ஐக்கிய நாடுகள் சபையின் சகவாழ்வு மற்றும் மேம்பாடு தொடர்பில் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி கீதா சஹர்வால் அவர்கள் அரசாங்க நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை அரசாங்க நிர்வாக அமைச்சில் சென்ற 06 ஆம் திகதி சந்தித்தார். அண்மையில் கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் சம்பந்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் பற்றி இங்கு உரையாடப்பட்டது.
இங்கு அமைச்சர் பேசுகையில், அந்த நேரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தது. அத்துடன் சேதமடைந்த கடைகள் மற்றும் பள்ளிவாசல்களின் மறுசீரமைப்புடன், நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பு இன்னும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று திருமதி கீதாவினால் கேட்கப்பட்ட போது, இன மதம் பாராமல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டம், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவற்கான சகல ஏற்பாடுகளையும் அரசு என்ற வகையில் நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்றும் கூறிய அமைச்சர் அதே போன்று அம்பாறைப் பிரச்சினையிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட போது, நாட்டில் இனவாத சிந்தனையுடன் இருப்பவர்கள் குறித்து எமது அமைச்சு தகவல் எடுத்துக்கொண்டிருப்பதுடன், அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பணியிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார். அதே போன்று இந்நிலைமை எதிர்காலத்திலும் ஏற்படாமலிருக்க சமாதான குழுக்களை உருவாக்குவற்கு அரசு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகள் மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். மீண்டும் அந்த நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment