநிதிகள் காட்சிப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி வகுக்காது.

ஆதலால், நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்து, அதனூடாக மாணவர்களை மீட்டெடுப்பதும் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் ஒத்துழைப்பதுவுமே சமூகத்தின் கடமை. கடந்த மாதமே கொண்டாடப்பட்ட நீதித்துறையை அரசியல் போட்டியூடாக மீண்டும் சுயாதீனத்தை இழக்கச் செய்வதிலும் நாம் பங்களிக்காமல் இருப்பது காலத்தின் கடமையாகும்.

-சோனகர்.கொம்

No comments:

Post a Comment