முஸ்லிம் அரசியல்: ஒற்றுமையின்மையும் இயலாமையும் - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 September 2018

முஸ்லிம் அரசியல்: ஒற்றுமையின்மையும் இயலாமையும்


இயலாமை என்பது பலவீனமல்ல. இயன்றதை அறியாமல் அதை வெற்றிகொள்ள முயற்சிக்காமல் இருப்பதே பலவீனமாகும். முஸ்லிம் தேசியத்தின் அரசியல் பலவீனம் இயன்றதை வெற்றிகொள்ள ஒன்றுபடாமல் இருப்பதே ஆகும்.

இலங்கையின் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஒரிரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மாவட்ட ரீதியாக பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாகவும் வாழும்போது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ரீதியான பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும,; சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதைக் காண முடிகிறது.


சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, சவால்களை எவ்வாறு அணுகுவது?, இப்பிரச்சினைகளுக்கான தீர்வை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும், வாழ்வுரிமையையும் எப்படி உறுதி செய்வது? போன்ற  விடயங்கள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை குறிப்பாக அரசியல் ரீதியாக முன்னெடுப்பதற்கு கட்சி, பிரதேச, கொள்கை, கோட்பாடு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல், சுயநலம், சுய இலபாம் என்பவற்றுக்கு அப்பால்  தனித்துவ இனம் என்ற ரீதியில், தேசிய அரசியல் அதிகார நீரோட்டத்தில் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கிறார்கள் என்பதன் அடிப்;படையில் முஸ்லிம் தேசியத்தின் அரசியல் வலிமைமிக்கதாகக் கட்டியெழுப்பட வேண்டியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஒற்றுமை என்பது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது. ஜனாதிபதி கூறினார் அல்லது  பிரதமர் சொன்னார் என்பதற்காக ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் இறங்குவதற்கும், சமூகத்திற்கு பாதகமானது என்று தெரிந்தும் சட்டமூலங்களுக்கு பச்சைக் கொடி காட்டுவதற்கும் முடியுமென்றால் சமூகத்திற்காக ஒன்றுபட்டு  மக்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும், ஏனைய அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களும் இணைந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் தேசிய தலைமைத்துவ சபையை உருவாக்க முயற்;சிக்காமல் இருப்தேன்? 

வரலாறுகள் பல ஒற்றுமையின் வெற்றியை புடம்போட்டுக்கொண்டிருக்கின்றபோதிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கிடையே காணப்படுகின்ற கட்சி நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு இடம்கொடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் சக்தியைப் பலப்படுத்த வேண்டுமென்பதே சமூகத்தின் மத்தியில் சமூகத்திற்காக சிந்திக்கின்றவர்களின்  மிக நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.  பல்வேறு தளங்களிலிருந்தும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும்,அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் இதயசுத்தியோடு இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் இதற்கான முயற்சியின் இயலாமை தொடர்கதையாகவே காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும்  திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் தொடரில் 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்திற்கு  முன்னரும், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னருமான காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட அழுத்தங்களும,; தாக்குதல்களும் பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கற்றுக்கொண்ட பாடங்களை மீள் வாசிப்புக்குட்படுத்தி சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, சமய, கலாசாரம் உட்பட அனைத்து விடயங்களையும்  ஒரு தலைமைத்துவ சபையின் கீழ் ஒன்றிணைக்க  வேண்டிய தேவை இருந்தும்;, அத்தேவையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும், முஸ்லிம் சிவில் அமைப்புக்களினாலும் தொடர்ந்தும்  இயலாமலிருப்பது மென்மேலும்  முஸ்லிம்களை நோக்கி அழுத்தங்களையும், நெருக்கடிகளையும், உரிமை மீறல்களையும் ஏற்படுத்துத்தும் என்றும் சமூகக் கூறுகளையும் பலவீனப்படுத்தும் என்றும் முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களினால் கட்டியம் கூறப்படுவதை மறுதலிக்கயியலாது.

