சுகாதார அமைச்சினால் புதிய நோயாளர் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) வழங்கும் செயற்திட்டத்திற்குள் மீராவோடை பிரதேச வைத்தியசாலையையும் உள்வாங்கி புதிய அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றினை பெற்றுத்தருமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களிடம் மீராவோடை வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
இதன் பிரகாரம் அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியினால் சுகாதார அமைச்சின் குறித்த செயற்திட்டத்திற்குள் மீராவோடை பிரதேச வைத்தியசாலை உள்வாங்கப்பட்டு இன்று (19) பிற்பகல் 4 மணிக்கு நிந்தவூரில் வைத்து சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் அபிவிருத்திக் குழு மற்றும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாக புதிய அம்பியுலன்ஸ் வண்டி கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்துகொண்டார்.
வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களை 2017.07.23ஆம் திகதி நிந்தவூர் காரியாலயத்தில் சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது இவற்றினை கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அன்றைய தினமே இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்டார்.
அச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு வழங்கிய சில வாக்குறுதிகளுக்கமைவாக இன்று இவ்வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளது.
-எம்.ரீ. ஹைதர் அலி
No comments:
Post a Comment