MEEDS இன் 'மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி' மற்றும் 'மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு - மஸ்ஜிதை மையப்படுத்திய மஹல்லா அபிவிருத்தி திட்டங்களுக்கான கைநூல்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நாளை (26.09.2018) கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இவ்வாக்கம் பிரசுரமாகிறது.
MEEDS ஓர் அறிமுகம்:
மஸ்ஜிதை மையப்படுத்தி ஒரு பிரதேசத்தை ஆன்மீக ரீதியாகவும் பௌதிக ரீதியாகவும் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனமே MEEDS (Masjid Based Education and Economic Development Society) ஆகும்.
நிறுவன ரீதியான, அனைத்துப் பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கிய, விஞ்ஞானபூர்வமான உத்திகளை உள்ளடக்கிய பேண்தகு அபிவிருத்தியை நிலைநிறுத்துவதே MEEDS இன் பிரதான இலக்கு. அதனை அடைந்து கொள்வதற்கு ஆலிம்கள், புத்திஜீவிகள், வளவாளர்கள், துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் வழிகாட்டல்களுடனும் MEEDS இன் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்ற ஒரு நிறுவனம்.
மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டு ஆய்வுகளில் ஈடுபடல், திட்டமிடல், பயிற்றுவித்தல் போன்ற பணிகளே MEEDS இன் பிரதான செயற்பாடுகளாகும். அந்த வகையில் MEEDS நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள், இயக்கங்கள், நிறுவனங்களுக்கு சார்பானதும் அல்லது எதிரானதுமான நிறுவனம் அல்ல. இது முஸ்லிம் சமூகத் தளத்தில் சன்மார்க்க, சமூகப் பணிகளில் ஈடுபடும் சகல தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்று மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டிற்காக உழைக்கும் நிறுவனமாகும். இதனை ஒரு நிறுவனமாக அடையாளப்படுத்துவதை விட சமூக நலப் பணிகளில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கான ஒரு திறந்த களம் எனக் குறிப்பிடுவதே மிகவும் பொருத்தமானது.
எனவேதான் MEEDS செயற்பாட்டாளர் கள் பகுதி நேர தொண்டர்களாக பணியாற்றி வருகின்றார்கள்.
MEEDS செயற் திட்டங்களின் சிறப்பம்சங்கள்:
மஸ்ஜித்களை சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்குகின்ற சமூக நிறுவனங்களாக கட்டியெழுப்புவதன் மூலம் முன்மாதிரி சமூகம் ஒன்றை உருவாக்குவதே இதன் தூரநோக்காகும். அந்த வகையில் நாடெங்கிலுமுள்ள மஸ்ஜித் பரிபாலன சபைகளை வலுவூட்டுவதன் மூலம் மஸ்ஜித்களை சமூக மட்ட நிறுவனமாக மேம்படுத்தி, அதன் மூலம் சமூக அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என MEEDS நம்புகிறது.
MEEDS செயற் திட்டங்களின் மூலம் மஸ்ஜித்கள் சமூக அபிவிருத்திக்கு அவசியமான நிறுவனக் கட்டமைப்பாகவும் இலகுவில் அதற்காக ஆளணியை அணி திரட்ட முடிகின்ற தளமாகவும் தரவுகளை சேகரித்து திட்டங்களை வரைகின்ற இடமாகவும் மிளிர வேண்டும்.
சமூக அபிவிருத்திக்கு அவசியமான முக்கிய துறைகளின் ஒருக்கிணைப்புச் செய்தல், அவற்றின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தல், ஆய்வுத் தரவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அபிவிருத்தி முடிவுகளை மேற்கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாகவே MEEDS செயற் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தவிரவும் சமூகத்தின் தற்காலிக, குறுகிய கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பதிலாக, மஹல்லாக்களில் திட்டமிடப்பட்ட நீண்ட கால அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் MEEDS இன் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒத்த குறிக்கோள்களுடன் செயற்படும் ஏனைய அமைப்புக்கள், நிறுவனங்களுடன் MEEDS கை கோர்த்து செயற்படும்.
