ஜனாதிபதியின் லண்டன் பயணமும் முஸ்லிம் சமூகத்தின் சலசலப்பும்! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 April 2018

ஜனாதிபதியின் லண்டன் பயணமும் முஸ்லிம் சமூகத்தின் சலசலப்பும்!


இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மூன்றாவது தடவையாக மைத்ரிபால சிறிசேன இவ்வாரம் லண்டன் வந்திருந்தார். மூன்று பயணங்களுமே பொதுநலவாய (Commonwealth) அமைப்பின் மாநாடு நிமித்தமானது.

இருந்தாலும் இம்முறை விஜயம் முஸ்லிம் சமூகத்துக்கிடையில் பலத்த அளவில் பேசு பொருளாகியுள்ளது, காரணம் இங்கு இந்த மண்ணில் அவருக்கு பலத்த எதிர்ப்பொன்று காட்டப்பட வேண்டுமென்கிற ஆர்வமும், நியாயமான ஆசையும் கூட. 



அதிலும் அந்த எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவத்திலே தான் கட்டியாக வேண்டும் என்று விரும்பிய சிலரும் இருந்தார்கள், இவர்களால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் வேறு.

ஜனாதிபதி தங்கியிருந்த இடம் லண்டன் ஹில்டன் ஒன் பார்க் லேன் (Hilton on Park Lane, London) நட்சத்திர ஹோட்டல்.


இக் கட்டிடம் 28 மாடிகளையும் 453 அறைகளையும் கொண்ட 331 அடி உயரமான ஹோட்டல். வழமையாக ஜனாதிபதி தங்கும் அறை மிக உயரத்தில் உள்ள ஒரு மாடியில் உள்ளது. அத்துடன் அதன் அமைவிடம் மற்றும் சுற்றுப் புறத்தை Google வரைபடத்தில் (Google Map) பார்த்தால், வெளியிலிருக்கும் வாகன சத்தம் கூட உள்ளே கேட்காத வகையிலான கட்டிட அமைப்பைக் கண்டு கொள்ளலாம்.

அது ஒரு புறமிருக்க, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்கியிருக்கும் காலம் என்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதை சாதாரணமாகவே ஊகித்துக் கொள்ளலாம். அதையும் விட இவ்வாறான முக்கிய தலைவர்கள் வந்து செல்வதற்கு அந்த ஹோட்டலின் மறுபுறத்தில் உள்ள ஒரு வழியே பயன்படுத்தப்படும். எனவே கட்டிடத்தின் முன் பகுதியில் நடப்பவற்றை யாராவது படம் பிடித்துக் காட்டினால் தான் உண்டு.

மாநாடு நடக்கும் இடத்தில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும். அதில் ஒரு இடத்தில் இலங்கையரும் நின்று கூச்சலிட, அதனைக் கண்ணுறும் ஏனைய நாடுகளின் தலைவர்கள் மைத்ரியை அழைத்து 'என்ன உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்' என கேள்வி கேட்பார்கள், அதற்கு மைத்ரி பதில் இல்லாமல் வெட்கப்படுவார் என்று கூறுவதெல்லாம் நமது உணர்வுமயப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளேயன்றி அங்கு வரும் தலைவர்களுக்கு இது பழகிப் போன விசயம். 

இந்த நிலையில் வருடா வருடம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தோடு பேசவில்லையென்றாலும் உணர்வுமிகுதியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற இடத்தில் அடுத்த சிக்கல் உருவானது.

ஜனாதிபதியின் சந்திப்பை இரண்டு வகையில் பயன்படுத்தலாம். ஒன்று, வழமை போன்று மென்மையான சந்திப்பும் வேண்டுகோள்களும் மனு ஒப்படைப்பும் அல்லது வெளிப்படையாகப் பேசி எங்கள் வாக்குகளால் ஜனாதிபதியான நீங்கள் இப்படி ஏமாற்றி விட்டீர்களே என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பது.

இதில் எதைச் செய்தாலும் மைத்ரிபால சிறிசேனவுக்குரிய கௌரவத்தையும் வழங்கி, இலங்கையிலிருக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் உருவாகாமல் நடந்து கொள்ளும் தார்மீகப் பொறுப்பு ஐக்கிய இராச்சியம் வாழ் முஸ்லிம் சமூகத்துக்கு இருந்தது.



இந்த நிலையிலேயே லண்டன் இலங்கைத் தூதரகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு ஏலவே இரண்டாகப் பிரிந்திருந்த முஸ்லிம் சமூகப் பிரதிநிதித்துவம் இரு வேறு சந்திப்புகளை மேற்கொண்டது. முன்னர் பார்த்தது போன்று இரு வகையிலான அணுகுமுறைகளும் அவசியம் ஆனாலும் அதிலும் நாகரீகமும் கட்டுப்பாடும் அவசியம் என்பதும் உணரப்பட்டு இரு சந்திப்புகள் இடம்பெற்றது.

இப்போது, இந்த சந்திப்புகளில் குறிப்பாக இரண்டாவது சந்திப்பில் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜனாதிபதியிடம் அங்கு கலந்து கொண்ட பிரதிநிதிகள் அடுக்கடுக்காக முன் வைத்த கேள்விகள் அவரை சங்கடப்படுத்தியதோ இல்லையோ பதிலற்ற சூழ்நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள (Defence mode) முஸ்லிம் சமூகத்தின் குறைகளையும் சொல்ல வேண்டிய நபரானார்.

2015ல் அதே ஹோட்டலில் அதே அறையில் எனது தலைமையில் பிரத்யேகமாக முஸ்லிம் சமூகத்தின் வரவேற்பு நிகழ்வொன்றை நடாத்தியிருந்தோம். கடந்த 17ம் திகதி அதே இடத்தில் அன்று அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் தவிடுபொடியாகிப் போய் விட்டனவே என்ற ஆதங்கம் தான் பேசப்படுகிறது. முஸ்லிம்கள் தமது மன வேதனையைத் தான் இங்கு முன் வைக்கிறார்கள் என்பதை இந்த இரண்டாவது சந்திப்பை நெறிப்படுத்தி, ஆரம்ப உரையை முன் வைத்த போது ஜனாதிபதிக்கும் தெளிவு படுத்தியிருந்தேன்.

ஆதலால், சில இடங்களில் ஜனாதிபதி பதிலின்றி மௌனிக்கும் சூழ்நிலை உருவானது, அதற்குப் பகரமாக முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டவும் செய்தார். ஈற்றில், எந்த இன-மத சார்பற்ற நிலையில் சட்ட ஒழுங்கு நிலை நாட்டப்பட்டால் சிங்கள - முஸ்லிம் முறுகல் தணியும் என்பதே முஸ்லிம் சமூகம் முன் வைத்த கோரிக்கைகளின் சாரம்சம்.

இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்ட புத்தகம் எழுதிய சம்பிக்க ரணவக்கவை உங்கள் அமைச்சரவையில் வைத்திருப்பது நியாயமா? என்கிற கேள்வி கூட மிக வெளிப்படையாக முன் வைக்கப்பட்டது. என்டருதன்ன கிராமத்திற்கு வெறும் 80,000 ரூபா தான் இழப்பீடாகப் போய் சேர்ந்திருக்கிறது, ஏன் இந்த ஓர வஞ்சனையென கேட்கப்பட்டது. சாதாரணமான மனிதர்களாக எமது அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அச்சத்துடன் வாழும் சூழ்நிலை என்று தணியும் எனவும் வினவப்பட்டது.

ஒவ்வொரு கேள்வியாகச் சொல்வதை விட, இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு ஜனாதிபதியுடன் நேரடி சந்திப்பொன்று இவ்வாறு அமைந்தால் மனம் திறந்து கேட்க முடியாத பல கேள்விகள் வெளிப்படையாக முன் வைக்கப்பட்டது.

அத்துடன் ஒவ்வொருவர் கேள்வி கேட்ட பின்னும், ஜனாதிபதிக்கு பதில் வழங்கும் அவகாசம் வழங்கப்பட்டது. 

குறிப்பாக மொத்த கலந்துரையாடலையும் சிங்களத்திலேயே நடாத்தி முடிக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் சிங்களத்திலேயே நேரடியாக அனைத்தும் பேசப்பட்டது.

இது, இங்கு வாழும் முஸ்லிம் சமூகம் தாய்நாட்டில் உறவுகள் எதிர்நோக்கும் இன்னல்களுக்காகக் குரல் கொடுத்த மற்றுமொரு சந்தர்ப்பமேயன்றி இத்துடன் முடிவுறப் போவதில்லை.

இந்நிலையில், இதையும் தம் இச்சைக்கேற்ப அலசி, ஏசிப் பேசி பேஸ்புக்கில் காலந்தள்ளுபவர்களையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

2012 முதல் வெளிநாடுகளில் உருவான போராட்டங்கள் அனைத்தும் ஐக்கிய இராச்சியத்திலேயே ஆரம்பமானது, 2014 ஆர்ப்பாட்டங்கள், 2018 ஆர்ப்பாட்டம் கூட இங்கு வாழ்வோர், தாமாகக் கூடி முடிவெடுத்து, தம் சக்திக் கேற்பவும் குறிப்பாக தாய்நாட்டில் வாழும் சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டும் அவதானமாக முன்னெடுத்த செயற்பாடுகளேயன்றி  வேறு எங்கோயிருந்து 'இப்போது' அறிக்கை விட  ஆரம்பித்திருப்பவர்களின் அறிவுரை கேட்டில்லை.


இனியும் அவ்வாறே தொடரப்போகிறது, அதற்கும் அப்பால் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்தாலும் இவர்களும் இலங்கையர்களே. எனவே, நாட்டில் ஒரு சமூகமாக என்னென்ன பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகிறதோ அவை அனைத்தும் இங்கும் உண்டு. அது பள்ளிவாசல் நிர்வாக சபையிலிருந்து ஆரம்பித்து ஜமாத்து பிரிவினை வரை அதே வழிதான்.



வாழும் பூமியின் இடம் மாறியிருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. இன்ஷா அல்லாஹ், பிரிவினைகள் கருத்து முரண்பாடுகள் எந்த அளவு இருந்தாலும் சமூகப் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே செல்லப்படும். ஆதலால்,இந்த புதிய பேச்சாளர்கள் தாம் வாழும் நாடுகளில் அடுத்து செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான பணியை சிந்திப்பதில் நேரத்தை செலவழிப்பது நல்லது.

ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதம், சமூக உரிமைக்காக ஒன்றிணைவோம்.


-இர்பான் இக்பால்,
பிரதம ஆசிரியர், சோனகர்.கொம்

No comments:

Post a Comment