மரண மைதானத்துக்கு நகர்த்தப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் - sonakar.com

Post Top Ad

Thursday, 20 September 2018

மரண மைதானத்துக்கு நகர்த்தப்படும் இஸ்லாமிய அறிஞர்கள்


சவூதியில்    சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல இஸ்லாமிய அறிஞரான சல்மான் அவ்தாவுக்கு  மரண தண்டனை வழங்குமாறு முடிக்குரிய பின் சல்மான் நிர்வாகம்  பரிந்துரைத்துள்ளது.  இதை  தொடர்ந்து கடந்த அடுத்த சில நாட்களில் அறிஞர்களான ஆவாத் அல்-கர்னி , அலி அல்-அம்ரி ஆகியோருக்கு எதிராகவும்  மரண  தண்டனை வழங்குமாறு சவூதி அரசு   பரிந்துரைத்துள்ளது என்ற தகவல்களை வெளியாகியுள்ளது.    


இந்த மரண தண்டனை பரிந்துரை சர்வதேச அளவில் பாரிய அதிர்வலைகளை ஏற்றப்படுத்திவருகின்றது.  சர்வதேச அளவில் அறியப்பட்ட பிரபல இஸ்லாமிய அறிஞரான கலாநிதி ஸல்மான அவ்தாவுக்கு எதிராக  37 பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை பின் சல்மான் நிர்வாகம் முன்வைத்தே  மரணதண்டனையை    பரிந்துரைத்துள்ளதுதற்போது இரகசியமாகவும் ,விரைவாகவும்  இடம்பெறும் இந்த விசாரணையின் ''இறுதித் தீர்ப்பு நாள்'' இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் எந்த நேரத்திலும் இறுதி தீர்ப்பு  இரகசியமாக வழங்கப்பட்டு அவர்களின் தலைகள் துண்டாடப்பட்டு  மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் பலராலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இது தவிர கைது செய்யப்பட்டு பல நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள பல அறிஞர்களுக்கும்  இரகசிய விசாரணை மூலமாக பல்வேறு கடுமையான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அறபு தகவல்கள் குறிப்பிடுகின்றன.   

இந்த மரணதண்டனை பரிந்துரை உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் மத்தியிலும்இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியிலும்  அதிர்ச்சியையும்  கவலையையும்  ஏற்றப்படுத்தியுள்ளது  ,இஸ்லாமிய அறிஞரான கலாநிதி ஸல்மான அவ்தாவை பயங்கரவாதியாக சித்தரித்துள்ள   முஹம்மது பின் சல்மான் நிர்வாகம்  அவரின்  ''கழுத்தை வெட்டி''     சீர்த்திருத்தம் கோரும் அவரின்   குரலை இல்லாமல் செய்துவிட முயற்சிப்பதாக இஸ்லாமிய முன்னணி செயல்பாட்டாளர்கள்  பலர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் , சவூதியின்  முஹம்மது பின் சல்மான்முடிக்குரிய இளவரசராக ஆக்கப்பட்ட பின்னர் சீர்திருத்தம் கோரும் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் ,கல்வியாளர்கள் மனித உரிமைசெயல்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சிறையிலிடப்பட்டுள்ளனர்.  

சர்வதேச அளவில் பெரிதும் அறியப்பட்ட பிரபல இஸ்லாமிய அறிஞரான கலாநிதி ஸல்மான் அவ்தா,  ஜித்தா தஹ்பான் சிறையில் இருந்து  றியாத் அல் ஹாயர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு விசேட இரகசிய நீதிமன்றம் ஒன்றினால் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் விபரம்   கூட தெரியாத நிலையில் தனது தந்தை மீது  பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இரகசியமாக விரைவாக விசாரணை இடம்பெற்றுவருவதாக அவரின் மகன் டொக்டர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஸல்மான் அவ்தா உட்பட ஏனைய புத்திஜீவிகள் ,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எழுத்தாளர்களை விடுவிக்குமாறு மனித உரிமை செயல்பாட்டாளர்களினால் விடுக்கப்பட்டுவந்தகோரிக்கைகளுக்கு முடிக்குரிய மன்னர் நிர்வாகம் பயங்கரவாத குற்றசாட்டு ,இரகசிய விசாரணை மரணதண்டனை  என்ற ஆபத்தான   பதில்களை  வழங்கிவருவதாக மனித உரிமைசெயல்பாட்டாளர்கள் விமர்சங்களை முன்வைத்துள்ளனர்.  

