கல்முனை மாநகர சபையும் அ.இ.ம.கா வின் ஆட்டமும் - sonakar.com

Post Top Ad

Monday, 9 April 2018

கல்முனை மாநகர சபையும் அ.இ.ம.கா வின் ஆட்டமும்


கல்முனை மாநகர சபைத்தேர்தல் நடைபெற்ற காலம் தொட்டு அதன் ஆட்சிநிலை தோன்றும் வரை பல்வேறு யூகங்களும் பலத்த போட்டிநிலையும் மாறுபட்ட கருத்துக்களும் பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டு வந்திருப்பது மிக வெளிப்படையானது. அதிலும் குறிப்பாக கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய், வேறு சில ஆபத்துக்களை இங்கு ஏற்படுத்திவிடும் என்கின்ற அச்ச நிலையை கட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் அதிகம் தெரிவித்து வந்திருப்பது இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாகும். 


கல்முனை மாநகர சபையின் எல்லையிலிருந்து பிரிந்து தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றினை முன்னிலைப்படுத்தி அதற்கான மக்கள் ஆதரவு பெருவாரியாக இருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்காக சாய்ந்தமருது மக்கள் ஒரு சுயேட்சைக் குழுவை தேர்தலில் களமிறக்கியிருந்தனர். இந்நிலையானது கல்முனை மாநகர சபையின் ஆட்சி நிலையில் பாரிய பின்னடைவை கொண்டுவரும் என்பதற்கு பலத்த குரல்களை மு.கா.வினர்களும் மற்றும் அவர்களின் நிலையைச் சரிகண்டவர்களும் பரவலாகவும், பகிரங்கமாகவும் பேசி இது வந்தமையும் துலம்பரமானது.

சாய்ந்தமருது மக்கள் களமிறக்கிய சுயேட்சைக்குழுவின் பின்னால் பெரும் மக்கள் திரட்சியாக  ஒன்றிணைந்து காணப்பட்டமை வெளிப்படையாக இருந்தும் குறிப்பாக கல்முனைக்குடி,கல்முனை முஸ்லிம் மக்கள் தங்களைப் பலப்படுத்துவதற்காக அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாத ஒரு போக்கை நாம் பார்க்கலாம். உண்மையில் சாய்ந்தமருது மக்களின் சுயேட்சைக்குழுவால் ஆபத்து என்று சுட்டிக்காட்டுவதற்கு எடுத்துக்கொண்ட பிரயத்தணங்களில் பாதியளவிற்கேனும் முக்கியத்துவம் கொடுத்து கல்முனைக்குடி,கல்முனை முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரளக்கூடிய கடப்பாட்டை பேசுபொருளாக்குவதற்கு பெரிதும் அக்கறை காட்டாத ஒரு பின்னடைவை இங்கு அவதானிக்கக்கூடியதாகவும் இருந்தது.

உண்மையில் கல்முனை மாநகரத்தின் மொத்த பொருளாதார வளத்தில் 90 வீதமான சொந்தக்காரர்களாகக் கல்முனைக்குடி,கல்முனை முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர்.ஆதலால், இம்மாநகர எல்லையினுள் வாழ்கின்ற ஏனைய முஸ்லிம் மக்களை விட இந்நகரத்தை பாதுகாப்பதிலும் அரசியல் ஸ்திரத்தை இங்கு நிலைநாட்டுவதிலும் அவர்களுக்கு பாரிய பொறுப்பு இருப்பது இன்றியமையாதது. அதற்காக வேண்டி இங்கு வாழ்கின்ற ஏனைய பிரதேச முஸ்லிம் மக்கள் இம்மாநகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் கட்டுடைப்பு செய்யலாம் என்று அர்த்தப்படுத்தலாகாது. 

நமது நாட்டைப்பொறுத்தவரை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்டும், அதிக பொருளாதார வளங்களைக் கொண்டும் திகழக்கூடிய ஒரேயொரு மாநகர அந்தஸ்துடைய பிரதேசமாக கல்முனை மாநகர் அமைந்திருக்கின்றது. ஆதலால், இம்மாநகரத்தின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களுடைய கைகளில் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கோ வேறு அபிப்பிராயங்களை தோற்றுவிப்பதற்கோ கிஞ்சிற்றும் இடமில்லை. 

இந்த பொறுப்புணர்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை அமையாது என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து சொல்லி வந்தும், நடைமுறை ரீதியாகவும், கடந்த உள்ளூராட்சி தேர்தலின் ஊடாக நிரூபிக்கப்பட்டிருப்பதினால் அந்த விவகாரம் மேற்சொன்ன கோட்பாட்டிலிருந்து விதிவிலக்கைப் பெறுவதையும் நாம் பார்க்கின்றோம். 

