இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய தாக்குதல்கள் முஸ்லிம்களின் வாழ்;வுரிமைக்கான பாதுகாப்பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறைசாட்டியிருக்கிறது.
அவசர காலச்சட்டமும், ஊரடங்குச்சட்டமும், அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில்தான் இனவெறியர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார அழிவை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தினர். சட்டத்தைப் புறந்தள்ளி அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்முறையாளர்களை நோக்கி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படைத்தரப்பின் ஆயுதங்களிலிருந்து குண்டுகள் பாயவில்லை. மாறாக அப்பாவி முஸ்லிம்கள் படைகளினால் தாக்கப்பட்டார்கள் என்பது பல்வேறு தரப்புக்களினாலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களாக உள்ளதைக் காணலாம்.
அம்பாறையிலும் கண்டிப் பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் சமகால முஸ்லிம்களின் பொருளாதார கட்டமைப்பை மாத்திரமின்றி சமூக, அரசியல், கல்வி, சமய, கலாசாரம் உட்பட அத்தனையையும் சிதைத்திருக்கிறது. அத்துடன்; எதிர்கால முஸ்லிம்களின் வாழ்வுரிமையை கேள்விக்குற்படுத்தியுமுள்ளது. மறுபுறம் முஸ்லிம்களின் அரசியல் முதல் பல்வேறு விடயங்களில் காணப்படும் பலவீனத்தை பலமாக்குவதற்கானதொரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
இவ்வன்முறை அழிப்புக்கள் முஸ்லிம்களுக்கு பலகோடி நஷ்டங்களை இழக்கச் செய்து ஓர் உயிரையும் பிரியச்; செய்திருந்தாலும், சமூகத்திலுள்ள பலர் மத்தியில் ஒரு வகை எழுச்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வெழுச்சி ஆரோக்கியமானதாக கட்டியெழுப்பப்படுவதற்கு வழிநடத்தக் கூடிய தலைமைத்துவத்தின் தேவை அவசியமாகவுள்ளது..
நாட்டின் அபிவிருத்தி முதல் பல்வேறு விடயங்களில் இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை தங்களது வகிபாகத்தைச் செலுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில், பெரும்பான்மை சமூகத்திலுள்ள இனவாத அரசியல்வாதிகளினாலும், பௌத்த தேரர்களினாலும் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருகின்ற பிரச்சாரங்கள் பௌத்த சிங்கள மக்களின் ஒரு சாராரை முளைச்சலவை செய்தி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அண்மையில், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் வெளியிட்ட ஊடக அறிக்கை இப்பிரச்சாரங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. 'நாட்டின் பொதுவான சட்டம் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று சரீஆ சட்டம் செயற்படுத்தப்படுகின்றது. தனியான பாடசாலைக் கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது. ஹலால் ஊடாக முஸ்லிம் அல்லாத நுகர்வோருக்கும் வரி சுமத்தப்படுகிறது' என பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ள தேரர் இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குள்ள சலுகைகளை விட அதிக சலுகைகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சிங்கள மக்களால் அதிகமாக வாசிக்கப்படும் சகோதர மொழிப் பத்திரிகை ஒன்றில் அவரது இவ்வறிக்கை வெளிவந்தமை சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முஸ்லிம் எதிர்பாலர்களின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியிருக்கும். இவ்வாறான நிலையில், இவரது அறிக்கைக்கு முஸ்லிம் தரப்பிலிருந்து பதில்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும,; அப்பதில்கள் எந்தளவு தூரம் சிங்கள மக்களிடையே சென்றடைந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது.