சவூதியில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இஸ்லாமிய அறிஞரான கலாநிதி ஸல்மான அவ்தா  சுமார் 60 வரையான நூல்களை எழுதியுள்ளார்,   அவற்றுள்  ''fப்பல் லா ஹரஜ்'' (செய்  ,தவறில்லை) மற்றும் ''மஹ்ரகத்துள் இஸ்லாம் வல் இல்மானியா'' (இஸ்லாம் மற்றும் மதச் சார்பின்யின் சமர் ) என்ற நூல்கள்  பெரிதும் பிரபல்யமான அவரின் நூல்களில் உள்ளவையாகும், இதில் ''fப்பல் லா ஹரஜ்'' என்ற நூலில்  கலாநிதி ஸல்மான அவ்தா  இஸ்லாத்தின் இலகுபடுத்தலின் வகிபாகத்தை சிறப்பாக முன்வைத்திருப்பதாக பாராட்டப்படுகிறார்இவர்  சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் முஸ்லிம் அறிஞர்களுக்கான  சர்வதேச ஒன்றியத்தின் உப செயலாளராகவும் மற்றும் ஐரோப்பிய முஸ்லிம் பத்வா கவுன்ஸிலின்  உறுப்பினராகவும் , குவைத்தில் செயல்பட்டுவரும் அல்நுஸ்ரா என்ற தவ்வா அமைப்பின் இஸ்தாபகராகவும் இஸ்லாம் டுடே என்ற அரபி இணையத்தளத்தின்  இயக்குனராகவும் செயல்பட்டுவந்துள்ளார்இவர் 1993 -94 ஆண்டுகால பகுதியில் அமெரிக்கா ,இஸ்ரேல் தொடர்பில் சவூதி அறிஞரான பின் பாஸின் பத்வாக்களை விமர்சனத்துக்கு உட்படுத்தியதுடன்   அமெரிக்காவுடனான சவூதியின் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக  விமர்சனம் செய்தமைக்காக 1994 ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் தொடக்கம்  ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு  1999 ஆம் ஆண்டு பல நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் அதன் பின்னரும் சவூதின் சூரா கட்டமைப்பு மற்றும் அதன்  அரச கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் இஸ்லாத்தின் விழிமியங்களை முறையாக உள்வாங்குமாறு  அழுத்தங்களை முன்வைத்து வந்துள்ளதுடன் தேர்தல் முறையை சவூதி மன்னர் நிர்வாகம் உள்வாங்கவேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துவந்தார் , இறுதியாக இவர்   கடந்த ஆண்டு 2017 செப்டம்பர் மாதம் பின் ஸல்மான் முடிக்குரிய இளவரசராக நியமனம் பெற்றபின்னர் கைது செய்யப்பட்டார்.


சல்மான் அவ்தாவின்    ட்விட்டர்   கணக்கில்  சுமார் 14.2 மில்லியன் மக்கள் இவரை தொடர்கின்றனர் , இவர் கடந்த ஆண்டு கைதுசெய்யப்படும் வரை   ட்விட்டர் மூலமாகவும் தனது கருத்துக்களை பதிவுசெய்து  வந்தார் .இவர் மீதான 37 பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இவர் பிரபல இஸ்லாமிய அறிஞரான கலாநிதியூஸுப் அல் கர்ளாவி எழுதிய இரு புத்தகங்களை  தனது வீட்டு நூலகத்தில் வைத்திருத்தமையும்  ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாக   இவரின்   மகன்  அப்துல்லாஹ் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇது தவிர இவர் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினராக இருக்கின்றமை ஐரோப்பிய முஸ்லிம் களுக்கான பத்வா சபையில் அங்கத்துவம் பெற்றிக்கின்றமை மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றமை போன்றவை பயங்கரவாத குற்றக்ச்சாட்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது என மகன் தெரிவித்துள்ளார்.

இவருடன் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்  இவர்களுள் பிரபல அறிஞர்களான கலாநிதி    ஆவாத் அல்-கர்னி  கலாநிதி முஹம்மது  மூஸா அல்-ஷரீப்  கலாநிதி . ஆதில் பனாயிமா  மற்றும்   கலாநிதி அலி அல்-அம்ரி  ஆகியோர் முக்கிய நபர்களாகும்.

இவர் கைது செய்யப்பட்ட முன்னர் பதிவு செய்திருந்த ட்விட்டர் பதிவுகளில் கட்டார் , சவூதி நாடுகளுக்கு இடையில்  நில்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும்   என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது மத்திய கிழக்கில் சவூதி ,துபாய்எகிப்துபஹ்ரைன்   ஆகிய நாடுகள் சகோதர முஸ்லிம் நாடான கட்டாருடன்  அணைத்து உறவையும்முறித்துகொண்டுள்ளன என்பதுடன் சயோனிச ஆக்கிரமிப்பு  இஸ்ரேலுடன் இரகசியமாகவும் பரகசியமாகவும் புதிய உறவுகளை ஏற்றப்படுத்திவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது, .சவூதி முடிக்குரிய  இளவரசர் பின் ஸல்மான் இஸ்ரேலின்  இருப்பை அதன் உரிமையாக அங்கீகரித்துள்ளதுடன் அவற்றுடன் பகிரங்கமாகவும் ,இரகசியமாகவும் அரசியல் ,இராஜதந்திர உறவுகளை  புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சவூதி மன்னர்களின்    ஆளுகைக்குள் இயங்கிவரும் பத்தவா சபையின் தலைவர் முfப்தி  பௌசான் சவூதி அரசாங்கத்துக்கு மாறுசெய்பவர்களை கொல்ல முடியும் என முன்னர் தெரிவித்த  பத்வா, கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொள்ளும் குறித்த இஸ்லாமிய அறிஞர்களை கொல்லபோகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அறபு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது, வன்முறையற்ற ,அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திவரும்   அறிஞர்கள், கல்வியாளர்கள் ,செயல்பாட்டாளர்கள் மீது அவர்களின் கருத்துக்களுக்காக அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை கொலைசெய்துவிட முயற்சிப்பது முடிக்குரிய இளவரசர் பின் ஸல்மானின் போலியான சீர்திருத்த கோரிக்கைக்குள் மறைந்திருக்கும் ''பயங்கரவாதத்தை''  வெளிப்படுத்துவதாக சர்வதேச சமூக பொதுவெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. 

இதேவேளை  சல்மான் அவ்தாவின்  மகன்  அப்துல்லாஹ் தனது  தந்தை "சுதந்திரமான"  கருத்துக்களை  கொண்டிருந்தமை ,சவூதி  மன்னரின் "அரசாங்கத்தின் ஊதுகுழலாக"  செயல்பட மறுத்தமை  ஆகிய காரணங்களுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.



இதேவேளை அலி அல்-அம்ரிக்கு  ஏதிராக 30 பயங்கரவாத குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. அதில் இவர் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினராக இருக்கின்றமை குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சவூதியில் பயங்கரவாத நோக்கில் இளைஞர்களை  ஒன்றுகூட்டியதாகவும்  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. .இவர் சவூதியில் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை சவூதி அரசாங்கம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. வதைமுகாமில் இருந்து மரணமைதானத்துக்கு நகர்த்தப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் ,கல்வியாளர்கள் , செயல்பாட்டாளர்கள் எண்ணிக்கை வெளிவந்திருக்கும்  எண்ணிக்கியை விடவும் பெரியது என்ற கருத்துக்களும் சவூதி மன்னர் நிர்வாகத்துக்கு எதிரான விமர்சன தளங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . 

-எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)

No comments:

Post a Comment