அதேநேரம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கல்முனைத் தொகுதி என்ற அடிப்படையில் சாய்ந்தமருது மக்கள் இவர்களோடு ஒட்டி வாழ்வதை உறுதிப்படுத்துகின்ற ஒன்றாகவும் அதற்கெதிரான எந்த முன்னீடுகளையும் சாய்ந்தமருது மக்கள் முன்வைக்கவில்லை என்பதினாலும் கல்முனையின் பாதுகாப்பு தொடர்பில் அம்மக்களுக்கு அதிக கரிசணை இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. 

கடந்த 2018 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது கல்முனைக்குடி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் வாழக்கூடிய முஸ்லிம் வாக்காளர்களிலிருந்து 13,783பேர் பிரதானமாக இரு கட்சிகள்  நோக்கி வாக்களித்திருந்தனர். இவர்களுள் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு 9,493பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 3,585பேரும் வாக்களித்திருந்தனர். இது சாய்ந்தமருது மக்கள் ஓரணியில் திரண்டதற்கு ஒப்பாக கல்முனைக்குடி, கல்முனை முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவதில் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது.

இந்த நிலைக்கு மூன்று காரணங்களை நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட முடியும். ஒன்று, கட்சி பேதங்களுக்கு அப்பால் இத்தேர்தலை எதிர்கொண்ட சூழலை கருத்திலெடுத்து ஏதாவது ஒரு கட்சியின் மீது முழுமையாக வாக்குகளை செலுத்த வேண்டுமென்கின்ற உணர்வில் கட்டுப்படாத ஓர் நிலைமை. இரண்டாவது, சாய்ந்தமருது மக்கள் கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து சென்றாலும் அவர்களின் தயவில்லாமலும் எம்மால் கல்முனை மாநகரத்தை பாதுகாக்க முடியும் என்கின்ற திடத்தை அம்மக்கள் திடகாத்திரமாக உறுதிசெய்து கொள்ளாத ஒருநிலைமை. மூன்று, தனிப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக மக்களை பல்வேறு கட்சிகளின்பால் செயற்படுவதற்கு ஊக்கமளித்த அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள் மேற்கிளம்பிக் காணப்பட்டமை.

1989களில் இருந்து இதுகாலவரை கல்முனைக்குடி, கல்முனை முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி என்ற வகையில் உருவான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் பெரிதும் நம்பிக்கை வைத்து அம்மக்கள் ஆதரித்து வந்திருக்கின்ற ஒரு நிலைப்பாடு இருந்து வந்திருக்கின்றது. அந்த அடிப்படையில் தாய்க் கட்சியான மு.கா.விற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கட்சிகளை ஆதரித்துக்கொள்கின்ற ஒரு மனோநிலைக்குள் அம்மக்கள் இருந்து வந்திருந்தாலும் அது ஒரு ஜனநாயக அரசியல் பண்பாக இருந்தபோதிலும், நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் காணப்பட்ட சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் மீதான வாக்குச்சரிவை ஈடுகொடுக்கும் வகையில் அம்மக்கள் ஒன்றில் மு.காவை ஆதரித்திருக்க வேண்டும் அல்லது கூட்டுமொத்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரித்திருக்க வேண்டும். 

இவ்வாறான நிலைப்பாட்டை இங்கு ஏற்படுத்துவதற்கு இவ்விரு கட்சி அரசியல் பிரதிநிதிகளும் முயற்சிகளை சரியாக முன்னெடுக்கவில்லை. இது கல்முனைக்குடி, கல்முனை முஸ்லிம் மக்கள் மீது ஏனைய மக்களின் சுமைகளைச் சுமக்க வேண்டிய பொறுப்பு கல்முனை மக்களிடம் மேலதிகமாக சுமத்தப்பட்டது என்று சிந்திக்க மக்களை தூண்டியவர்கள் கூட சரி,பிழைகளுக்கு அப்பால் ஒரு கட்சியின் மீதே கூட்டுமொத்தமான வாக்குகளை செலுத்த வேண்டிய நேரம் இது என்பதை அவர்கள் உணர்த்தத்தவறி இருக்கின்றனர். இம்மக்களும் உணரத் தவறி இருக்கின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை கல்முனை மாநகர சபையில் போட்டியிடுகின்ற உரிமை அவர்களுக்கு இல்லை என்று யாரும் குறிப்பிட முடியாது.  என்றாலும், அவர்கள் சாய்ந்தமருது மக்களின் உணர்வை மதித்து அங்கு களவேட்பாளர்களை நிறுத்தாது விட்டிருக்கிறார்கள் என்றால், ஒரு முன்மாதிரியான அரசியலை இங்கு செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள் என்பதை அது எடுத்துக்காட்டுகின்றது. இந்த அடிப்படையில் சாய்ந்தமருது மக்கள் மீது கொண்டிருக்கின்ற கரிசணை, கல்முனைக்குடி, கல்முனை முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். இதற்கு மாறான போக்கு என்பது  ஒரு மக்கள் மீது அவர்கள் செலுத்திய நீதியை இன்னொரு சாரார் மீது பிழையாக பிரயோகித்தனர் அல்லது அதனைச் செய்வதற்கு முன்வரவில்லை என்பதையே காட்டி நிற்கும். இது ஒரு இயற்கைக் கோட்பாட்டை மீறிய செயல் ஆகாதா?

தேர்தல் காலங்களில் பிரசாரம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சாய்ந்தமருது மக்கள் பிரிந்து செல்வதினால் கல்முனைக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனை ஏற்படுத்துவதற்கு தாங்கள் தயாரில்லை என்று பிரசாரம் செய்த்தை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியான உணர்வில் உண்மைத் தன்மை இருந்தால் சாய்ந்தமருது மக்களின் உண்ர்வை மதித்து அங்கு கள வேட்பாளர்களை தவிர்க்காது அவர் தமது கட்சியை போட்டி நிலைமைக்கு நிறுத்தியிருக்க வேண்டும். 

அவ்வாறு செய்யாது கல்முனைக்குடி, கல்முனை முஸ்லிம் மக்களுக்குள் ஒன்றுபடுதல் தேவையாக இருந்த அந்த சூழலில் தமது சுயநல அரசியலுக்காக அம்மக்களை பிரித்தாளுவதற்கு தேர்தல் களத்தை உருவாக்கியமை, அம்மக்கள் மீது பற்றிருப்பதுபோல் காட்டி, சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு பிரச்சினை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டது ஒரு முரண் நிலையான கூற்றாக அமைவதோடு ஓரவஞ்சனையான செயலியக்கமாக அமையக்கூடியது.

எது எவ்வாறிருந்தாலும், தேர்தலை எதிர்கொண்டு வெற்றியடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன் பெறுபேறுகள் வெளிப்பட்ட அன்றே எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இல்லாமல் கல்முனை, கல்முனைக்குடியின் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து நாம் இங்கு அதிக ஆசனங்களை பெற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியை நிறுவுவதற்கு தமது ஆதரவை நல்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என அறிவித்திருக்க வேண்டும். அதையாவது அவர் செய்தாரா? செய்யவில்லை என்பது மிக வெளிப்படையானது.

இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் யாதென்றால், சாய்ந்தமருது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்த்துபோல் கல்முனை, கல்முனைக்குடி மக்களுக்கு மதிப்பளித்து தேர்தலில் கள வேட்பாளர்களை நிறுத்தாது விட்டிருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முன்னிலையாகக் கொண்ட  ஐக்கிய தேசியக் கட்சி கல்முனையில் 21,009 வாக்குகளை பெற்றிருக்கும். அதேநேரம் வட்டார அடிப்படையில் 10 ஆசனங்களையும், நியமன அடிப்படையில் நான்கு ஆசனங்களுமாக மொத்தம் 14 ஆசனங்களை பெற்றிருப்பதுடன் இங்கு தொங்கு உறுப்பினராக ஒருவர் அதிகரிக்கப்பட்டமையும் நடைபெற்றிருக்காது. 

இது இன்னும் இந்த மக்களின் உறுதித்தன்மையை அதாவது, எமது கல்முனை மண்ணை நாம் பாதுகாக்க முடியும் என்ற உணர்வை மேலோங்கச் செய்திருக்கும். இந்நிலையை உருவாக்குவதற்குக்கூட அமைச்சர் ரிஷாட் எந்த முனைப்பையும் செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, வெந்த புண்ணில் வேள் பாய்ச்சுவதுபோல் அம்மக்களின் மனதில் ஒரு பீதியை கிளப்புவதற்கும் சாய்ந்தமருது மக்களின் எழுச்சியை கொச்சைப்படுத்துவதற்கும் வழிசெய்யும் தோரணையில் அவர் நடந்துகொண்டார். இப்படி சுட்டுவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. 

கடந்த 02.04.2018 பிற்பகல் 02.30மணிக்கு கல்முனை மாநகர சபையின் முதல் அமர்வு நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அமர்வுக்கு முதல் நாள் இரவு அம்பாரை மாவட்டத்திற்கு அமைச்சர் ரிஷாட் விஜயம் செய்து அடுத்தநாள் அமையப்போகும் கல்முனை மாநகர சபையின் ஆட்சி நிலை முஸ்லிம் காங்கிரஸினுடையதாக அமையக்கூடாது என்பதற்காக சில எத்தனங்களில் ஈடுபட்டதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. செய்திகளில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதற்கப்பால் இந்த முதலாம் திகதிய அவரது வருகை இங்கு ஒரு பரபரப்பையும் சந்தேகங்களையும் கிளப்பக்கூடியதாக அமையக்கூடியது என்பது மிகத் திட்டவட்டமானது. 


ஏனெனில், சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர்கள் ஒரு விடயத்தை தெளிவாக தேர்தலின்போதும், தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்னரும் சொல்லியிருந்தனர். “ நாம் கல்முனை மாநகர சபையில் எந்தவிதமான ஆட்சி அதிகாரங்களையும் எடுப்பதுமில்லை; நாம் எந்தக் கட்சிகளுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்துவதும் இல்லை” என்பதை உறுதியாக சொல்லியிருந்த நிலையிலும் 02ஆம் திகதி நடைபெறும் கல்முனை மாநகர சபையின் முதல் அமர்வை சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர் பகிஷ்கரிக்க வேண்டும் என்கின்ற ஒரு கருத்தாடலும் வெகுவாக வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சார் ரிஷாட்டின் வருகை சந்தேகத்தையும், அரசியல் காய் நகர்த்தலையும் கொண்டதாக அமையக்கூடியது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர் யாருக்கும் ஆதரவில்லை என்ற கருத்தோ , முதல் அமர்வை பகிஷ்கரித்தல் என்பதோ கல்முனை மாநகர சபையில் முஸ்லிம்களுடைய ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு நூறு வீதம் சாதகத்தன்மையைக் கொண்டதாகும். இதற்கமைய முஸ்லிம் முதல்வர் தெரிவை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துக்கொண்டிருந்த நிலையில், சுயேட்சைக்குழுவை இணைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை தொடுப்பதற்கு முற்பட்டமையானது கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. 

சாய்ந்தமருது மக்கள் ஏலவே கல்முனை மாநகர சபை ஆட்சி அதிகாரங்களில் பங்கெடுப்பதில்லை என்று அறிவிப்பு செய்திருந்த நியாயத்தை கொலை செய்து, வெறும் அரசியல் அதிகாரத்தின் எதிர்பார்ப்பிலும், மு.கா.வினது அரசியல் அதிகாரத்தை மட்டும் உடைப்பதற்கும் கங்கணம்கட்டி செயற்பட்டவர்கள் போல் சாய்ந்தமருது மக்களை ஆக்குவதற்கு அமைச்சர் ரிஷாட் எடுத்துக்கொண்ட முயற்சியாகவும் இதனைப் பார்க்கலாம். 

அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வென்ற உறுப்பினர்கள் மனசாட்சிப்படி கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு அங்கு அதிக ஆசனங்களைப் பெற்ற மு.கா.வினர்களுக்கே தமது பங்களிப்பை செய்ய வேண்டும். அதுதான் நீதியான செயல். அதனால்தான் இறுதியில் இதனை அவர்கள் செய்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினரின் உறுதியான கருத்துப்பிடிப்பும், அதன் நிமித்தம் கைக்கொள்ளப்பட்ட முதல் அமர்வின் பகிஷ்கரிப்புமே

கட்சிப் போட்டித்தன்மைகள் எவ்வாறிருந்தாலும் முஸ்லிம் கட்சிகளின் உருவாக்கம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் சிதைத்துவிடாத செயற்பாடுகள் இன்றியமையாதவை. அந்த வகையில் பார்க்கின்றபோது கல்முனை மாநகர சபை விடயத்தில், கல்முனைக்குடி, கல்முனை முஸ்லிம் மக்களின் உணர்வை மதிப்பதில், அதற்கு இசைவாக நடந்துகொள்வதில் ஆரம்பம் முதல் சாதகத்தன்மையைக் காட்டாத ஒரு கட்சியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காணப்படுகின்றது. கல்முனை மாநகர சபை ஆட்சி நிலையில் அமைச்சர் ரிஷாட்டின் செயற்பாட்டை ஏற்படுத்தியதை விமர்சிப்பதற்கும், கண்டிப்பதற்கும், கேள்விக்குட்படுத்துவதற்கும்  நமது மக்கள் என்றும் தயங்கக்கூடாது.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

No comments:

Post a Comment