கரையைக் காணாமல் கரைதல்.. - sonakar.com

Post Top Ad

Friday, 13 April 2018

கரையைக் காணாமல் கரைதல்..


இந்நவீனவுலகில் மனித வாழ்வு இயந்திரமயமாகிவிட்டது. தேவைகளும் அதற்கான தேடல்களும் அதிகரித்துள்ளதன் விளைவாக, ஒவ்வொரு தனிநபரும், குடும்பங்களும்; பல பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகிறது. இதனால், அகப் புற நிம்மதி தொலைந்து எதிர்கால வாழ்வும்; கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.


வாழ்வில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு முறையான வழிகாட்டல்களின் மூலம் தீர்வு காணப்படாத நிலையில,; இப்பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களாகப் பரிணாமம் அடைகின்றன. இவற்றில் சில சமூகப் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. இவ்வாறு உருவாகும்; அல்லது உருவாக்கப்படும் சமூகப் பிரச்சினைகளில் முக்கிய சமூகப் பிரச்சினையாக மாறி வருவது சட்ட ரீதியாக இடம்பெறுகின்ற திருமணப் பிரிவான விவாகரத்தாகும். திருமணம் பல்லாண்டு காலப் பயிர் என்பார்கள். இப்பல்லாண்டு காலப் பயிர் வாடாமல் வளமாக வளர வேண்டுமானால் அது நல்ல போசனையுடன்  வளர்க்கப்பட வேண்டு;ம்.

மணபந்தத்தின் பின்னரான கணவன் - மனைவி என்ற குடும்ப பாத்திரங்கள்;; அக மற்றும் புறக் காரணிகளினால் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படும்போது, அப்பிரச்சினைகள் உரிய வழிகாட்டல் ஆலோசனையின் ஊடாக தீர்க்கப்படாது, தீர்த்துக் கொள்வதற்கான உரிய வழிகாட்டல்களைப் பெற்றுக்; கொள்ளாது அல்லது வழிகாட்டல்கள் வழங்கப்படாது அப்பிரச்சினைகள் உச்சத்தை அடைவதனால் கணவன் - மனைவி என்ற கதாபாத்திரங்கள் விவாகரத்தினால் முறிவடைகிறது.. 

விட்டுக் கொடுப்புக்கள், புரிந்துணர்வுகள், சகிப்புத்தன்மை என்ற சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கான பண்புகள் குடும்பங்களில் பிரதிபலிக்கப்படாத  நிலையில்,  திருமணவாழ்வானது  வாழ்வுக் கடலின் கரைகளைக் காணாது கரைந்து போகின்றன. இதனால், கணவன், மனைவி, மற்றும் பிள்ளைகள்  பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதைக் காணலாம்.

வாழ்க்கைப் பொறுப்பு

தேசத்தினதும் சமூகத்தினதும் சட்ட ஒழுங்கிற்கு ஏற்பவும் சமூக, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை மீறாத வகையிலும்,  சமூக அங்கீகாரத்துடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்படும் வாழ்க்கை ஒப்பதந்தமே திருமணமாகும். இத் திருமண ஒப்பந்தமானது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடாத்துவதற்கு வழியை ஏற்படுத்துகிறது.  

இத்திருமண வாழ்வு பல உயர்ந்த நோக்கங்களையும், அடைவுகளையும்; கொண்டுள்ளது. மன அமைதி, பாலூக்கத்தேவை, மறு உற்பத்தி, சமூகப்பாதுகாப்பு,. பெண்களுக்கான பாதுகாப்பு, மூப்பின்போது உதவி,  நட்புத் தேவை, பெயரையும,; பொருளையும் விட்டுச் செல்லல் என்ற பல நோக்கங்களுடன் திருமணங்கள் அமைய வேண்டும். அந்த நோக்கங்களை அடைவதற்காக கணவனும் மனைவியும் பொறுப்புடன் உழைக்க வேண்டும். ஆனால் சமகாலத்தில் இத்தகைய  அடைவுகள் குடும்ப வாழ்வின் மூலம் கிடைக்கப்பெறுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

திருமணம் செய்வதை அனைத்து மதங்களும் ஊக்குவிக்கின்றன. ஏனெனில், திருமணம் வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல ஒருவரையொருவர் புரிந்து கொள்வது அவசியமாகும். 