MEEDS இன் அடைவுகள்:
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட MEEDS மஸ்ஜித் களை மையப்படுத்தி சமூக அபிவிருத்திக்கு அவசியமான ஆய்வுகள், பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகிறது. மஸ்ஜித் பரிபாலன சபைகளை வலுவூட்டுதல், மஹல்லாக்களின் நீண்ட கால திட்டமிடலுக்காக நிர்வாகிகளை தயார்படுத்துதல் முதலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புக்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை MEEDS மேற்கொண்டு வருகிறது.
இதுவரையில் இலங்கையின் பல பாகங்களிலும் 200க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களின் பரிபாலன சபை அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தெல்தோட்டை, ஹெம்மாதகம, மாவனல்லை, உடத்தலவின்ன பகுதி மஸ்ஜித் சம்மேளனங்களுக்கான விஷேட கருத்தரங்குகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அந்த அனுபவங்களினடியாக மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டை திறம்பட மேற்கொள்வதற்கான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. துறைசார் நிபுணர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.
இந்த அடிப்படையில் மஸ்ஜித்களுக்கான இரண்டு பிரதான வழிகாட்டி கைநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி, மற்றையது மஸ்ஜிதை மையப்படுத்திய மஹல்லா அபிவிருத்தி திட்டங்களுக்கான கைநூல்.
கைநூல்கள் குறித்து...
சமூக மட்ட நிறுவனங்களை வலுவூட்டுவதற்கு உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும்; பயன்படுத்தப்படும் சிறப்புச் செயற்பாடுகள், அது பற்றிய ஆவணங்கள், துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் MEEDS தனது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கற்றுக்கொண்ட பாடங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே இவ்விரு கையேடுகளும் விருத்தி செய்யப்பட்டுள்ளன.
துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ச்சியான இலக்குக் குழு அமர்வுகள் (குழஉரள புசழரி னுளைஉரளளழைn) மேற்கொள்ளப்பட்டன. குறித்த துறைகளில் நிபுணத்துவம் கொண்ட தனி நபர்களை சந்தித்து அவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
மேற்படி துறைகள் தொடர்பாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள நிகழ்ச்சித் திட்டங்;கள் மற்றும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதன் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்கள் மற்றும் பின்னூட்டங்களை மையமாகக் கொண்டு இவ் வழிகாட்டியின் முதல் வரைபு தயாரிக்கப்பட்டது. அது துறைசார் நிபுணர்களால் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவும் அதனை ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் பரிந்துரைப்புக்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடனான பல மட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அவர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்ட நிலையில் மஸ்ஜித் பரிபாலனம் தொடர்பான வழிகாட்டி கைநூல் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
'மஸ்ஜித் முகாமைத்துவம்' தொடர்பான கைநூல், மஸ்ஜித் ஒன்றின் உள்ளக நிர்வாகத்திற்கு தேவையான வழிகாட்டலை வழங்குகிறது. இதில் மஸ்ஜித் நிர்வாகம் பற்றிய இஸ்லாமிய நோக்கு, மஸ்ஜித் நிர்வாகம் குறித்த அறிமுகமும் எண்ணக்கருக்களும், மஸ்ஜித்; நிர்வாக முறைமை, நிர்வாக உறுப்பினர்களிடம் இருக்க வேண்டிய நிர்வாக மற்றும் முகாமைத்துவ ஆற்றல்கள், நிதி முகாமைத்துவம், கணக்குப் பதிவு முறைகள், மஸ்ஜித் பாதுகாப்பு, அனர்த்த முன்னாயத்தம், மஸ்ஜித்களின் பௌதிக முகாமைத்துவம் ஆகிய 9 பிரதான தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
'மஸ்ஜித் மைய சமுக மேம்பாடு' குறித்த கைநூல், மஸ்ஜித்கள் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடியுமான துறைகள் என்ற வகையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார விருத்தி, சமூக ஒற்றுமையும் சமாதான சகவாழ்வும், இளைஞர் வலுவூட்டல், பெண்கள் வலுவூட்டல், அனர்த்த முகாமைத்துவம் ஆகிய ஏழு துறைகள் பற்றி அலசுகிறது. குறித்த துறைகளில் அபிவிருத்தியின் உச்சத்தை எட்ட மஸ்ஜித்களால் மேற்கொள்ள முடியுமான நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகளுக்கான உதாரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை இக்கைநூலின் விஷேட அம்சமாகும்.
