புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க இணக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 11 October 2018

புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க இணக்கம்


யுத்தகாலத்தில் தமது வாழ்விடங்களையும், விவசாய காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பொதுமக்களின் காணிகள், யுத்தம் நிறைவுக்கு  வந்தபின்னரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்குவதிலும்  அல்லது அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும் இதுவரை காலமாக நிலவிய இழுபறி நிலைக்கு நிரந்தர தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில்  இணக்கம் காணப்பட்டது.


கிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.அதில்  அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக,கிழக்குமாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் சம்பத்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக்,  மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான்,அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதேச ஜம்இய்யத்துல் உலமாத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலதிக காணிகளையும்,விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வணபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காணிகளுக்கான  அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் ,ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கபட்டது.

-Mohamed Farveen

No comments:

Post a Comment