அத்தோடு, பரபரப்பும், பயமும், பதற்றமும் நிறைந்த சமூக வாழ்வில் பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்படுவது இயல்பானதே. அவற்றிலிருந்து விடுபட்டு சற்று ஆறுதல் பெற மனிதனுக்கு மிக நெருங்கிய துணையொன்று அவசியம். திருமண வாழ்க்கையின் மூலம் ஒருவருக்கு உடல், உள, சமூக ரீதியான தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. 

கணவணிடம் மனைவியும் மனைவியிடம் கணவணும்  மன அமைதியையும் ஆறுதலையும் பெறவேண்டும் என்பதற்காகவே திருமண பந்தம் வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டு வந்துள்ளது. 

பாலூக்கத்தேவை வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்பதில்லை. அது இளமைக்கால உளக்கிளர்ச்சிகளினால் உந்தப்படுவது. ஆனால,; மன ஆறுதலும், அமைதியும் வாழ்க்கை முழுவதும் தேவையானது. நிம்மதி, மகிழ்ச்சி, உளத்திருப்தி, மன அமைதி என்பன எல்லா மனிதர்களும் எப்போதும் தேடிக்கொண்டிருப்பவை. தனது ரகசியங்களை, துன்பங்களை இன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மனம் விட்டுப் பேசி சுமையை இறக்கிவைப்பதற்கும் மனவாழ்வு களம் அமைக்கின்றது. எனவே குடும்ப வாழ்வின் உண்மையான அடைவு இந்த உள அமைதியே. 

பாலூக்கத்தேவையும் மனித இயல்புகளில் ஒன்று. மனிதனாக  பிறந்த அனைவருக்கும் உரியது. தீர்க்கதரிசிகள், தத்துவஞானிகள், துறவிகள். ஆத்மஞானிகள் யாருமே இதற்கு விதிவிலக்கல்ல.

கட்டிளமைப்பருவத்திலிருந்து முன் முதுமை வரை மனிதனில் சுரக்கும் ஹோர்மோன்கள் பாலூக்கத்தை தருகின்றன. மனிதன் எதிர்ப்பால் கவர்ச்சிக்கு உள்ளாகின்றான். மனித உடலின் அடிப்படைத்தேவைகளில் பசியும் காம உணர்வும் முக்கியமானவை. இவ்வுணர்வுத் தேவையை நாகரிகமான முறையில் பூர்த்தி செய்வதற்கான  ஓர் ஏற்பாடாகவே திருமண வாழ்வு அமைந்துள்ளது. மிருகங்கள் போன்று கட்டற்றவகையில் மனிதன் இவ்வுணர்வை ஈடு செய்ய முற்பட்டால் பெரும் சமூக சீர்குலைவும் மனமாட்டு சிதைவும் ஏற்படும். அவற்றின் வெளிப்பாடாகவே சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அரங்கேற்றப்படுவதாகும். 

இவ்விழிநிலையானது தற்போது மேற்குல நாடுகளை வியாபித்து குடும்ப உறவுகளைச் சிதைந்துள்ளன. நாகரீகம் என்ற பெயரில் அந்நாடுகளில் அநாகரியங்கள் மலிந்து கிடக்கின்றன. அவ்வாறு அந்நாடுகளில் மலிந்து கிடைக்கும் அநாகரீயங்களை நம்நாட்டுக்குள்ளும் இறக்குமதி செய்து மத, கலாசார விழுமிங்களுக்கு ஏற்ப வாழும் மக்கள் மத்தியில் அவற்றை அறிமுகப்படுத்த சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள் நவீன தகவல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முனைகின்றனர்.

