'ஜம்இய்யத்துல் உலமாவின் தோல்வி' என்ற தலைப்பில் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்த ஆக்கத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன் . மார்க்கத்தை கற்றறிரிந்தவன் என்ற ரீதியில் எனக்கும் அகில இலங்கை ஜம்இய்யதாதுல் உலமா பற்றிய அக்கறை இருகிறது என்பதால் இந்த கட்டுரையை பல வேலைப் பளுக்களுக்கு மத்தியில் எழுதுகின்றேன். இந்த அக்கறை ஒவ்வொரு ஆலிமுக்கு மற்றுமன்றி ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டிய அவசியமே.
சகோதரர் ஸலாஹுத்தீன் என்பவர் அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமாவின் பணிகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது குறித்த கட்டுரையை எழுதியுள்ளார். வெற்றி தோல்வி பார்த்து உலமா சபை தன் பணியை செய்யவில்லை.
மறுமையில் நன்மை நாடி அடியாருக்கு செய்ய வேண்டியதை தன்னால் முடியுமான வரை செய்து வருகின்றது. பொதுப்பணிகளில் ஜம்இய்யாவோடு சேர விரும்புவோரை சேர்த்துக் கொண்டு அதன் தன்னிகரற்ற சேவையை செய்து வருகின்றது. கட்டுரையாளர் எந்த சந்தர்ப்பத்திலாவது ஜம்இய்யா வந்து அதன் வேலைத்திட்டங்கள் பற்றி பேசி அறிந்து விட்டுத் தான் ஆக்கத்தை எழுதினாரா என்று கேட்கத் தோன்றுகின்றது. நாம் அதன்பொது வேலைகளில் கலந்து கொள்வதனாலேயே இவ்வாறு கேட்கிறேன்.
நான் தெரிந்த மட்டில் ஜம்இய்யாவுக்கென்று ஒரு யாப்பிருக்கின்றது. அதன் அடிப்படையிலே அதனது வேலைகள் நடைபெறுகின்றன. மத்ரஸாக்களுக் கென்று ஒரு பாடத்திட்டத்தையேனும் தயாரிக்கவில்லையென்று ஒரு புரலியைக் கிளப்பியுள்ளார். அத்தகைய பாடத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு அதற்கான பரீட்சையும் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வருவது கட்டுரையாளர் அறியாதிருப்பது பாவமே. இது பற்றி முஸ்லிம் சமயத் திணைக் களத்தில் கேட்டறிந்திருக்களாமே.
நிவாரண வேளைகளில் ஜம்இய்யா மற்றவர்கள் வேலையில் தலையிடுகிறது என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்டதே. கட்டுரையை எழுதியவர் ஜம்இய்யாவின் எந்த நிவாரண கூட்டங்களுக்கேனும் சமூகமளித்துள்ளாரா என்று கேட்கின்றேன். நான் அந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். மூதூர் பிரச்சினை வந்தது எல்லா இயக்கங்களும் தம்மாலானதை செய்தன. தர்கா நகர் பிரச்சினை வந்தது சகல இயக்கங்களும் அவசரமாக தெகிவளை ஜும்மா பள்ளியில் கூடி உயர்மட்டத்தவரோடு தொடர்பு கொண்டதோடு நிவாரணப் பணிகளுக்கு சகல ஸ்தாபனங்களின் வேண்டுகோளின் படி ஜம்இய்யா தலைமை தாங்கி செயற்பட்டது. பள்ளி வயல்களின் சம்மேளனங்கள், ஜம்இய்யாவின் கிளைகள் , பரோபகாரிகள் தந்துதவிய பல மில்லியன் ரூபாக்களை யுனுகு என்ற அமைப்பு மூலம் செலவிடப்பட்டது சகோதரர் ஸலாஹுத்தீனுக்குத் தெரியுமா? எமக்கு நன்றாகவே தெரியும்.
