போதையிலிருந்து விடுபடுமா இந்நாடு? - sonakar.com

Post Top Ad

Friday 25 January 2019

போதையிலிருந்து விடுபடுமா இந்நாடு?


புதிய அரசியலமைப்பு வரைவையும், ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்திய கருத்துவாதங்களினால் தேசிய அரசியல் சதுரங்கம் சூடேரியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்  பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் வீதி விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், காட்டு யானைகளின் தாக்குதல்கள் என தினமும் இடம்பெறுகின்ற சம்பவங்கள் சமூக ஆரோக்கியத்தை கேள்விக்குட்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. 


இந்நிலையில்தான் போதைப் பொருள் வர்த்தகமும், பாவைனயும்,  கடத்தல்களும், கடத்தக்காரர்களின் கைதுகளும் தினசரி நிகழ்வாக நடந்தேறுகின்றமை இந்நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பாரிய சமூகப் பிரச்சினையாக மாறியிருப்பது மாத்திரமின்றி சமகால சமூகப் பிரச்சினையில் முதலிடத்தையும் பெற்றிருப்பதாகவே காண முடிகிறது.

பணத்தின் தேவையும், ஆடம்பட வாழ்விற்கான ஆசையும் பலரை அதலபாதளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது. பெற்ற பிள்ளைகளை விற்பது முதல் மாற்றார் பிள்ளைகளை அழிவின் விழிம்புக்கு கொண்டு செல்லும் நிலை வரை பணத்தின் தாக்கம் வீரியமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அதிக இலாபம் பெறக்கூடிய வர்த்தகமெனக் கருதி எதிர்கால சந்ததிகளை அழிக்கும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக மாபியாக்கள் தங்களை சுய வியாசரணை செய்யாத வரை எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது. 

நாளைய தலைவர்களாக, துறைசார் வல்லுணர்களாக, நிபுணர்களாக, சமூகத்தையும், பிரதேசத்தையும், நாட்டையும் நல்வழிப்படுத்துபவர்களாக எதிர்காலத்தில் மிளிரவுள்ள தற்கால மாணவர்கள்  பணத்திற்கு அடிமையாகியுள்ள போதைவஸ்து வர்த்தக மாபியாக்களின் வலையில் சிக்கி தமது வளமாக எதிர்காலத்தை ஊணமாக்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. மாணவர் சமுதாயம் நற்பண்புகளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிகாட்டப்படுவது பெற்றோர்கள,; ஆசிரியர்கள் உட்பட ஒட்டுமொத்த சமூக உறுப்பினர்களிதும் இன்றியமையாத பொறுப்பாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். 

இப்பொறுப்பு தவறும்பட்சத்தில், ஆரோக்கியமற்ற, சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய சமூகமொன்றையே நாம் எதிர்காலத்தில் காண முடியும்.  அவ்வாறான ஆபத்தான நிலை உருவாக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின,; இன்றைய மாணவர்கள் ஒழுக்க விழுமியத்துடனும,;பண்பாட்டுக் கலாசாரங்களுடனும், ஆன்மீக ஈடுபாட்டுடனும் வாழக் கூடியவர்களாக வீட்டுச் சூழலிலும,; பாடசாலைகளிலும், வழிபாட்டுத்தளங்களிலும் வழிகாட்டப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

தற்காலத்தில் போதைப் பொருள் வர்த்த்தகத்தின் மூலம் ஆடம்பர வாழ்க்கைக்கான சொத்து செல்வங்களைத் தேடுவதற்கு பிணத்தைக் கூட பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியில் பாரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு அவற்றைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படடுள்ளன.

அதனடிப்படையில், 'போதையிலிருந்து விடுபட்ட நாடு' என்னும் தொணிப்பொருளில் தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் ஜனாதிபதி  செயலணியின் போதைப் பொருள் தடுப்புப்பிரிவன் ஏற்பாட்டில் கடந்த திங்கள் கிழமை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டிலுள்ள  ஏறக்குறைய பத்தாயிரம் பாடசாலைகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் அங்குரார்ப்பண  நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

போதைப்பொருளும் விளைவுகளும்

உடல், உள பாதிப்புகளை ஏற்படுத்துவதும் சமுகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுமான நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும் பொருட்கள் போதைப் பொருட்கள் எனப்படுகிறது. சொற்ப அளவில் தேகத்தை அடைந்துவிடினும் எந்தவொரு உயிரினதும் தொகுதியில் கணிசமான மாற்றத்தினை விளைவிக்கக் கூடிய ஓர் இராசாயனப் பண்டம் போதைப்பொருள் அல்லது அபாயகரமான மருந்து எனவும் வரையறை செய்யப்படுகிறது.