ஜனநாயகத் தேசமொன்றில் வாழும் ஒரு தனித்துவ இனமென்ற ரீதியில் முஸ்லிம்கள் குறித்த ஏனைய சமூகத்திலுள்ள தவறான சமூகப்பார்வை கழையப்படுதற்கும், தனித்துவ அடையாளத்துடன் வாழ்வதற்கும், வாழ்வுரிமைக்கு எதிரான சவால்கள் வருகின்றபோது அவற்றை ஒன்றிணைந்து முறியடிப்பதற்கும் முறையான பொறிமுறையின் கீழ் முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இத்தேவை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றபோதிலும், இவ்விடயத்தின் பால் அரசியல் கட்சித் தலைமைகளினால், முஸ்லிம் சிவில் அமைப்புக்களினால் அதிகளவு கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. கட்சி அரசியலுக்கும், தனிநபர் நிகழ்ச்சி நிரல்களுக்கும் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் முஸ்லிம்களின் இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி  அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் காட்டப்படாமலிருப்பது; முஸ்லிம்கள் சமூக, பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளச் செய்யும் என்பதை இவ்வருட முற்பகுதியிலும் அண்மைய வருடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும், அவ்வழிவுகளுக்கான நிவாரணங்களை முழுமையாகப் பெறமுடியாமல் இருப்பதுவும் தக்க சான்றுகளாககும்.  

தென்னிலங்கை முஸ்லிம்களும் பிரச்சினைகளும்

2011ஆம் ஆண்டின்; புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 9.7 வீதமாக வாழ்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தென்னிலங்கையிலும்; மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்; வாழ்கின்றனர்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் கிழக்கின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில்  அதிகப்படியான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 43.6 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 40.4 வீதமுமாக முஸ்லிம்களின் சனத்தொகைப் பரம்பல் காணப்படுகிறது. 

மாவட்ட சனத்தொகைப் பரம்பலில் இரண்டாவது இனப் பெரும்பான்மையினராக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய 14 மாவட்டங்ளிலும், மூன்றாவது இனப் பெரும்பான்மையினராக மாத்தளை யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வாழ்வதோடு நுவரெலியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் நான்காவது பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மாவட்ட அடிப்படையில் இவ்வாறு நோக்கினாலும், ஒவ்வொரு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் மிகச் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு இலங்கையின் சகல மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள்  பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும்; முகம்கொடுத்து வருகின்றனர், காலத்திற்குக் காலம் அப்பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படுகின்றபோதிலும,; அவற்றில் பலவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகள் உரிய தரப்புக்களினால் முன்னெடுக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினையுள்ளது என்று முஸ்லிம்களை நோக்கிக் கேள்வி எழுப்பும் அளவிற்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள் இந்நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றபோது முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது அவசியாகும். எந்தவொரு தேசிய இனமும் பாதிக்கப்படாத வகையில் அரசியல் தீர்வுகள் அமையப் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு இனத்தினதும் எதிர்பார்ப்பாகும் என்பதோடு இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தூரநோக்கோடு செயற்பட வேண்டியுமுள்ளது.

அவை ஒருபுறம் இருக்க, இந்நாட்டின் 25 மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பிரதேச ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வகையான பிரச்சினைகளை இந்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்புகுகிறார்கள் என்பது குறித்த ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் ஏனைய பல மாவட்டங்களில் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படாதனாலேதான் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏனை சமூகத்தினருக்கு தெரியாமலிருக்கிறது. 

அத்தோடு, முஸ்லிம்கள் செறிந்தும,; சிதறியும் வாழும் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வை யார் மூலம் பெற்றுக்கொள்ளவது. அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகள்  ஒன்றுபட்ட ரீதியில், ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு முன்னெடுக்கக்பட்டிருப்பின் அதற்கான தீர்வு கிடைகப்பெற்றுள்ளதா? என்ற கேள்விகளையும் சம்பந்தபட்ட தரப்புக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாவட்ட ரீதியாக நீண்டகாலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் தலைநகர் கொழும்பு மாவட்டத்தை நோக்குகையில் இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள்; பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சமூகத்தின் மன அமைதியான வாழ்வு கல்வி முன்னேற்றம், ஆரோக்கியமான இளைஞர் சமூகம், சமூக நல்லிணக்கம் அனைத்தும் அதன் வாழிடத்தோடு தொடர்புபடுகின்றது. இவை தென்னிலங்கையின் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அதிலும் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் சமூகவியல் அவர்களது கல்வி, தொழில், அரசியல், கலாசாரம் அனைத்திலும் தாக்கம் செலுத்தி வருகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத நகரமயமாக்கல் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. இடநெருக்கடி, வீட்டுப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, பாடசாலைகளில் இடநெக்கடி, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர்.

அதுதவிர, இரவுநேர விடுதிகள், உணவகங்கள், மற்றும் களியாட்ட இடங்கள் போன்ற நகர்புறங்களுக்குரிய பண்புகளால் கொழும்பு பிரதேச முஸ்லிம்களின் சமூகவியல் பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்களினூடாக நாகரியமயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பிரதேசங்களில் விழுமியங்கள், பண்பாட்டுப் பெறுமானங்கள், கலாசார அடையாளங்கள் என்பவற்றை பாதுகாப்பதிலும் முஸ்லிம்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

ஒரு சமூகத்தின் சமூகவியலின்; விருத்தியில் அதிகளவு செல்வாக்குச் செலுத்துவது கல்வியாகும். கொழும்பு மாவட்ட முஸ்லிகளின் கல்வி நிலை பல சவால்களை முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. குறிபாக கொழும்பு மாநகரப் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தாலும் இங்குள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது. இன ரீதியான பாடசாலைகள் எனக் கொள்கின்றபோது. சனத்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப முஸ்லிம் பாடசாலைகள் இல்லை. இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்களவில் திருப்தியாக இல்லை.

இதனால் சிங்கள மொழிப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெற வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்கு சிங்கள மொழிப் பாடசாலைகளிலும் அனுமதி கிடைப்பதில்லை.

அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் இடைவிலகள், புற்றீசல்போல் அதிகரித்து வரும் சர்வதேச பாடசாலைகள், போதிய அனுபவமும் பயிற்சியும் அற்ற சர்வதேச பாடசாலை ஆசிரியர்கள், சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று உயர் தரத்துடன் கல்வியைக் கைவிடும் நிலை, சிங்கள மொழிப் பாடசாலைகளில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் என கல்வி தொடர்பான பல பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சிகளில்  ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் முயற்சித்து வருகிறார் என்பதை கடந்த புதன்கிழமை மாளிகாவத்தை தாறுஸ்ஸலாம் வித்தியாலயத்தின் மூன்றுமாடி கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஆற்றிய உரையின் மூலம் புலப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கொழும்பு மாவட்டம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் போன்றே தென்னிலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக செறிந்தும், சிதறியும்; வாழும் முஸ்லிம்கள்  உரிமை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றபோதிலும், அப்பிரச்சினைகள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படுவதில்லை என்பது முஸ்லிம் தேசியத்தின் பலவீனமும் இயலாமையுமாகும். இந்த இயலாமைக்கு மத்தியில்தான் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள்; தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ளது. 

வடக்கு  கிழக்கும் முஸ்லிம்களும்

யுத்தத்தின் ஒரு தரப்பாக முஸ்லிம்கள் பார்க்கப்படாதபோதிலும் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற யுத்தினால் அவர்கள் நேரடியாகவும், முறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நாடெங்கும் சிதறுண்ட வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் காரணமாயிற்று. 1990களில் வெளியேறிய வடக்கு முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது வாழ்;ந்து வருகின்றர். இன்றும், புத்தளம் மாவட்டத்தின் கரம்பை, கல்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். 

சொந்த இடங்களில் இவர்கள் மீள்குடியேற்றப்படாது அல்லது சொந்த இடங்களுக்கு மீள் குடியேறியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முனையாத அரசியல் தலைமைகள் ஒரு கட்சித் தலைவரின் அல்லது ஒரு அமைச்சரின் பொறுப்பென ஒதுங்கிக்கொள்வதைக் காண முடிகிறது. 

இவ்வாறுதான் முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்திலும் பல பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாது முஸ்லிம் அரசியலின் இயலாமையின் தொடர்கதையாகக் காணப்படுகிறது. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை  மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இம்மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்குரித்தான காணிகளை தொல்பொருள் ஆய்வு, விகாரைகள், படை முகாம் விஸ்தரிப்பு என காரணங்களை முன்வைத்து கபளீகரம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அம்பாறையின் இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதற்கான  முயற்சி முஸ்லிம்களி;ன் காணிகளை கபளீகரம் செய்வதற்கும் குடியேற்றங்களை அமைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாகவே நோக்கவேண்டியுள்ளது. அத்துடன,; இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான உள்நோக்கமாகவும் காணப்படுவதை இப்பிரதேச பெரும்பான்மை அரசியல்வாதிகளி;ன் கடந்த கால அறிக்கைகளின் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.

கிழக்கு மாகாணத்தில் 60 வீதமான மக்களின் வாழ்வாதாரத்துறையாக விவசாயம் காணப்படுகிறது. இதில் கனிசமான முஸ்லிம்களின் வாழ்வாதார பெருளியல் ஈட்டாகவும் விவசாயம் காணப்படுகிறது. இந்நிலையில,; கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான காணிகள் பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் பயிhச் செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலங்களாகக் காணப்படுகின்றன.  

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் உரிய தரப்புக்களுடன் காலத்திற்குக் காலம் மேற் கொள்ளப்படுகின்றபோதிலும் இதுவரை அவற்றிற்கான நிரந்தர தீர்வை எட்டுவதில் முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்புக்களின் இயலாமை தொடர்ந்த வண்ணம் உள்ளதை அவதானிக்கலாம்.

கிழக்கின் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்pன் பல பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாது தொடர்கின்றன. பொத்துவிலில் தொடரும் காணிப்பிரச்சினை, அக்கறைப்பற்று வட்டமடுப் பிரதேசத்தில்  இழுபறி நிலையிலுள்ள மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிக்கு தீர்வு எட்டப்படாமை, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இதுவரை வழங்கப்படாமை, ஒலிவில் பிரதேசத்தின் கடலரிப்பு, காணி சுவிகரிப்பு, அட்டாளைச்சேனை அஷ்;ரப் நகர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். சம்மாந்துறை விவசாயிகள் எதிநோக்குகின்ற பிரச்சனைகள், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தடைகள் என ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படும் பல நீண்ட கால மற்றும் குறுகிய காலப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

மாகாண மற்றும் மாவட்ட ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல், சமய, சமூக, பொருளாதார, . கல்வி. கலாசார, நிர்வாக, உரிமைகள்  உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பட வேண்டுமாயின் எந்தப் பிரச்சினையினை எவ்வழியில் தீர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வழியில் தீர்த்துக்கொள்வதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. 

முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் மூடிமறைக்கப்படுகின்றன. அவை வெளியுலகத்திற்கு தெரிவதில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய மற்றும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வெளியுலகிற்கு தெரியப்படுத்தப்பட்டதன் விளைவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று சர்வதேசம் பேசிக்கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எவர் இலங்கை வந்தாலும் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும், மட்டக்களப்பிற்கும் சென்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அம்மக்களிடம் கலந்துரையாடுகின்றனர். இதற்குக் காரணம் அம்மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்பட்டமையாகும்.

அவ்வாறுதான் பெருந்தோட்டப் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மலையக அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் முற்போக்கு முன்னணியின் ஒன்றிணைந்த குறுகிய கால நடவடிக்கள் அரசியின் கவனத்தை ஈர்க்கச் செய்துள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக தமிழ் முற்போக்கு முன்னணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான் பெருந்தோட்டப் பிராந்திய அபிவிருத்தி அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை நிறைவேற்றப்பட்;டதாகும்.

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களைத் தவிர ஏனையவர்கள் இணைந்து செயற்பட முடியுமென்றால், மலையக மக்களின் நலன்களை வெற்றிகொள்ள அமைச்சர் மனோ கணேசனைத் தலைவராக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியும், அமைச்சர் பழனி திகாம்பரத்தை தலைவராகக் கொண்ட தொழிலாளர் காங்கிரஸும,; இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை தலைவராகக் கொண்ட மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு முன்னணியினால் முடியுமென்றால் 32 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸினாலும், 14 வருடங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட தேசிய காங்கிரஸினாலும், 12 வருடங்களுக்கு முன்னர் அரசியல் பயணத்தை முன்னெடுத்த  அகில இலங்கை மக்கள் காங்கிரஸினாலும் மற்றும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளுடன் ; முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து  முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும,; சவால்களையும் வெற்றிகொள்ள ஏன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பையோ அல்லது முஸ்லிம் தேசிய தலைமைத்துவ சபையையோ ஸ்தாபிக்க இயலாமலுள்ளது.

இயலாமைகளின் வெளிப்பாடுகள்

பிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்ள எத்தகைய வியுகங்களை வகுத்துச் செயற்பட முடியுமோ அவற்றைச் சாணக்கியமாகச் செய்து முடிப்பதில் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும,; சமூக அமைப்புக்களும் காட்டும் அக்கறை, நீண்ட கால மற்றும் குறுகிய காலப் பிரச்சினைகளின் தாக்கம் அவற்றோடு சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள்; என்பன எத்தகைய நெருக்கடிகளை முஸ்லிம்களை எதிர்கொள்ளச் செய்யும,;  அவற்றிற்கு எவ்வகையில் முகம்கொடுக்க முடியும் என்பதை முன்னுரிமைப்படுத்தி செயற்பட இயலாமலாக்கியிருக்கிறது.

உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல் முறைமைத் திருத்தச்சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலமுறை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தும், இச்சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டாமென சமூகத்தின்  பல்வேறு தரப்புக்களினாலும் வலியுறுத்தப்பட்டும் கூட முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகத்;தின் குரல்களை பொறுட்டாகக் கொள்ளவில்லை.

இத்திருத்தச்சட்டங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; எல்லோரும் கைகளை உயர்த்தி சட்ட மூலம் நிறைவேறுவதற்கு ஆதரவளித்துவிட்டு  பின்னர் ஒருவரை ஒருவர் குற்றமும்சாட்டினர். அவ்வாறு குற்றச்சாட்டி அறிக்கைகளையும், ஊடகங்களினூடாக வாதப் பிரதிவாதங்களையும் முன்வைத்து விட்டு மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்துப் பேசப்படும் இத்தருணத்தில் புதிய முறைமையில் தேர்தலை நடாத்துவது முஸ்லிம்களுக்கு பாதகமானது என தற்போது விடாப்பிடியாக நிற்பது எந்தளவில் வெற்றியளிக்கும் என்பது ஒருபுறமிருக்க, இவை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சாணக்கியமற்ற முடிவுகளையும,; அரசியல் இயலாமையையும்  வெளிப்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளதாகக் பேசப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

புதிய அரசியல் நகர்வுகளினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எத்தகை சாதக, பாத நிலைகளை சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களை எதிர்நோக்கச் செய்யும்? எந்தவகையில் பாதிக்கும்? அரசியலமைப்பு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அவற்றினூடாக உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வுகள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்ற பல கேள்விகள்  முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுகின்றன.

இக்கேள்விகளுக்கு விடைகாண்பதற்காக தங்களுக்குள் கூடி ஆரோக்கியமாக ஆராய வேண்டி நேரத்;தில், அவை தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டிய தருணத்தில் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும், அவற்றின் செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும்  தினசரி சமூகவலைத்தளங்களில் அறிக்கைச் சமர் புரிந்துகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

தனிநபர் நிகழ்;ச்சி நிரல்களின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இஸ்லாமிய இயக்கங்களும் செயற்படுவதும,; அதன் விளைவாக ஏற்படும் கசப்பான சம்பவங்களும்;; சமூகத்தைக் கேவலமானதொரு நிலைக்குத் தள்ளியிருப்பதோடு;  இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆதாரவான நிகழ்வுகளாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும், இயக்கங்களும்; சுய விசாரணை செய்ய வேண்டியதும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவும், சமகால மற்றும் எதிர்கால சமூகத்தின் நலன்களைப் பேணவும், பாதுகாப்பையும், இருப்பையும், உறுதிப்படுத்தவும் அவற்றுக்காக ஒன்றிணைந்து செயற்படவும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் தேசிய தலைமைத்துவ சபையை உருவாக்க வேண்டும். ஆனால் இதில் இயலாமை தொடரப்படாமல், இவற்றின் தேவையை மக்கள் மயப்படுத்தி உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும். இப்பொறுப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் இன்று தவறுமாயின் இதன்  விளைவை  நாளை அனுபவிக்கும் என்பது சொல்லி வைக்கப்பட வேண்டியதாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment