மலர்ந்திருக்கும் ரமழானை மன நிறைவோடு வரவேற்று... மாண்புகளால் சிறப்பித்து... நற்செயல்களால் அலங்கரித்து... நல்லுணர்வு பெற்று... முத்தகீன்களாக வாழ்வதற்கு அனைவரும் முயற்சிப்போமாக!
ரமழான் வந்தடைந்திருக்கின்ற இன்றைய எமது பொழுதுகள் எமது பொறுப்புக்கள் பற்றி அதிகம் எங்களை சிந்திக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன. ரமழானை சிறப்பாக எதிர்கொள்வது முதல் எமது விவகாரங்கள் சார்ந்த அனைத்துப் பொறுப்புக்களிலும் நாம் எமது கவனத்தை செலுத்திட வேண்டிய நிர்ப்பந்தம், காலத்தின் தேவையாகவும் மார்கத்தின் கடமையாகவும் இன்று எமக்கு முன்னால் விரிந்திருக்கின்றது. அத்தகைய பொறுப்புகளில் கவனம் செலுத்தும்போது பின்வரும் மூன்று அம்சங்களை நாம் புறக்கணிக்க முடியாது.
1. சூழலைக் கருத்திற் கொண்டு வழங்கப்பட வேண்டிய தெளிவான தூய மார்க்க விளக்கம் (இல்ம்)
2. புறக்கணிப்புக்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ இட்டுச் செல்லாத... நடுநிலையைப் பிரதிபலிக்கின்ற மார்க்க உணர்வுகள் (ஈமான்)
3. அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் நாம் வாழும் தேசத்திற்கும் முன்னால் எமக்குள்ள கடமைகள். (அமல்)
முதலாவதைக் கொடுக்க வேண்டும். இரண்டாவதை நெறிப்படுத்தி வளர்க்க வேண்டும். மூன்றாவதைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதத்தில் குர்ஆன் எம்மீது சுமத்துகின்ற இந்தப் பொறுப்புக்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்தப் பொறுப்புக்கள் ரமழானில் மெருகூட்டப்பட்டு... ஷவ்வாலிலிருந்து வலுவூட்டப்பட வேண்டும்.
இந்தப் பாரிய பொறுப்புக்கள் ரமழானின் மகிமைக்கும் அந்தஸ்துக்கும் அப்பாற்பட்டவையல்ல என்பதை உணரத் தவறினால் ரமழானின் சிறப்புக்கள் அனைத்திற்கும் அருகதையாகும் பாக்கியத்தை அடைந்தவர்களாக நாம் இருக்க மாட்டோம்.
எனவே> இந்தப் பொறுப்புக்களையும் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தின் கடமைகளாகக் கருதி அவற்றிக்கான பங்களிப்புக்களைக் குறைவின்றி வழங்க முன்வருவோமாக!
ரமழான் கரீம்!
-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
No comments:
Post a Comment