காரைதீவு முச்சந்தியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான தைக்கா காணி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இரு தினங்களை விசேடமாக ஒதுக்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் இவ்வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.
இந்த வழக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் இந்த அறிவித்தலை விடுத்தார்.
இவ்வழக்கில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பில் சட்டத்தரணி சாரிக் காரியப்பரின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஆஜராகியிருந்தார். காரைதீவு பிரதேச சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நாராயனம்பிள்ளை ஆஜராகியிருந்தார்.
வழக்காளிகள் சார்பில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபா, பிரதி தலைவர் யூ.எல்.எம்.ஹாஷிம் மௌலவி, செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் எஸ்.எம்.சலீம் உள்ளிட்டோர் விசாரணைக்காக சமூகமளித்திருந்தனர்.
இதன்போது எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும் அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்கு வழக்கு விசாரணை ஆரம்பமாகும் எனவும் அன்றைய தினம் பள்ளிவாசல் சார்பான சாட்சியாளர்களை அழைத்து வருமாறும் தொடர்ச்சியாக அதே மாதம் 21 ஆம் திகதியும் விசாரணைகள் இடம்பெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
காரைதீவு முச்சந்தியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான தைக்கா காணியை மீட்பதற்கான உரிமை கோரல் வழக்கு கடந்த வருடம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அதன் முதலாவது விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்று, இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்லம் எஸ்.மௌலானா
No comments:
Post a Comment