சாதி, மத, வர்க்க, பேதமின்றி எல்லாத்தரப்பினரையும் உடல், உள, குடும்ப, சமூக, பொருளாதார, ஆன்மிக, சூழலியல் சார் பாதிப்புக்களை உருவாக்குகின்ற ஒரு அம்சம் போதைப் பொருட்பாவனையாகும் என பொதுவாகக் கூறப்படுகிறது. இவ்வாறான போதைப் பொருள் பாவனையானது உள்நாட்டு யுத்தத்தித்திற்கு அடுத்த படியாக இலங்கைச் சமூகத்தை பெரிதும் பாதித்திருப்பதில் முதலிடம் பெறுவது போதைப் பொருள் விற்பனையும், பாவனையுமாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

புகைத்தல், மதுபாவனை மற்றும் போதைப் பொருள் பாவனையினால் தினமும் நூற்றுக் கணக்கானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் 30 வருடம் நடைபெற்ற யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்தத் தொகையை விடவும் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. வருடம்தோரும் 47 ஆயிரம் பேர் போதைப் பொருள் பாவனையினால் உயிரிழப்பதாக சுகாதாரத்துறையின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

நாட்டுக்கும் சகல சமூகத்திற்கும்; மிகப்பெரும் சவாலாகக் காணப்படுகின்ற போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பாவனை செயற்பாடுகளை நாட்டிலிருந்து ஒழித்து  போதைப் பொருள் அற்ற நாடு என்ற இலக்கை அடைந்துகொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு வேலைத்திட்டமே போதையிலிருந்து விடுபட்ட நாடு என்ற கருப்பொருளில் அனைத்து அரச பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டமாகும்.

போதைப் பொருள் பாவனையிலிருந்து இலங்கையை மீட்டெப்படுப்பதற்காக  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சுகாதார அமைச்சராக இருந்த காலத்திருந்தே செயற்றிட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகிறார். 

போதைப் பொருள் பாவனை, விற்பனை மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டு  பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பிடிபட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதானது இந்நாட்டை போதையிலிருந்து விடுக்க பண ஆசை கொண்ட மாபியாக்கள்; விரும்பாது அவற்றிற்கு தடையாக இருப்பதுடன் சட்டத்தைக் காப்பாற்றுவோரையும் சட்டப்பைக்குள் வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஹெரோயின், ஹொக்கையின், மர்ஜுவான, ஹஸிஸ், ஐஸ்பேக், கேரளா கஞ்சா, அபின், சாராயம், கசிப்பு, பியர், சிகரட், சுருட்டு, பீடி, போன்றன முழு அளவிலும், குறைந்த அளவிலும் போதையை ஏற்படுத்தும் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்கள் இலங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்பாடுகின்றன. 

போதையிலிருந்து விடுவித்தல்

போதைப்பொருள் விற்பனையானது குறுக்கான வழியில் செல்வம் தேடும் ஒரு முலோபாயமாகக் காணப்படுகின்றது. தனக்காக வாழ்வதிலும் பார்க்க பிறருக்காக வாழும் பேராசையின் நிமித்தம் பலர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் பயன்பாட்டுக்கான பழக்கம் வெறுமனே எற்படுவதில்லை. ஒருவரின் சமூகமயமாக்கல் முகவர்களின் தவறான பழக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் சமூகக்கற்றலினூடாக தோன்றுகிறது.

வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால செயன்முறையை சமூக மயமாக்கல் என்று கூறப்படுகிறது. ஒருவரின்; சமூக மயமாக்கலில் குடும்பம், சம வயதுக் குழுக்கள், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் என்பவற்றிற்கு மேலாக ஊடகமும் தாக்கம் செலுத்துக்கிறது.

 ஒரு பிள்ளை ஒழுக்க விழுமியமுள்ள பண்பாட்டுக் கலாசாரத்துடன் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படுமாயின் அப்பிள்ளை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிலையச் சூழலில் ஏற்படும் பண்பாட்டு மாற்றத்தினாலும் சமய வயதுக் குழுக்களின் அழுத்தங்களினாலும் வழிதவறிச் செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படும். பிள்ளையின் நடத்தை, மனவெழுச்சிச் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்களும் குடும்பத்தாரும் கவனத்திற்கொள்ளாது செயற்படுகின்றபோது, அப்பிள்ளை சம வயதுக் குழுக்களினால் திசைமாற்றப்படுதைத் தடுக்க முடியாது. இவ்வாறு திசைமாறுகின்ற பிள்ளைகளே பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்குபவர்களாக மாறுகின்றனர். இவர்கள் இத்தகைய போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பாவனைக்கும் உள்ளாகிறார்கள்.

அத்தோடு, தொழில் வாய்ப்பின்மை, இலக்குகளை அடைவதில் தோல்வி, மேலத்தேச நாகரீக மோகம் கலாசாரமாக உருவெடுத்தல், தனிமை, கடின உழைப்பு, மகிழ்ச்சி, திருப்தி, உல்லாசம், பிரச்சினைகளை மறத்தல், உடற்கலைப்பைப் போக்கல், போன்ற போதைப்பொருள் தொடர்பான தவறான நம்பிக்கை, திட்டமிட்ட விளம்பரங்கள், சின்னத்திரை, மற்றும் சினிமாக நடிகர்களின் செயற்பாடுகளை முன்மாதிரியாகக் கொள்ளல், கௌரவம் போன்ற காரணிகளும் ஒரு தனிமனிதன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இக்காரணிகளினால் போதைப் பொருளுக்கு அடிமைப்படுகின்றவர்கள் சமூகமட்டத்தில் வயது குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இலங்கையில் பல்வேறு போதைப் பொருள் பாவனைக்குமாக 250,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 60,000  இளைஞர் யுவதிகள் ஹெரோயின் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    15 மதல் 20 வயதுக்கும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களும் போதைப் பொருளுக்கு அடிமைப்படுவது அதிகரித்துள்ளது. 

இதனால் இவ்வயதுப் பருவத்தினரிடையே பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதை அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அவதானிக்க முடிகிறது. இதில் மிகவும் கவலைக்குரியதும் அவதானத்திற்குரியதுமான விடயமென்னவெற்றால் மாணவ சமூகத்தினரர் போதைக்கு அடிமையாகுவதாகும். 

மாணவர்களைக் காப்பாற்றுதல்

போதைப் பொருள் பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், போதைப் பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதையும்,  விற்பனை செய்யப்படுவதையும். பயன்படுத்தப்படுவதையும் இன்னும் தடுக்க முடியாமலே உள்ளமை துரஷ்டவசமாகும். 

சட்டம் முறையாகச் செயற்படுத்தப்படாமையும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் பணியில் காணப்படும் வழுக்கலுமே போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க முடியாமல் உள்ளதாக சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

தற்போது நமது மாணவர்கள் மத்தியில் பாபுல், பீடா, பன்பராக், மாவா, ஐஸ்பேக் போன்றவற்றின் பாவனைகள் அதிகரித்துவிட்டதாக அறிய முடிகிறது. சில மாணவர்கள் வகுப்பறைகளுக்குள்ளேயே இவற்றைப் பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. ஏறக்குறைய 13 வீதமான 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக தரவுகள் மூலம் அறியமுடிகிறது.

மிகவும் வெளிப்படையாகவும,; மறைமுகமாகவும,; வீதியோரக் கடைகளிலும் பாடசாலைச் சூழலிலும் விற்கப்படும் இத்தகைய பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட  மதுசாரம் மற்றும் புகையிலைத் தடைச் சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கலாம்.

அநாகரிக கலாசாரத்திற்குள் மூழ்கித் தத்தளிக்கும் மாணவர்கள் 'மாவா'  ஹேரளா கஞ்சா ஐஸ்பேக் போன்ற போதை தரக் கூடிய பாவனைப் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஆளாகி தங்களைத் தாங்களாவே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.;; உலக பிரபல்யங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கையடக்கத் தெலைபேசிகளின் பெயர் போன்று தற்காலத்தில மாவா, ஹேரளா கஞ்சா, ஐஸ்பேக் என்ற போதையை ஏற்படுத்தும் பொருளின் பெயர்களும் கட்டிளமைப் பருவத்தினர்  மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது. 

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சத வீதத்தினர் புகைத்தல் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு,  பாடசாலை மாணவர்களில் ஆயிரத்தில் ஒருவர் புகையிலை பாவனைக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால்தான புகையிலையை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் யாழ் மாவட்டத்தில் புகையிலை உற்பத்தியைக் குறைக்குமாறு அல்லது உற்பத்தியியைக்; கைவிட முன்வர வேண்டுமென மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கடந்த வருடம் சம்பத்தப்பட்டவர்களை அறிவுறுத்தியிருந்தது. 

பணத்தை மாத்திரம் மையப்படுத்தி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர். வளரும் இளம் சந்ததியினரை ஆண்யைற்றவர்களாக பிள்ளைப் பேற்றில் பலவீனமானவர்களாக இன்னும் பல்வேறு உடல் உபாதைக்கு தள்ளப்படக் கூடியவர்களாக மாற்றுகிறார்கள் என்பதை மறந்து இவர்கள்; பணத்தில் கொண்ட பேராசையினால் இத்தகைய போதைப் பொருட்களின் விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இத்தகையவர்களின் பண ஆசைக்கு பலியாகும் அப்பாவி மாணவர்களைக் காப்பாற்ற வேண்டியது பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் முழுச் சமூகத்தினதும் கட்டாயப் பொறுப்பாகவுள்ளது.

போதை ஒழிப்பின் தடைகள்

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை மதுபானசாலைகள் என்பவவை நாட்டில் போதைப் பொருள் பாவனையையும், விற்பனையையும், கடத்தல் செயற்பாடுகளையும் அதிகரிக்கச் செய்துள்ளதாகவும்  அவையே போதைப் பொருள் ஒழிப்புக்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருட்கள் என்ற வரையறைக்குள் மதுபானமும் ஒன்று. இலங்கையில் மதுபானங்களை விற்பனை செய்வதற்காக ஏறக்குறைய 3000 அங்கீகாரமளிக்கப்;பப்ட மதுபானக் கடைகள் நாடுபூராகவும் உள்ளன. இதேவேளை,;  வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் மதுபான கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றன.

இலங்கையில் போதைப் பொருள் அல்லது மதுபானம் அதிகளவில் பயன்படுத்தப்படும் மாவட்டங்களின் தரவரிசையில் யாழ்ப்பாண மாவட்டம் முதல் இடத்தையும், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், மூன்றடாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும் வகிப்பதாக கடந்த கால தரவுகள் குறிப்பிடுகின்றன.தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழும் இம்மாவட்டங்களில் மதுபான சாலைகள் அதிகரித்துள்ளமை அல்லது மதுபானத்தின் பாவனை அதிகாரித்துள்ளமை தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டியது சமூக ஆர்வலர்களின் தலையாய கடமையாகும்.

குறிப்பாக, இப்பிரதேசங்களில் இம்மதுபான சாலைகள் பாடசாலைகளின் அருகாமைத் தூரத்திலும்; வழிபாட்டுத்தளங்களின் அருகாமையிலும்  நிறுவப்பட்டுள்ளதானால் அவை சமூக, ஆன்மிக சூழலியல்; பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பதாக இவற்றுக்கு எதிராக எழுப்படும் எதிர்புக் கோஷங்களின் மூலம் அறிய முடிகிறது.


சமூகங்களினதும், பிரதேசங்களினதும் சமூக, பெருளாதார, குடும்ப, ஆன்மிக, சூழலியல் சார் விடயங்களிலும் பிரச்சினைகளையும் தாக்கத்தையும் செலுத்தி சமூகப் பிரச்சினையில் முதலிடம் பெறுவதாகக் கருதப்படும் போதைப் பொருள் பாவனையிலிருந்து மாணவ சமதாயத்தைக் காப்பாற்றுவதோடு போதையிலிருந்து  இந்நாட்டைக் காப்பாற்ற முன்னுரிமை வழங்குவதும், இற்றிற்குத் தடையாகக் காணப்படும் காரணிகள் அடையாளம் காணப்பட்டு அற்றைத் தகத்தெறிந்து இந்நாட்டை போதையிலிருந்து விடுவிக்க  இந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும்  முன்வருவது தலையாய கடப்பாடாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்


No comments:

Post a Comment