வெள்ளம்பிட்டிய வெள்ளப்பெருக்கின் போது சூறா உற்பட அனைத்து இயக்கங்களும் கூடி சுசுவு என்ற ஒன்றை ஏற்படுத்தி நிவாரணப்பணியை மேற் கொண்டது. இது தொடர்பான முதல் கூட்டத்தில் ஜம்இய்யாவின் தலைமையில் இயங்க சகலரும் உடன்பட்டனர் என்பது கூட்டத்தில் கலந்து கொண்ட எமக்கு தெரியும். அதற்கு சேர்ந்த நிவாரண உதவிகள் சுசுவு குழுவினரே வினியோகித்தனர். கிந்தோட்டை அனர்த்தத்தின் போதும் ஜம்இய்யா தன்னால் இயன்றதை செய்ததை நாம் அறிவோம்.
கடைசியாக திகன அனர்த்தத்தின் போது கண்டியிலுள்ள சமூக சேவை இயக்கங்கள் கண்டி உலமா சபைக் கிளையோடு சோர்ந்து இன்று வரை முடியுமானதை செய்து வருகின்றது. இது வரை சேர்ந்த தொகையை கண்டி ஜம்இய்யத்துல் உலமா, பள்ளி வாயல்கள் சம்மேளனம் மற்றும் இயக்கங்களின் பிரதி நிதிகள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்ட முசுஊஊ அமைப்பின் மூலம் வினியேகப்பட்டுக் கொண்டிருக்கின்றது யாவரும் அறிந்ததே.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும் பல மில்லியன் ரூபாக்கள் வழங்கப்பட்டது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சமூக சேவைப் பணிகளை செய்யாமல் மார்க்க விடயங்களை மாத்திரம் செய்ய வேண்டும் என கட்டுரையாசிரியர் விரும்பலாம். அது நல்லது தான். அப்படியாக சமூக சேவைகளில் சிலதை தாம் செய்வதாக எந்த ஒரு தரப்பும் முன்வந்து ஒழுங்கான முறையில் முன்னெடுக்க தயாராக இருக்கும் பட்சத்தில் அதனை பூர்தியாக அவர்களிடம் ஒப்படைக்க அகில இலங்கை ஜம்இய்யா தயாராக இருக்கிறது என்பது தான் ஜம்இய்யாவின் நிலைப்பாடாக இருக்கிறது என்பதை அதன் உயர்பீட உறுப்பினர்கள் கூறுவதை கேட்டிருக்கின்றோம். அதே நேரம் ஒருவருமே முன்வராத போது அல்லது கூட்டங்களில் வேண்டப்பட்ட போதே ஜம்இய்யா முன்வந்து அவற்றை செய்தது என்பதனை நன்றியுணர்வோடு சொல்லி வைக்க விரும்புகினறேன்.
கல்வி விடயம் பற்றி எழுதிய கட்டுரையாளர் நம் சமூகம் கல்வியில் எவ்வளவு பின்தள்ளப்பட்டுள்ளது என்பதை அறியாதிருக்கிறார் என்பது விளங்குகின்றது. கொழும்பு 03 இல் உள்ள அல் அமீன் முஸ்லிம் பாடசாலை மாணவர் குறைவினால் மூடப்படும் தருவாயில் இருப்பதை அறிந்த ஜம்இய்யா உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு மாணவர் தொகையை கூட்ட முயற்சித்து வெற்றி கண்டது. தற்போது அந்தப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன் மாணவர் தொகையும் அதிகரித்து ஒழுங்காக நடைபெற்று வருகின்றது.
கொழும்பிலுள்ள சில பாடசாலை மாணவர்கள் காலை ஆகாரமின்றி பாடசாலை வருவதும் மயங்கி விழுவதும் என்ற செய்தி கிடைத்ததும் ஜம்இய்யா பரோபகாரிகளை அணுகியதன் பேரில் தினமும் 700 மாணவர்களுக்கு காலையுணவு இன்று வரை வழங்கப்படுவது கட்டுரையாசிரியருக்குத் தெரியுமா? கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் இஸ்லாம், விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் இல்லாமையை அறிந்து அந்தப் பாடசாலைகளுக்கு 28 ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு உரிய சம்பளமும் ஜம்இய்யாவால் வழங்கப்படுவது கட்டுரை ஆசிரியருக்கு தெரியுமா? முஸ்லிம் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் அடிக்கடி நடாத்தப்படுவது பற்றி அவருக்கு ஏதும் தெரியுமா? ஜம்இய்யா தோல்வி கண்டதாகக் கூறும் அவர் மேற் குறித்தவற்றில் ஒன்றையோ இரண்டையோ பொறுப்பேற்று செய்வதே பண்பாகும். இந்த தரவுகளை ஜம்இய்யா நடாத்திய அனைவருக்கும் கல்வி எனும் மாநாட்டில் கலந்து கொண்டவன் என்ற வகையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.