அத்தகைய ஒரு சில நடவடிக்கைள் நமது பிரதேசங்களிலும் பகிரங்கப்படுத்தப்படாது ரகசியமாக இடம்பெறுகின்றன. காலத்திற்குக் காலம் அங்கங்கே இடம்பெறுகின்ற அசிங்கமான சமுதாயச் சாக்கடைச் சம்பவங்கள் அவற்றைப்புடம்போட்டுக் காட்டுகின்றன.

மணவாழ்வும் குடும்ப அமைப்பும் தீமைகளிலிருந்து சமூகத்தை பாதுகாப்பதற்கான ஒரு காம்பரண் ஆகும். பாலூக்கத்தை ஒழுங்குபடுத்தப்படாத வகையில் அல்லது மனம் போன போக்கில் ஈடுசெய்ய முற்பட்டால் அறமும், ஒழுக்கமும் கேள்விக்குள்ளாகிவிடும். சமூகம் கீழ்த்தரமான நிலையிலிருந்து தன்னை விடுவித்து  உயர் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டுமாயின் அங்கு உயர்ந்த இலட்சியங்கள் வேண்டும். மிருக உணர்வுகள் நெறிப்படுத்தப்பட வேண்டும். குடும்ப உறவில் விரிசல் ஏற்படுவதற்கும் அவ்விரிசல் ஆனாது திருமணபந்தத்தை முறிக்கும்  விவகாரத்துக்கு கொண்டு செல்வதற்கும் உணர்வுகள் நெறிப்படுத்தப்படாமையே காரணாக அமைகிறது.

சமகாலமும் விவகாரத்துக்களும் 

நியாயமானதும் நியாமற்றதுமான பிரச்சினைகள் கணவன்-மனைவிக்கு இடையிலான உரசல்களை ஏற்படுத்துகிறது. இந்த உரசல்களின்; உச்ச கட்டம்தான் விவாகரத்து. தீர்வுகள் எதுவுமே கைகொடுக்காத நிலையில். விவாகரத்தானது சட்ட ரீதியான தீர்வாக அமைகிறது. இந்த சட்ட ரீதியான தீர்வுக்குச் செல்வதற்கு ; கணவன் - மனைவியிடையே காணப்படுகின்ற பல விடயங்கள் காரணமாக அமைகிறது.

பொதுவாக, கணவனிடம்  மனைவிக்கும் மனைவிடம் கணவனுக்கும் இருக்கும் அதீத எதிர்பார்ப்புக்கள், பரஸ்பரம் ஆசைகள், தேவைகளைப் புரிந்து கொள்ளாமை, ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒருவரையொருவர் கட்டாயப்படுத்துதல், ஒருவரை ஒருவர் அடக்கி ஆள முனைதல், இருவரும் நேர் எதிரான பழக்க வழக்கங்களைக் கொண்டிருத்தல், உறவுகள் ரீதியிலான சந்தேகங்கள் என பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்ற தொடர் நச்சரிப்புக்கள் திருமண பந்தத்தின் இலக்குகளையும், அடைவுகளையும் இல்லாமல் செய்கிறது.

அத்தோடு, கணவனின் வருமானக் குறைவால் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதா நெருக்கடி, கணவன் அல்லது மனவியினது பாலியல் உறவிலுள்ள பிரச்சினை அல்லது திருப்தி காணாமை, இருவரில் ஒருவர் தீராத நோய்க்கு உட்படல் மற்றும் உடலியல் பிரச்சினை, கணவனின் மது மற்றும் போதைப் பொருள் பாவனை என்ற இதர காரணங்களும்  விவாகரத்து என்ற மேடையில் குடும்ப வாழ்வை முடிவுக்கு கொண்டு வருகிறது. 

இவ்வாறான நிலையில், நவீன தகவல் தொடர்பாடல் பாவனையும்  உலகளாவிய ரீதியில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமாகவுள்ளன. குறிப்பாக உலகம் முழுவதும் நடக்கும் மூன்றில் ஒரு விவாகரத்துக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்தான் காரணமென தெரியவந்;துள்ளது. 

பேஸ்புக் பாவனையின் ஊடாக கணவன் அல்லது மனைவி வேண்டாத உறவுகளைப் பேணிக் கொள்வதாகவும், இவ்விருவரில் ஒருவரின் வேண்டத்தகாத தொடர்புகள்   கணவன் அல்லது மனைவியினால் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இதன்விளைவாக இருவருக்குள்ளும் பிரச்சினைகள் முற்றி விவாகரத்து என்ற நிலைக்கு வருவதாகவும் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பேஸ்புக் சாட்சியங்கள் இடம்பெறுவதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகவுள்ளது. ஏனெனில் இந்த சமூகவலைத்தளங்களினூடாக ஏற்படும் அவசிமற்ற, அசிங்கமான ஆண் பெண் உறவுகள் பல சிக்கல்களை குடும்பங்களுக்குள் ஏற்படுத்தி வருவதை நம்நாட்டிலும் காண முடிகிறது. 

தினமும் நூற்றுக்கணக்கானோர் மணப்பந்தலில் இணைகி;ன்றனர். இவ்வாறு திருமண பந்தத்தில் இணைவோரில் விவாகரத்து மேடைக்குச் செல்வோர் இளவயதில் மணபந்தத்தில் இணைந்தவர்களாக உள்ளதை புள்ளிவிபரத்தரவுகள் குறிப்பிடுகின்றன. 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் திருமணம் முடித்து 3 முதல் 5 வருடங்களுக்குள் மணமுறிவுக்கு உட்பட்டு விவாகரத்துக்காக விண்ணப்பிப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 300 முதல் 400 வரையிலான விவாகரத்துக்கள் இடம்பெறுவதாகவும் ஆய்வுகள சுட்டிக்காடடுகன்றன.

இவ்வாய்வுக் கணிப்பீட்டின் பிரகாரம், திருமணம் முடித்த 45 வீதமான பெண்கள் விவாகரத்துப் பெற்றுள்ளதாகவும்  கணவனின் குடிப்பழக்கம், பாலியல் தொந்தரவு, மாமியார் மருமகள் சண்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அழுத்தம் என்பன விவகாரத்திற்கான காரணம் எனவும் அறியப்பட்டுள்ளது. 

குடந்த வருட ஆய்வொன்றின் பிரகாரம், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான 58 சதவீதமான விவாகரத்துக்கள் பதிவாகியுள்ளது. விவாகரத்துப் பெற்றவர்களில் 58 சதவீதமான பெண்கள் காதலித்து திருமணம் முடித்தவர்கள் என்றும் ஒன்று தொடக்கம் மூன்று வருட காலத்திற்குள் இவர்கள் விவாகரத்துப் பெற்றுள்ளதாகவும் அவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது. சிறிய காலம் காதல் தொடர்பைப் பேணி திருமணம் முடித்த பெண்கள் அதிகம் விவாகரத்துப் பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளப்படும்; நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளால் இவ்வாறு விவாகரத்துக்களை அதிகரிக்கச் செய்திருப்பதானது வழிகாட்டல் மற்றும் உளவள ஆலோசனைகளின்; அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது எனபது சகல தரப்பினராலும் உணரப்படுவது அவசியமென்பதுடன் அதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். 

விளைவுகளும் வழிகாட்டலும்

நீண்ட கால வாழ்வின் அர்தத்தத்தையும், எதிர்காலத்தையும் உதாசீனம் செய்துவிட்டு குடும்ப வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை வழிகாட்டல்களினூடாக தீர்த்துக்கொள்ள முயற்சிக்காது விவாகரத்து மேடைக்குச் சென்று விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதனால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடல்,உள, சமூகப் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.

இவர்கள் கவலைகளை மறப்பதற்காக சிகரட், மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைகின்றனர், இதனால் உடல் நோய்களுக்கு உள்ளாகுவதோடு உள ரீதியான பாதிப்புக்களுக்கும் ஆளாகின்றனர்.