முஸ்லிம்களின் சமூக, சமய, கலாசார, விழுமிய, பொருளாதார, கல்விக் கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னர்; பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலிருந்த சமூகப் பார்வை போன்று, சமகாலத்திலில்லை. முஸ்லிம்களின் செயற்பாடு குறித்த அவர்களின் சமூகப் பார்வையை இவ்வாறான விசமப்பிரச்சாரங்கள் திசைமாற்றியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
ஜனநாயகத் தேசமொன்றில் வாழும் ஒரு தனித்துவ இனமென்ற ரீதியில் முஸ்லிம்கள் குறித்த ஏனைய சமூகத்திலுள்ள தவறான சமூகப்பார்வை கழையப்பட வேண்டுமென்பதோடு, தனித்துவ அடையாளத்துடன் வாழ்வதற்கும், அவ்வாழ்வுரிமைக்கு எதிரான சவால்கள் வருகின்றபோது அவற்றை ஒன்றிணைந்து முறியடிப்பதற்குமான முறையான பொறிமுறையின் கீழ் முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவையுள்ளதாகக் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டுமாயின், முஸ்லிம்கள் குறித்த தவறான வாதப்பிரதிவாதங்களும், போலிப்பிரச்சாரங்களும் கலையப்பட வேண்டுமாயின், முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் இராஜந்திர ரீதியாக முறையான பொறிமுறைகளினூடாக வெற்றி கொள்ளப்பட வேண்டுமாயின் முஸ்லிம்களின் அரசியல் பலம் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும்.
பல்லின சமூகத்தில் வாழும் ஒரு தனித்துவ இனம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின,; அச்சமூகத்திற்கான அரசியல் பலம் உறுதியாக இருக்க வேண்டும் என்பது வரலாறுகள் கற்றுத்தரும் பாடமாகவுள்ளது. இதற்கு உதாரமாக, முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் அரசியல் நகர்வுகளையும், சமூகம் சார்பில் அரசியல் அதிகாரத்தினூடாக பெற்றுக்கொண்ட உரிமைகளையும் சுட்டிக்காட்டலாம்.
இருப்பினும், தற்போதை முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் பலம் பலவீனமடைந்திருப்பதனால் முஸ்லிம்கள் பல்வேறு முனைகளிலும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
முஸ்லிம் அரசியலின் பலமும் பலவீனமும்
இலங்கையின்; அரசியல் வரலாற்றை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம், பிற்பட்ட காலம் என வகுத்துக்கொண்டால், இவ்விரு வரலாற்றுக் காலங்களிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்திருக்கிறார்கள். பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்நாட்டில் ஒரு இனம் பிறிதொரு இனத்தின் சில குழுக்களினால் ஏதோ ஒரு வகையில் காலத்திற்குக் காலம் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. வன்முறைகள் ஏவிவிடப்பட்டிருக்கின்றன. உயிர், உடமைகள், வாழ்விடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.. உரிமைகளை இழந்திருக்கின்றன.
1814, 1915, 1983, 1990, 2014, 2017 மற்றும் கடந்த மாதம்; ஏற்பட்ட இனமோதல்கள் மற்றும் அட்டூழியங்களை இவற்றிற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இக்காலங்களில் முஸ்லிம் சமூகத்திலிருந்த ஒரு சிலர் ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளைகளாகச் செயற்பட்டு இனத்துவத்தை அடமானம் வைத்துமிருக்கின்றார்கள். அவர்களின் பலவீனமான அரசியல் செயற்பாடுகள் ஒரு தனித்துவ சமூகத்தின் வாக்குப்பலத்தைப் பலவீனமடையச் செய்திருக்கிறது. உரிமைகளைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் உருவான சில சூழ்நிலைத்தாங்கங்ளின் விளைவுகளால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உதயமாகியிருக்கின்றன. இவ்வகையில், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய அரசியல் யூனியன்; உருவாக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்லாமிய முற்போக்கு முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 1964ல் தோற்றம் பெற்றது. அவ்வாறு அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் உருவாகின.
ஆனால், இக்கட்சிகளினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக கூட்டாக இணைந்து செயற்படவும் முடியவில்லை. இதனால் முஸ்லிம் அரசியல் பலவீனடைந்தது. அத்துடன் கால ஓட்டத்தில் இக்கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பலமிக்கதொரு அரசியல் கட்சி உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் ஆரோக்கியமாக இதயசுத்தியோடு முன்னெடுக்கப்படவில்லை என்பதை இக்கட்சிகளின் செல்வாக்கிழப்பையும்; அதனால் ஏற்பட்ட பலவீனத்தையும் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நோக்க முடிகிறது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக் காயங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டுமாயின் தன்மானத்தை இழக்காத, உறுதியான கொள்கைப் பிடிப்போடு கூடிய, தனித்துவமிக்க, பலமான அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என்ற சிந்தனை பெரும் தலைவர்; மறைந்த அஷ்ரப்பிடம் உதித்தது. இந்த உணர்வின் வழியில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி 1982 ஆம் ஆண்டு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, 1986இல் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
அதுவரை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும்; மாற்றுச் சமூகத்திலும் தங்களை சமூகத்தின் அரசியல் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் செய்தவர்கள் அஷ்ரப் எனும் ஆளுமையினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரவையடுத்து அவர்களது செல்வாக்கு குறிப்பாக கிழக்கு அரசியில்வாதிகளின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது.
ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இன்னும் ஓரிரு தேசியக் கட்சிகளினதும் உறுப்பினர்களாக அங்கத்தும் பெற்று, மக்கள் அரசியல் மயப்படுவதை தடுத்துக்கொண்டு, தங்களின்பால் மக்களை இணைத்துக்கொண்டவர்களாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு, சமூகம் தோல்வியுற்று, அவர்;கள் மட்டும் வெற்றிபெற்ற வரலாற்றைக் காண முடிகிறது.
குறிப்பாக, வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரவு இவர்களின் இவ்வாறான சித்த விளையாட்டுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலினூடாக 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட அஷ்ரப் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்லின்போது 7 ஆசனங்களைப் பெற்று இந்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தியை அன்றைய பிரதமராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கு வழங்கினார். ஆட்சி மாற்றத்திற்கு அவர் வழி நின்றார்.
முஸ்லிம்கள் அரசியல் மயப்படுத்தப்படாத, நொந்துகெட்ட சமூகமாக இருந்து, ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்களித்து அவ்வாக்குகளினால் வெற்றிபெறுபவர்கள் தங்களது தனிநபர் நலன்களை அடைந்துகொள்வதற்கான பகடைக்காய்களாக மக்களைப் பயன்படுத்தினர். குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் இந்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி பெற்றிருந்தும் அந்த வாக்குச் சக்தியை ஒன்றுதிரண்டக் கூடிய ஒரு தலைமைத்துவம் அஷ்ரப் எனும் ஆளுமை முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கும் வரை உதயமாகவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அஷ்ரப்பின் ஆரோக்கியமிக்க அரசியல் பயணம் தென்னிலங்கையில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆளுமையும் அரசியல் எதிர்கால வியூக சிந்தனையும் நிறைந்த அத்தலைவரின் அரசியல் பயணத்தின் வெற்றி ஒளி இலங்கை முழுதும் பிரகாசிக்கத் தொடங்கியதன் விளைவு அவரை நோக்கிய கருத்துவாதங்களை அதிகரிக்கச் செய்தது.
சமூக நலன்கொண்டும் நாட்டின் நலன் கருதியும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கூக்குரல்களை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் சில்லறை முஸ்லிம் அரசியல் நபர்களைக்கொண்டே முன்னெடுக்கச் செய்யப்பட்டன. அதன் முடிவு 2000ஆம் ஆண்டில் ஹெலிக்கெப்டர்; விபத்தினூடாக முஸ்லிம் சமூகத்திற்கான அவரது குரல் மௌனமாக்கப்பட்டது.
அவரது மரணத்தின் பின்னர் ஏற்பட்ட பிளவுகளினால் உருவான கட்சிகள் தங்களது பிராந்திய அரசியலுக்கு முன்னுரிமை வழங்கியும் செயற்பட ஆரம்பித்தன. இதனால் முஸ்லிம் அரசியல் தேசிய ரீதியில் பலவீனமடைந்தது. முஸ்லிம் அரசியலின் பலவீனம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பலமாக அமைந்தது. தற்போது முஸ்லிம்களின் மூக்கின் நுனிவரை இனவாதம் வந்து நிற்கிறது.
முஸ்லிம்களை மாத்திரமின்றி, இந்நாட்டில் வாழும் சிறுபான்;மை சமூகமான தமிழ் மக்கள் மீதும் கடந்த காலங்களில் இனவாதம் அவற்றின் இருப்புக் கரங்களை நீடடியது. அதனால் உருவான இனப்பிரச்சினைக்கும்; அதன் அழிவுகளுக்கும் தீர்வும், நிவாரணமும் கிடைக்கப் பெறாத நிலையில் சிறுபான்மை சமூகங்களின் ஆதரவுடன் 2015ஆம் உருவாக்கப்பட்ட நல்லாட்சி என்ற கூட்டாட்ச்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளன.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காணும் நோக்கோடு அவற்றை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு மாற்றம் அல்லது அரசியலமைப்பு உருவாக்கம் அதற்கான முயற்சிகள, இடைக்கால அறிக்கை இன்று கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். மகாநாயக்கத் தேரர்களை மீறி அரிசியலமைப்பு மாற்றமோ அல்லது புதிய அரசியலமைப்போ உருவாகாது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் நிலைக்கு பேரினவாதம் வந்துள்ளது. இந்நிலையில் அனைத்துத் துறைசார்ந்தவர்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் அரசியலைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைப்பதன் மூலம் அல்லது அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் பலம் பொறுத்திய அரசியல் சக்தியினூடாக எமக்கெதிரான பேரினவாத்தின் முன்னெடுப்புக்களை இராஜதந்தில் ரீதியில் முறியடிக்க முடியும்.
கூட்டுத் தலைமைத்துவம்
கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களின் விளைவு பல இழப்புக்களைச் சந்திக்கச் செய்துள்ளது. இவற்றுக்கெதிரான நடவடிக்கைகளை இராஜதந்திரி ரீதியாகவும,; சாத்வீகமாகவும் முன்னெடுக்க வேண்டுமாயின்;; முஸ்லிம் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்புக்களையும் ஒன்றிணைத்து தலைமைத்துவ சபை அல்லது கூட்டுத் தலைமைத்துவம் உருவாக்கப்படுவது அவசியமாகும். அதற்கான அழைப்புக்களும்; பல்வேறு தரப்புக்களிலிருந்து விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இக்கூட்டுத் தலைமைத்துவம் உருவாக்கப்படுவதற்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியே தற்போதுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு தரப்பட வேண்டுமென் கோரிக்கையை 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும், பிரமருக்கும் கடிதம் எழுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் தலைவிதியை தீர்மாணிக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேiவை எனக் கருதி, மார்க்க அறிஞர்கள், பத்திஜீவிகள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாடடாளர்கள், சமூக அமைப்புக்கள், சமூக் அக்கறையுடையோர், ஊடகவியலாளர்கள் என பல்வேறு துறைசார்ந்தோரையும் உள்ளடக்கியதான கூட்டுத்தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபை உருவாக்கப்பட வேண்டுமெனவும், அத்தலைமைத்துவத்தினூடாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருவதைக் காணமுடிகிறது.
இருப்பினும், கடந்த காலங்களில்; இவ்வாறானதொரு கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் ஊடகவியலாளர்களாலும், சிவில் அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டன. இருந்தபோதிலும். முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஏனைய துறைசார்ந்தோரும் தங்களுக்குள் குறைந்தபட்சம் கொள்கையளவில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அக்காலங்களில் முன்னெடுக்க வில்லை. ஊடக அறிக்கைகளினூடாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிக்கை விட்டார்களே தவிர அவை செயல் வடிவம் பெறவில்லை.
முஸ்லிம்களின் தேசிய மற்றும் பிராந்திய ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சித் தலைமைகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் , மார்க்க அறிஞர்களும் மற்றும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபையை உருவாக்குவார்களாயின், முஸ்லிம்கள் எதிர்நோக்கும்; சமகால மற்றும் எதிர்கால சாவலர்களை சமாளிக்க முடியும். அவ்வாறில்லேயேல் பட்டம், பதவி, பணத்திற்காக ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக்கொண்டும், தங்களது சுகபோக வாழ்க்கைய மாத்திரம் கவனத்திற்கொண்டும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஏனைய துறைசார் வல்லுனர்களும் செயற்படுவார்களேயானால் சமகால முஸ்லிம்கள் மாத்திரமின்றி எதிர்கால சந்ததியினரும் பாரிய சவால்களைச் சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.
-எம்.எம்.ஏ.ஸமட்
No comments:
Post a Comment