இக் கைநூல்களை ஒருவர் சுயமாக வாசித்து விளங்கிக் கொள்ள முடியுமாயினும், ஆநுநுனுளு நடத்தும் பயிற்சிநெறியில் பங்கேற்று போதிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதனூடாகவே மிகச் சரியான தெளிவொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என MEEDS பரிந்துரைக்கிறது.
MEEDS இன் எதிர்கால செயற்பாடுகள்:
மஸ்ஜித் மைய அபிவிருத்தியை இலக்காக கொண்ட ஆய்வுகள், திட்டமிடல்களை மேற்கொண்டு பயிற்சிகளை வழங்குவதோடு MEEDS இன் பிரதான செயற்பாடுகள் பின்வரும் தளங்களில் விரியும்:
• மஸ்ஜித்கள் சமூக மட்ட நிறுவனமாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
• மஸ்ஜித்களை திறம்பட நிர்வகிப்பதற்கான வழிகாட்டல் அமர்வுகள்
• கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூக ஒற்றுமை, பெண்கள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், தரவு சேகரிப்பும் பகுப்பாய்வும் மற்றும் செயற்திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மஸ்ஜித் நிர்வாகத்தை வலுவூட்டுதல்
• ஒவ்வொரு மஹல்லாவுக்குமான இரண்டு வருட கால அபிவிருத்தி திட்டங்களை தயார் செய்வதற்கான அறிவுசார் பங்களிப்புக்களை வழங்குதல்
தவிரவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பத்து மஸ்ஜித்களை முன்மாதிரி மஸ்ஜித்களாக உருவாக்குவதற்கான முயற்சிகளையும் MEEDS முன்னெடு த்து வருகிறது.
இவற்றுக்கு அப்பால் மஸ்ஜித் இமாம்களுக்கான தொடர்பாடல் திறன், மஹல்லாக்களில் சிகரட், போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான செயன்முறை வழிகாட்டல், சமூக ஊடக பாவனை பற்றி இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கான வழிகாட்டல், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக மஸ்ஜித்களின் தொண்டர்களுக்கான வழிகாட்டல் முதலான செயற்திட்டங்களுக்கான தனியான கைநூல்களை வடிவமைத்து எதிர்காலத்தில் அவற்றை வெளியிடுவது தொடர்பிலும் MEEDS கவனம் செலுத்தி வருகிறது.
MEEDS உடன் இணைந்து பங்காளிகளாக:
MEEDS இன் நிகழ்ச்சித் திட்டத்தை அறிந்த பல மஸ்ஜித் நிர்வாகிகள் தம்மைப் பயிற்றுவிக்குமாறு கோரியுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இயங்கி வரும் ஆநுநுனுளு இனால் எல்லா மஹல்லாக்களுக்கும் நேரடியாக விஜயம்செய்து பயிற்சிநெறிகளை வழங்குவது சிரமசாத்தியமானது. எனவே ஒரு பொதுவான இடத்திற்கு மஸ்ஜித் நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் முறை ஒன்றை MEEDS ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பயிற்றுவிக்கின்ற வளவாளர் குழு ஒன்றையும் உருவாக்குவது தொடர்பில் MEEDS கவனம் செலுத்தி வருகிறது.
அதன் ஆரம்ப நகர்வாக எதிர்வரும் 26.09.2018 அன்று நடைபெறும் MEEDS இன் கைநூல்கள் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விஷேட செயலமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கிராம எழுச்சியினூடாகவே சமூக எழுச்சி சாத்தியம். சமூகம் எழுச்சியடைகின்றபோது நாடு எழுச்சி பெறும்.
எனவே, மஸ்ஜிதை மையப்படுத்தி கிராமங்களைக் கட்டியெழுப்புகின்ற பணியை முன்னெடுத்து வரும் MEEDS இன் செயற்திட்டம் இலக்கை நோக்கிப் பயணிக்க உரம் சேர்ப்பதும் கரம் கோர்ப்பதும் முஸ்லிம் சமூகத்தின் தலையாய பணியாகும்.
-Jemsith Azeez
No comments:
Post a Comment