மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பு பரவலாக பேசப்படுகின்ற போதிலும் வழமை போன்று அச்சம்பவம் திட்டமிட்ட அரசியல் சதியாக இருக்க வேண்டும் எனும் சந்தேகமே முற்படுத்தப்பட்டது. அந்த அளவு, காயப்பட்டு அனுபவப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகம்.
இதேவேளை, உடுநுவர மற்றும் யட்டிநுவர பகுதிகளில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவராலேயே உடைக்கப்பட்டமையானது மாவனல்லை சம்பவம் இறைவன் உதவியால் வேறு இடங்களுக்கு பரவவில்லையென்பதோடு இதன் அரசியல் பின்னணி குறித்த சந்தேகத்தையும் தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில், கைதான முஸ்லிம் இளைஞன் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாவனல்லையில் அடிப்படைவாத மூளைச்சலவை செய்யப்பட்ட குழுவொன்று உருவாகியுள்ளதாக தற்போது நம்பப்படுகிறது. இக்குழுவினரின் நோக்கமும் எதிர்கால நடவடிக்கைகளும் பற்றி அலசி ஆராய்வதற்கு முன்னராக எக்காரணங் கொண்டும் முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு புத்தர் சிலைகளை உடைத்திருக்கக் கூடாது எனும் ஆதங்கம் சமூக மட்டத்தில் தலையோங்கி நிற்கிறது.
சில சிங்கள பத்திரிகைகள் பொலிசாரை ஆதாரங் காட்டி வேறு வகையான தகவல்களையும் வெளியிட்டுள்ளன. இன்றைய மவ்பிமவின் அடிப்படையில் மாவனல்லையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஏனைய இனங்களுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லையென சித்தரிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே தாம் இக்கருத்தை வெளியிட்டதாக பத்திரிகைத் தரப்பு தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகம் பல கூறுகளாக பிரிந்தே வாழ்கிறது. இப்பிரிவுகள் அரசியல் மற்றும் மார்க்க அடிப்படையிலாகும். அரசியல் பிரிவினைகள் அவ்வப்போது முட்டி மோதி முடிவு காண்பதாக இருப்பினும் மார்க்கப் பிளவுகளும் 1980களுக்குப் பிறகு வளர்ச்சி பெற்ற வெளிநாட்டு கொள்கை இறக்குமதிகளின் தாக்கம் பிறிதொரு தலைமுறையினரை அழித்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.
இன்று பல ஊர்களில், பெற்றோர் உற்றார் உறவினரை மதிக்க முடியாத மார்க்க சிந்தனையாளர்கள் உருவாகி, தர்க்கம் புரிவதையே வேலையாகக் கொண்டு பேஸ்புக்கும் கையுமாக இருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் இந்நாட்டை இஸ்லாமிய மயப்படுத்த 1970களின் இறுதியில் , இக்காலம் போன்று தகவல் தொழிநுட்பம் வளர்ச்சி பெற்றிருக்காத காலத்தில் விதைக்கப்பட்ட விதைகளின் விளைவாக உருவாகி இருக்கின்றனர்.
இவர்களில் எத்தரப்பும் தாம் சார்ந்த கொள்கை தவிர ஏனைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்களை முஸ்லிமாக மதிக்கவோ, சகோதரர்களாக பார்க்கவோ முடியாத அறுந்த நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் வழிகாட்டிகள் யார்? எனும் கேள்விக்கான விடையும் அவசியப்படுகிறது.
அந்த வழிகாட்டிகள் ஏனையோரை சகோதரர்களாக, முஸ்லிம்களாக பார்க்கிறார்களா? ஏற்கிறார்களா? போன்ற கேள்விகளை ஆழமாக ஆராயுமிடத்து கடந்த 30 - 40 வருடங்களில் ஒவ்வொரு கொள்கை இயக்கமும் உருவாக்கிக் கொண்ட தனித்தனி கனவு ராஜ்ஜியங்கள் பெரும்பாலும் சகோதரத்துவத்தை விட்டு விலகியதாகவும் தாமே சுவர்க்கத்துக்கு நன்மாராயம் பெற்ற புத்திஜீவிகள் எனும் நிலைப்பாட்டிலேயுமே இருக்கின்றன.
தர்க்க ரீதியாக, இதனை மறுதலிக்க எந்த இயக்கம் முன் வந்தாலும் இக்காலத்தில் அது வெறும் நகைப்புக்குரியதே. ஏனெனில் இங்கு யாரையும் குற்றஞ்சாட்டி, யாரையும் காப்பாற்றுவது நோக்கமோ அல்லது ஒருவரின் தர்க்கத்திறமையினால் உண்மையை மூடி மறைப்பதோ நோக்கமல்ல. மாறாக, எதிர்கால சமூகத்துக்கு 'சிறுபான்மை' சமூகமாக ஒரு நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வது எப்படியெனும் போதனை அவசியப்படும் காலகட்டம் என்பதால் அதனை அடுத்து வரும் 50 வருடங்களுக்கு எல்லோருமாக சேர்ந்து முன்னெடுப்பது எப்படியென சிந்திக்க வேண்டிய கால கட்டமாகும்.
பேஸ்புக் பக்கங்களும், ஒலி வாங்கிகளும், வெளிநாட்டு சம்பளங்களும், உலகோடு ஒன்றிருப்பதாகக் கருதி ஒரு சில மத்திய கிழக்கு நாடுகளை மாத்திரம் பின்பற்றி வாழும் வாழ்க்கைகளும் இந்நாட்டில் இச்சமூகத்தின் இருப்பையும், எதிர்காலத்தையும் எத்தனை தூரம் பாதிக்கிறது, உலக உம்மத்தின் ஒரு பகுதியாக, அதேவேளை இலங்கையின் குடிமக்களாக முஸ்லிம்கள் தொடர்ந்தும் வாழ்வதெப்படி போன்ற விடயங்கள் சமூக மட்டத்தில் வெளிப்படையாக அலசி ஆராயப்பட்டு விடை காணப்பட வேண்டிய விடயங்களாகும்.
இம்மை - மறுமை, மனித நேயம், சுவர்க்கம் - நரகம் பற்றி பேசிக்கொள்ளும் அளவுக்கு அவற்றின் ஆன்மீக தாற்பரியங்கள் உள்வாங்கப்பட்ட சமூகம் உருவாகி விட்டதா? பல கூறுகளாக தாம் சார்ந்த கொள்ககளுக்காக மாத்திரம் பிரச்சாரம் செய்து வாழும் பல நூறு உலமாக்கள் பொதுத்தளத்தில் இருந்து சகோதரத்துவத்தை சிந்திக்க ஆரம்பித்து விட்டார்களா? என ஆழமாக சிந்திக்க வேண்டிய காலம்.
-இ.ஷான்
1 comment:
Well said.. Our community leaders and ulamaa should take serious note of this...
Post a Comment