மட்டு-மஞ்சந்தொடுவாயில் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை - sonakar.com

Post Top Ad

Thursday, 6 September 2018

மட்டு-மஞ்சந்தொடுவாயில் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை


இலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.

நேற்று 04 செவ்வாய்கிழமை இரவு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட மேற்படி வைத்தியசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு  எதிர்வரும் 09-09-2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதம அதிதிகளாக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைஸல் காசீம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும்,சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக யுனானி வைத்திய பீடத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எம்.ஐ.மனூஹா, ஆயுர்வேத திணைக்களத்தின் அபிவிருத்தி பிரிவுக்கான பிரதி ஆணையாளர் திருமதி எம்.சாவித்திரி குணதிலக ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பெயர் பலகை திரை நீக்குதல்,வைத்தியசாலையின் சுற்றுமதிலில் 25 மின் விளக்குகளால் வைத்தியசாலை வளாகத்திற்கு மின்னொளி பாய்ச்சல்,கட்டிடத் திணைக்களத்தின் உள்ளக அபிவிருத்திப் பணிகளை கையேற்றல்,சட்டத்தரணி தேசமானிய மர்ஹூம் எம்.ஐ.எம்.நூர்தீன் ஞாபகார்த்த உரை, விஷேட வைத்திய நிபுணர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை விஷேட அச்சமாகும்.

இங்கு தரமுயர்த்தப்பட்டுள்ள குறித்த முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை அப்போதய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் 2009 மார்கழி மாதம் 1ம் திகதி கிழக்கு மாகாண சபையின் கீழ் இருந்து இலங்கை மத்திய அரசின் ஆயுர்வேத திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு தற்போது  07 ஏழு  ஆயுர்வேத வைத்தியர்களுடன் தினமும் 100 பேருக்கு அனைத்து விதமான நோய்களுக்கும் ,குறிப்பாக வாத நோய்களுக்கும் வைத்திய சேவைகளை வழங்குவதுடன் ஆண் நோயாளர்கள் 10 பத்து பேரும் பெண் நோயாளர்கள் 10 பத்து பேரும் நோயாளர்கள் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கும் அவர்களுக்கான மூன்று நேர உணவுகளும் சுகாதார முறையில் வழங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக வைத்திய சேவைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பழுலுல்லாஹ் பர்ஹான்

No comments:

Post a Comment