திரு'மலை சண்முகாவும் ஆர்ப்பாட்ட அவதிகளும்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 April 2018

திரு'மலை சண்முகாவும் ஆர்ப்பாட்ட அவதிகளும்!


திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்வதற்கு எதிரான இனவாத அடிப்படையிலான ஆர்ப்பாட்டமும் வீராவேச பேச்சுக்களும் நடந்தேறியது.



தொன்று தொட்டு முஸ்லிம் சமூகத்துடன் ஒன்றாகவே வாழ்ந்து வரும் ஊர் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமில்லை. ஆனால், கல்லூரி அதிபரின் சகிப்புத்தன்மையற்ற செயற்பாடுகளால் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இந்து - முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் குழப்பவாதிகள் இதைக் கையிலெடுத்துள்ளனர்.

பாடசாலைக்கான நியமனம் சர்ச்சையில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளினால் கேட்டுப் பெறப்பட்டவையில்லை. மாறாக கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட நியமனங்களாகும். எனவே, இந்தப் பிரச்சினை கல்வியமைச்சூடாகவே தீர்க்கப்பட்ட வேண்டியதும் நீதி நிலை நாட்டப்பட வேண்டியதுமான ஒரு விடயமாகும்.

இருந்தாலும், கல்லூரியின் பழைய மாணவியர் எனும் போர்வையில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு இந்து சமூகத்திலிருக்கும் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் தரப்பிலும் தேசிய புலனாய்வுத்துறைக்கு (NIB) ஏனைய அமைப்புகள், வெளிநாடுகளிலிருந்து வரும் மார்க்க அறிஞர்கள் குறித்து தகவல் வழங்கி வந்த அமைப்பு தமது சுய விளம்பரத்துக்காக தன்னிச்சையாக  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

விரைவாக உணர்ச்சியூட்டப்படக்கூடிய சமூகமான முஸ்லிம் சமூகத்தின் ஓரு சாரார் இதனை தமது உரிமைக்கான போராட்டமாகவும் துருக்கி தொப்பிக்காக போராடிய சமூகத்தின் வழியில் அபாயாவுக்காக போராடுவதாகவும் பறைசாற்றிக் கொண்டாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கிய பதாதைகள் வேறு விடயங்களை எடுத்தியம்புகின்றன.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நிலவும் 'கலாச்சார' விடயங்கள் 90 வீதம் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளாக இறக்குமதி செய்யப்பட்டவையே. ஆடைக்கலாச்சாரமும் அதற்கு விதி விலக்கானதல்ல.


அந்த வகையில் இலங்கை முஸ்லிம் பெண்களின் 95 வீதமானோர் தொடர்ந்தும் தமது மூதாதையர் வழியில் சேலை அணிபவர்களாகவும் நவீன காலத்து நாகரீகங்களின் அடிப்படையில் முந்தானை முக்காட்டுக்குப் பதிலாக ஹிஜாப் அணியக்கூடியவர்களாகவும் கூடக் காணப்படுகிறார்கள்.

வெளிநாட்டு கொள்கை இயக்கங்களின் அறிமுகம், வளர்ச்சியின் பின்னணியில் சவுதி அரேபியா போன்று கருப்பு அபாயா அணிதல் கொள்கை இயக்கங்கள் சார்ந்தவர்கள் மத்தியில் பரவி வரும் நவீன ஆடைக்கலாச்சாரமாகும். எனினும், சவுதி அரேபியாவும் தற்போது இது தொடர்பில் தளம்பல் நிலையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.


எந்த ஒரு விடயத்தையும் அவசர அவசரமாகப் புகுத்த முனைந்து அதன் மூலம் பிரிவினைகளை உருவாக்கிக் கொள்வதையும் பின் பிரிந்து நிற்பதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரவினர் இன்று சேலை அணிதல் உலக மகா ஆபாசம் என வர்ணித்துள்ளதுடன் சண்முகா கல்லூரியில் தமது பேச்சு வழக்கைக் கொண்டு சென்ற முஸ்லிம் ஆசிரியை அவ்வாறான தமிழ்ச் சொற்களை உபயோகிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக 'முஸ்லிம்களுக்கு சுத்தத் தமிழை' கற்றுத்தர வேண்டாம் என்றும் பதாதை பிடித்து ஆர்ப்பாட்ட அவதியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாம் பின்பற்றும் இந்திய அறிஞரைப் போன்றே தமிழைப் பேசவும் வேண்டும் எனவும் உத்தியோகப்பற்றற்ற அழுத்தம் இவர்களுக்குள் இருக்கிறது. அவ்வாறு மொழி பாவனையிருப்பவர்களாலேயே முன்னணியில் பேச்சாளராக வரவும் அதன் மூலம் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.

அமைச்சு மட்டத்தில் இவ்விடயத்தைக் கையாளவும், அரச பாடசாலையொன்றில் ஆசியர்களின் கலாச்சார உரிமை மற்றும் தனி மனித உரிமைகளைப் பேணவும் அரசியல் தலைமைகள் முயன்று வரும் நிலையில் அத்தனை அவசரமாக எதிர் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அதுவும் இது போன்ற வாசகங்களுடனும் செல்லத்தான் வேண்டுமா என்பது புத்தியுள்ளவர்கள் அறிந்து தெளிவு பெறக்கூடியது.

பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் இது போன்ற அவசர கோமாளிச் செயல்களை செய்வதில்லையாயினும் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறாயினும் இனவாத சிக்கலுக்குள் வைத்திருப்பதால் ஒரு சிலருக்கு இலாபமுண்டு என்பது தெளிவாக்கப்பட்ட வரலாறாகும்.

இந்த நிலையில் முத்திரை குத்தப்பட்ட ஆடையடையாளத்துடன் தம்மைத் தியாகச் செம்மல்களாகவும் போராட்ட வீரர்களாகவும் காட்ட முனைபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் 'மட்டும்' தலை காட்டுகிறார்கள் என்பது மாத்திரமன்றி 'எதையெல்லாம்' ஏந்தி வருகிறார்கள் என்பதும் கலந்து கொள்பவர்கள் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.



தமது தாய்மார்களையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறோம் என்பதில் இன்று அவர்களுக்குக் கவலையில்லை, நாளை அவர்களுக்கு கொத்துக் கொத்தாக பணம் தரும் நாடுகள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் போது இவர்களும் மாற்றிக் கொள்வார்கள். அதுவரை இடை நடுவில் பேசப்படும் விளக்கவுரைகள் அழைத்துச் செல்லும் பாதையும் அடையப் போகும் இலக்கும் எது என்பதை புத்தியுள்ளவர்கள் சிந்தித்துக் கொள்வார்கள்.

இனவாதத்தால் பயனடையக் காத்திருப்போருக்கு எப்போதும் அவதியும் அவசரமும் அவசியப்படுகிறது என்பதே கடந்த காலத்திலும் நாம் கண்ட வரலாற்று உண்மை.

-இ.ஷான்

No comments:

Post a Comment