குருநாகல், சியம்பலகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் திரு. சகரியா தொடர்புபட்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அது தொடர்பில் பாடசாலை தரப்பிலிருந்து விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவனின் எதிர்காலத்தின் பால் பாடசாலை நிர்வாகம் அக்கறை காட்டுவதன் எல்லை எது? என்ற கேள்வியையும் வாதப் பிரதிவாதங்களையும் இது தோற்றுவித்துள்ளது என்றால் மிகையில்லை.
ஆண்டு 13 வரையான கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டிய அதேவேளை ஒற்றை மாணவனின் செயற்பாட்டால் பல ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முயன்றதாகவே பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் தரப்பும் விளக்கமளித்துள்ளது. இது தட்டிக்கழிக்கப்பட வேண்டிய விடயமன்று.
எனினும், 16 வயது நிரம்பிய மாணவன் இன்னும் ஒழுக்கத்தையும், கல்வி மீதான ஆர்வத்தையும் கற்றும் பெற்றும் எதிர்கால அக்கறையின்றி தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதற்கு யார் யாரெல்லாம் காரணம் என்ற கேள்வியும் இங்கு முன் வைக்கப்படவேண்டிய விடயமாகும்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் 28 வருடங்களுக்கு முன்பாக எனக்குக் கற்பித்த ஆசிரியை ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் அமர்ந்து உரையாடுகையில் 2016ம் வருடம் கூட தாம் பணியாற்றிய பாடசாலையில் மாணவர்களை வீடு தேடிச் சென்று பாடசாலைக்கு அழைத்து வரும் அல்லது அவர்களை அனுப்பும் படி பெற்றோரைக் கெஞ்சும் சூழ்நிலை நிலவியதாக தெரிவித்திருந்தார்.
இச்சமூகத்துக்குக் கல்வி மீதான நாட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிக்கு 130 வருட வரலாறு உண்டு. அப்போது மேற்கத்தேய கல்வி இஸ்லாமிய வாழ்வியலைக் கெடுத்து விடும் எனும் அடிப்படையில் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. இன்றைய நவீன உலகத்திலும் கூட பாடசாலை, பல்கலைக்கழக படிப்பினை விமர்சிக்கும் மார்க்க அறிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நவீன உலகின் சவால்களை சமாளிக்க அரபுக்கலாசாலைகள் கூட நடைமுறை கல்வித் திட்டத்தை உள்வாங்கி மாற்றங்களைக் கண்டு வரும் அதேவேளை சமூகம் அதன் பயனை எவ்வாறு அடைந்து கொள்கிறது என்பது கேள்வியாகவே தொடர்கிறது.
பாடசாலைக் கல்வியில் நாட்டமில்லாத குழந்தைகளை மதரசாக்களில் சேர்த்து விட்ட காலம் போய், ஆகக்குறைந்த தகுதியாக க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றை நாடி நிற்கும் அளவுக்கு அரபுக் கலாசாலைகள் வளர்ந்துள்ளமை பாராட்டத்தக்கதாக இருப்பினும் அதற்காக எடுத்துக் கொண்ட காலம் மிக நீண்டதாக இருக்கிறது. எனவே, இச்சமூகத்துக்கு கேட்கும் இடத்திலிருந்து கல்வியின் அருமையும் அவசியமும் புகட்டப்பட வேண்டியதாக இருக்கிறது.
அதன் மீதான பொறுப்பு முதலில் பெற்றோருக்கும் அடுத்ததாக சமூகத்தின் மார்க்க அறிஞர்களுக்கும், புத்தி ஜீவிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது..
குருநாகல் பாடசாலை சம்பவம் லட்சத்தில் ஒன்று என்பதை விட தினசரி நாட்டின் பல பாடசாலைகளில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகளுள் ஒன்றெனச் சொன்னால் மிகையில்லை. சற்றே விபரமாக சிந்தித்த நபர் அதிபரின் பேச்சின் 'பகுதியை' ஒளிப்பதிவு செய்து வெளியிட்டதன் மூலம் நியாயப்படுத்த முனைந்த தவறினை விளக்கக் காணொளி மூலம் பாடசாலை நியாயப்படுத்தியுள்ள போதிலும் இங்கு கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும் எது? எனும் கேள்வியை இரு தரப்பும் தமக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.
குறித்த மாணவனின் தாயாருக்குத் தன் பிள்ளையின் கல்வி மீதிருக்கும் தற்போதைய ஆர்வம் அவரது ஒழுக்க விவகாரத்திலும் இருந்திருக்கலாம் என பாடசாலை தரப்பு சொல்லாமல் சொல்லும் குற்றச்சாட்டு 10 வருட கல்வியில் அதனைப் புகட்டி வெற்றிகாணாது கோட்டை விட்ட பாடசாலை நிர்வாகத்தையும் சாரும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.
எனினும், இவர் தான் குற்றவாளியென எப்பக்கமும் நியாயப்படுத்த முடியாத கடந்த காலத்திற்கான பொறுப்பையேற்று சமூகமும், புத்திஜீவிகளும், இந்த மாணவனுக்கு மட்டுமல்லாமல் கல்வித்தேவையின் அருமையறியாதிருக்கும் ஆயிரக்கணக்கான எதிர்கால சந்ததியினருக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் வழி காட்டி அரவணைத்துச் செல்ல வேண்டும்.
-Irfan Iqbal
Chief Editor, sonakar.com
No comments:
Post a Comment