திருகோணமலை பாடசாலை விவகாரமாக உலமா சபை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி கேட்டவர் என்ன நடவடிக்கை மேற்கொண்டாரோ தெரியாது. ஆனால் ஜம்இய்யா உரிய இடங்களோடு தொடர்பு கொண்டு முடியுமானதை செய்தது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அணுகி விடயத்தில் கவனம் செலுத்திய விடயங்கள் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
பள்ளி வாசல் நிருவாக அமைப்பு வக்ப் சபையோடு சம்பந்தப்பட்டது. முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் செய்ய வேண்டிய வேலையை ஜம்இய்யத்துல் உலமா செய்வது தேவையற்றதாகும். இருப்பினும் பள்ளிவாசல் செயற்பாட்டுக்கான ஒழுங்குகளையும், ஆலோசனைகளையும் ஜம்இய்யா சமர்ப்பித்துள்ளது என்பது கட்டுரை ஆசிரியருக்கு தெரியாமலிருக்கும். பாவம் கட்டுரையாளர் உண்மையை அறிய விரும்பின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சென்று விடயங்களை கேட்டறிவதே ஆரோக்கியமானதாக கருதுகின்றேன்.
எது எப்படியிருப்பினும் மறுமையில் காணப்படும் வெற்றியும் தோல்வியுமே உண்மையானது. எனவே மறுமை வெற்றியை முன்னிறுத்தியே ஜம்இய்யா செயற்படுகின்றது. உங்களில் சகலதையும் இழந்த ஓட்டண்டி யார் தெரியுமா? என்று நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எந்த வெள்ளி நாணயமோ தங்க நாணயமோ இல்லாதவர் என்றனர். அதற்கு நபி ஸல் அவர்கள் மறுமையில் ஓட்டாண்டி யாரெனில் விசாரணைக்கு வரும் ஒருவன் தொழுகை, நோன்பு, ஸதகா என பல அமல்களைச் செய்து நன்மைகளை செய்து விட்டு அவை அனைத்தையும் இழந்தவனாக வருவான் . ஏனெனில் இவரைத் திட்டினார், அவனின் பொருளை உண்டான், இவனது நன்மைகளில் இருந்து எடுத்து மற்றவனுக்குக் கொடுக்கப்பட்டு அவன் இறுதியில் ஒன்றுமில்லாதவனாக மாறி விடுவான். அவனே ஓட்டாண்டி என்றார்கள். அத்தகைய ஓட்டாண்டியாக ஆகாமல் மறுமையில் தோல்விக்கு பதில் நன்மை கிடைக்க கட்டுரையாளருக்கும் எமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக.
உலமா சபை மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ அதிலுள்ள எவர் மீதுமுள்ள பகைமை காரணமாகவோ ஒன்பதுதசாப்தங்களைத் தாண்டிய ஒரு ஸ்தாபனத்தை கொச்சைப்படுத்திப் பேசுவது அறிவுடமையாகாது. துணிவும், சமூக அக்கறையும் இருந்தால் ஜம்இய்யாவிற்கு நேரடியாக சென்று கருத்துக்களைத் தெரிவித்து பிழைகளை சுட்டிக்காட்டி சமூகம் இன்று வரை ஏற்றுள்ள தலைமையை நிலைநாட்டுவதில் பங்கு கொள்ளலாம்.
மழைக்குத் தோன்றிய காலான்கள் போன்று எத்தனையோ இயக்கங்கள் தோன்றின. தோன்றியவை பல பிரிவுகளாக ஆகின அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அது ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் தனது அமைதியான பணியை செய்து வருகின்றது. அது உலமாக்களுக்கென்று ஸ்தாபிக்கப்பட்ட சபை இந்த நாட்டில் உலமாக்கள் இருக்கும் வரை அது இயங்கிக் கொண்டே இருக்கும். பொது மக்களாகிய நாம் அதற்காக நாம் பிரார்த்திப்போம். இன்ஷா அல்லாஹ்.
-மருதானை கஸ்ஸாலி.
No comments:
Post a Comment