விரக்தி, ஒதுங்கி வாழுதல், உணவில் நாட்டமின்மை, தற்கொலை முயற்சி, தற்கொலை புரிதல், தவறான பாலியல் பழக்க வழக்கங்கள், திருமணத்திற்கு அப்பாலான தொடர்புகள், நட்புக்கள், உறவுகள் ஏற்படல் போன்ற உடல், உள சமூகப் பிரச்சினைளை விவகாரத்துப் பெற்றவர்கள் எதிர்நோக்குவதாக ஆய்வுகளின் அதிர்ச்சித் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதனால் அதன் தாக்கம் பிள்ளைகளையும் பாதிக்கிறது. பிள்ளகைளின் வளர்ச்சி, எதிர்காலத்திற்கான பாதுகாப்பு, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுதல், கல்வியைத் தொடர முடியாது இடைவிலகுதல், பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உடல், உள, சமூகப் பிரச்சினைகள் பிள்ளைகளையும் தாக்குகின்றன.

இவ்வாறு முறையான  புரிதல் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் விவாகரத்துக் சென்று, அதன் மூலம் ஏற்படுகின்ற உடல், உள சமூகத் தாக்கங்களை தவிர்க்க வேண்டுமாயின் 
பிரச்சினைகள் ஏற்படும்போது அறிவு ரீதியாக தீர்மானம் எடுத்து , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ முற்படுதல் அவசியமாகும். இதன் மூலம் குடும்ப வாழ்வு பிரிவை நாடாமல் மகிழ்ச்சியுடன் இணைந்து வாழ்வதற்னா நகர்வை முன்னெடுக்க வழிபிறக்கும்.

பிரிவுகள் அற்ற மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கான மனப்பாங்குகள் குடும்பங்களில் ஏற்படுத்தப்படுவது அவசியம். திருமணங்கள் நடைபெறுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது, குடும்ப வாழ்க்கையில் இடம்பெறும்; பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்படுவது அவசியமென்பதை சமகால விவாகரத்துக்களின் அதிகரிப்பு வலியுறுத்துகிறது. 

அதற்காக முறையான குடும்ப ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும். அனுபவமும், ஆற்றலும் வினைத்திறனுமிக்க  தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களின சேவைகள் உரிய தரப்பினால் பெற்றுக்கொள்ளப்படுவது முக்கியமாகும்.


கடதாசித் தகைமைச் சான்றிதழ்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக ஆற்றலும் அனுபவமும் சேவை மனப்பாங்கும் வினைத்திறனும் அற்றவர்களை உளவளத்துணை சேவைக்காக நியமிப்பதிலும் பார்க்க, இத்துறையில் சிறந்த சேவை மனப்பாங்குடன் பணிபுரிந்து  விவாகரத்துப் போன்ற சமூகப் பிரச்சினைகளை சமூகத்தின் மத்தியில் குறைப்பதற்கு ஆக்கமும், ஊக்கமும், ஆலோசனைத் திறன், நுட்பங்களைக்; கொண்டவர்கள் இந்த வழிகாட்டல் உளவள ஆலோசனை சேவையில் அமர்த்தப்படுவது அவசியமாகும்.

இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைள் அரசாங்கத்தினாலும,; தன்னார்வு அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்படுவதும், சமூகப் பிரஜைகள் மத்தியில் சிறந்த மனப்பாங்குகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் சமூகப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு அல்லது அவற்றை முற்றாக ஒழிப்பதற்கு வேண்டிய பணிகள் துரிதப்படுத்தப்படுவதும் ஆரோக்கியமான எதிர்கால இலங்கையை உருவாக்க வழிவகுக்கும் என்பதோடு  நிஜ வாழ்வின் கரையைக் காணது கரையும் கசப்பான நிகழ்வுகளையும் தவிர்க்கும் என்பதே நிதர்சனமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment