ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக ஐ.ரி.அஸ்மி - sonakar.com

Post Top Ad

Friday, 6 April 2018

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக ஐ.ரி.அஸ்மி



ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. 

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.


ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 07 பேரும், சுயேட்சைக்குழு சார்பில் 08 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 01 நபரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 01 நபரும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒருவருமாக 18 பேர் தெரிவாகியிருந்தனர்.

தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பான உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி மற்றும் சுயேட்சைக்குழுவின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர் முகமது அன்வர்; ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. 

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐ.ரி.அஸ்மி 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சுயேட்சைக்குழு சார்பில் முகமது அன்வர்; 08 வாக்குகளையும் பெற்றனர். 

உதவித் தவிசாளர் தெரிவிற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அகமது லெவ்வை மற்றும்; சுயேட்சைக்குழுவின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர் இப்றாலெப்பை பதுறுடீன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. 

இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அகமது லெவ்வை 10 வாக்குகளைப் பெற்று உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சைக்குழுவின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர் இப்றாலெப்பை பதுறுடீன் 08 வாக்குகளையும் பெற்றனர். 

வாக்கெடுப்பின் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐ.ரி.அஸ்மி  தவிசாளராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் உதுமாலெவ்வை அகமது லெவ்வை உதவித் தவிசாளராகவும் பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர். 

-அனா

No comments:

Post a Comment