கல்முனையில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு; சத்தியாக்கிரகம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 2 August 2018

கல்முனையில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு; சத்தியாக்கிரகம்!



கல்முனை மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதுடன் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தே அவர்கள் இப்போராட்டங்களில் குதித்துள்ளனர். இதன்போது குறித்த ஊழியர்கள், புதிய நியமனங்களை கண்டித்தும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


இப்போராட்டம் காரணமாக கல்முனை மாநகர சபையின் அனைத்து பிரிவுகளினதும் பணிகள் இரண்டாவது நாளாகவும் முடங்கியதுடன் திண்மக்கழிவகற்றல் உள்ளிட்ட சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை இரண்டு நாட்களாக இடம்பெறாததால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசமெங்கும் வீதிகளிலும் பொது இடங்களிலும் துர்நாற்றத்துடன் குப்பைகள் குவிந்து கிடப்பதை காணக்கூடியதாக இருந்தது.

திண்மக்கழிவகற்றல் சேவை இடம்பெறாததால் குடியிருப்புகள் மட்டுமல்லாமல் பொதுச் சந்தைகள், ஹோட்டல்கள், பாடசாலைகள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் வர்த்தக நிலையங்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளன.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் அங்கு வருகை தந்திருந்ததுடன் கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் உட்பட இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதகுருக்கள் சிலரும் இவ்வூழியர்களின் போராட்டத்தில் இணைந்து பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கருத்து தெரிவிக்கையில்;

“கல்முனை மாநகர சயையில் 102 பேர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டு, புதியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பதானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இது போன்று இன்னும் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் கிழக்கு மாகாண ஆளுநரினால் புதியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். உள்ளூராட்சி மன்றங்களில் ஊழியர்களின் நியமன விடயத்தில் ஆளுநரின் இந்த தன்னிச்சையான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்போராட்டத்தின் மூலம் நாம் வலியுத்துவதானது, புதியவர்களுக்கான நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தற்காலிக ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அத்துடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்ற கிழக்கு மாகாண ஆளுநரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பிலான அவசர மகஜர்களை எமது தொழிற்சங்கமானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது இந்த சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதுடன் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றவற்றுக்கு முன்னாலும் இப்போராட்டத்தை கொண்டு செல்வோம்" என்றார்.

தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதனின் இப்பிரகடனத்தை போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊழியர்கள் அனைவரும் பெரும் ஆக்ரோஷத்துடன் ஆமோதித்தனர்.

அதேவேளை கல்முனை மாநகர சபையில் புதிய ஊழியர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் விசேட சபை அமர்வை கூட்டுவதற்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் இன்று வியாழக்கிழமை அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பிரகாரம் உறுப்பினர்கள் அனைவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

-அஸ்லம் எஸ்.மொலானா, யூ.கே.காலிதீன்

No comments:

Post a Comment