இலங்கைக் கிரிக்கெட் குழுவில் விளையாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி பலர் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்ததாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்த சந்தர்ப்பம் தொடர்பில், தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலிடம் கடந்த (16) புதன்கிழமையன்று முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமையன்று அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கும்போது, இச்சம்பவம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்று வரும் ஊழலை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலிடம் முறையிட்டபோது, அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். நானும் இதேவிதமாக அதிர்ச்சிக்குள்ளாகினேன். ஒரு நிமிடம் என்னை யாரோ ஆபத்தில் மாட்டிவிடப் பார்ப்பதாகவே நானும் எண்ணினேன். இதுபோன்ற சம்பவங்கள், இதற்கு முன்னர் எமது வரலாற்றில் இடம்பெற்றதேயில்லை.
அத்துடன், மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய விளையாட்டுச் சட்டத்தின் நகல், எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment